நுவரெலியா, கந்தப்பளை, இராகலை, உடப்புஸ்ஸலாவை ஆகிய பிரதேசங்களில் பெய்து வரும் அடைமழை காரணமாக பிரதேச மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இடைவிடாது பெய்து வரும் மழை காரணமாக பெருந்தோட்டங்களில் தொழில் செய்யும் தொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிரதான வீதிகளில் ஆங்காங்கே மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.மேலும் பணி புகை மூட்டம் காரணமாக பிரதான வீதிகளில் வாகனங்களை செலுத்த சாரதிகள் அசௌகரிகங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பாரிய மண்மேடுகள், மற்றும் ஆற்று ஓரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளில் வசிப்போர்கள் அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ பணியகம் எச்சரிக்கை விடுத்திருப்பது பணியகத்தின் கள பணிப்பாளர் ரஞ்சித் அலககோன் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் மண்சரிவுகள் அபாயம் ஏற்படக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டால் அது தொடர்பில் பிரதேச மக்கள் அவ்வப்பகுதி கிராம சேவகர்களின் கவனத்திற்கு அறிவிக்குமாறும் இடர் முகாமைத்துவ பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.