அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ணத் தொடருக்காக சர்வதேச அணிகள் தயாராகி வரும் நிலையில், தற்போது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில் இந்தியா அணியில் உபாதைக் காரணமாக அணியிலிருந்து வெளியேறிய முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ராவுக்கு பதிலாக, மொஹமட் ஷமி அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
அதேபோல பாகிஸ்தான் அணியில், காயத்தில் இருந்து போதுமான அளவு மீளத் தவறிய உஸ்மான் காதிருக்குப் பதிலாக காத்திருப்புப் பட்டியலில் இருந்த ஃபகஹர் ஸமானை 15 பேர் கொண்ட அணியில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இணைத்துள்ளது.
உலகக்கிண்ணத் தொடருக்கான 15 பேர் கொண்ட பங்களாதேஷ் அணியில் சௌமியா சர்க்கார் மற்றும் ஷோரிபுல் இஸ்லாம் ஆகியோரை பங்களாதேஷ் சேர்த்துள்ளது.
சபீர் ரஹ்மான் மற்றும் முகமது சைஃபுதீன் ஆகியோரின் செயல்திறனில் அணி நிர்வாகம் மகிழ்ச்சியடையாததால், இருவரும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ணத் தொடர், நாளை தகுதிச் சுற்றுப் போட்டிகளுடன் ஆரம்பமாகின்றது. 45 போட்டிகள் நடைபெறும் இத்தொடர், நவம்பர் 13ஆம் திகதி நிறைவுப் பெறுகின்றது.