அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தின் பிரகாரம் மாதாந்தம் குறைந்தபட்சம் 100,000 ரூபாவிற்கு மேற்பட்ட வருமானம் பெறுவோர் கூட வருமான வரியைச் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருப்பதுடன், இதன் விளைவாக 20 சதவீதமான வரி வருமானத்தை நாட்டிற்கு ஈட்டித்தரும் தனிநபர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடக்கூடிய சாத்தியப்பாடு உயர்வடைந்துள்ளது.
2017ஆம் ஆண்டு 24ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டதைத் தொடர்ந்து அச்சட்டமூலம் நேற்று முன் தினம் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டுள்ளது.
அச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பட்சத்தில் மாதாந்தம் குறைந்தபட்சம் 100,000 ரூபாவிற்கு மேற்பட்ட வருமானம் பெறும் அனைவரும் வருமான வரியைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.