பள்ளிவாசலில் மசூரா மூலம் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டிய கருத்து முரண்பாடுகளுடன் கூடிய பிரச்சினையொன்று பன்சலை வரை சென்று தற்காலிகமாக சமாதானம் செய்து வைக்கப்பட்டுள்ளது.’
இப்பள்ளிவாசலின் பிரச்சினை ஏற்கனவே வக்பு சபையில் முறையிடப்பட்டு தற்போது விசாரணையின் கீழ் உள்ளது.
கிந்தோட்ட கடற்கரைக்கு அண்மையிலுள்ள அவ்லியா மலைப்பள்ளியின் பிரச்சினையே கிந்தோட்டை துன்மஹல் விகாரை வரை சென்றுள்ளது. துன்மஹல் விகாரை அதிபதி வீரகெட்டிய சஞ்சய தேரர் பள்ளிவாசலில் முரண்பட்டுக்கொண்ட இரு தரப்பினரையும் அழைத்து பிரச்சினை தொடர்பில் விசாரணை நடாத்தி இரு தரப்பினருக்கும் ஆலோசனை வழங்கினார்.
எனினும் இந்த முரண்பாடுகள் பள்ளிவாசல் சம்பிரதாய முஸ்லிம்களுக்கும் பள்ளிவாசல் நிர்வாக சபையில் அங்கம் வகிக்கும் இளைஞர்களுக்கும் இடையிலான கொள்கை ரீதியான பிரச்சினை அல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விவகாரம் தொடர்பில் கிந்தோட்டை அவ்லியாமலை பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் தெரிவிக்கையில்,
‘இப்பிரச்சினைக்கு காரணமானவர்கள் ஒரு குடும்பத்தினராவர். இவர்கள் அயல் பிரதேசத்தவர்களாவர். இவர்கள் பிரதேச தக்கியாக்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள்.
இவர்கள் அவ்லியா மலைப் பள்ளிவாசலுக்கு வந்து தமது சமய வழிபாடுகளை நடாத்துவதற்கு அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கு கிழமைக்கு ஒரு நாள் அனுமதி வழங்கப்பட்டது. பின்பு அதனை கிழமைக்கு இரண்டு தினங்களாக அதிகரித்துக் கொண்டார்கள். ஒவ்வொரு மாதமும் கொடியேற்றுவார்கள். இதனால் முரண்பாடுகள் ஏற்பட்டன. பிணக்குகள் பல தடவைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. காலி பொலிஸில் பல தடவைகள் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளன.
இந்தக் குழுவின் தலைவரது நண்பர் ஒருவர் வீரகெட்டிய சஞ்சய தேரருக்கு நெருக்கமானவர். அவர் மூலமே நாங்கள் பன்சலைக்கு அழைக்கப்பட்டோம். குறிப்பிட்ட குழுவினரும் ஏற்கனவே அங்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். சம்பந்தப்பட்ட குழுவின் பெண் அங்கத்தவர்களும் பன்சலைக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.
பன்சலையின் பிரதம குரு வீரகெட்டிய சஞ்சய தேரர் இரு தரப்பினரிடமும் விடயங்களைக் கேட்டறிந்தார்.
இரு தரப்பினரும் சண்டையிட்டுக் கொள்வதில்லை என்று புனித குர்ஆனின் முன்னிலையில் உறுதி பூணுங்கள் என்று தேரர் சமாதானப்படுத்தினார் என்றார்.
இதேவேளை, அவ்லியா மலை பள்ளிவாசலில் இரு சாராருக்குமிடையில் இடம்பெற்று வரும் முரண்பாடுகள் தொடர்பிலான விசாரணைகள் ஏற்கனவே வக்பு சபையில் இடம்பெற்று வருகிறது.
அடுத்த விசாரணை எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது