ஒட்டுமொத்த நாட்டையும் அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் போதைவஸ்தை இல்லாமல் செய்ய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
போதைவஸ்துக் கடத்தலைக் கண்டித்து இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவ் அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது,
“ஒரு பக்கத்தில் நாடு பாரிய பொருளாதார வீழ்ச்சியில் இருக்கின்ற அதேசமயம், போதைவஸ்தின் பாவனை என்பது நாட்டிற்குள் மிக அதிகளவில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் யுவதிகளும் போதைவஸ்துக்கு அடிமையாவதாக வைத்தியர்களாலும், சமூகநலன் விரும்பிகளாலும் இன்னும் பல தரப்புகளாலும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
கடல் மற்றும் விமான மார்க்கமாக இந்தப் பொருட்கள் நாட்டிற்குள் வந்துசேர்கின்றன. உலக நாடுகளில் இருக்கக்கூடிய பல்வேறுபட்ட விதமான போதைவஸ்துகளின் விற்பனை நிலையமாகவும் விநியோக மையமாகவும் இலங்கை மாறிவருகின்றது.
கஞ்சா, ஹெரோயின், ஐஸ் போன்ற பல்வேறு வகையான போதைப் பொருட்கள் இலங்கையில் பாவனையில் இருக்கின்றது.
இதன் காரணமாக இலங்கையின் மேல்மாகாணத்தின் பல பகுதிகளிலும் சூட்டுச் சம்பவங்களும் கொலைகளும் நாளாந்தம் நடைபெற்று வருகின்றது.
வடக்கு மாகாணத்தில் மிக அதிகளவிலான போதைப் பொருட்களை உட்கொள்வதன் காரணமாக பல இளைஞர்கள் அண்மைக் காலத்தில் மரணத்தைத் தழுவியுள்ளனர்.
இதுமாத்திரமல்லாமல், போதைவஸ்துக்கு அடிமையானவர்கள் பல்லாயிரக்கணக்கான ரூபாவைக் கொடுத்து அவற்றை வாங்க வேண்டியிருப்பதன் காரணமாக பல்வேறுபட்ட களவுகள், கொள்ளைகள், வழிப்பறிகள் போன்றவை இடம்பெறுவதுடன் வாள்வெட்டுக் கலாசாரங்களும் இதனால் உருவாகி வருகின்றது.
போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய முழுப்பொறுப்பும் அரசாங்கத்திற்கும் பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் அவர்களைச் சார்ந்த புலனாய்வுத் துறையினருக்கும் இருக்கின்றபொழுதும்கூட, இவை முழுமையாக நிறைவேற்றப்படுகின்றதா என்ற ஐயம் மக்கள் மத்தியில் இருக்கின்றது.
நாளாந்தம் இத்தனை கிலோ கேரள கஞ்சா பிடிபட்டிருக்கின்றது என்று ஊடகங்களில் செய்தி வருகின்றபோதிலும், அதனைவிட பல மடங்கு அதிகளவிலான கஞ்சா புழக்கத்திற்கு விடப்படுகிறது என்பது கவலைக்குரிய விடயமாகும்.
இதனைப் போலவே, தென்பகுதியிலிருந்து மிக அதிகளவிலான ஏனைய போதை வஸ்துகள் வடமாகாணத்திற்கும் கடத்தப்படுகின்றது.
இலங்கையில் போதைவஸ்துகள் தொடர்பான இறுக்கமான பல சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றது. ஆனால் இந்த போதைவஸ்துகளுடன் கைதுசெய்யப்படுபவர்கள் தொடர்பில் என்னவிதமான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன அவர்களுக்கு எத்தகைய தண்டனைகள் வழங்கப்படுகின்றது போன்ற செய்திகள் எதுவும் மக்களை எட்டுவதில்லை.
எனவே இந்த விடயங்கள் தொடர்பாக ஊடகங்களும் தொடர்ச்சியாக இவற்றைக் கண்கானித்து போதைவஸ்து கடத்தல், விற்பனை செய்தல் தொடர்பான குற்றவாளிகளுக்கு எத்தகைய தண்டனைகள் வழங்கப்படுகின்றன என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துகின்றபோது, இவ்வாறான விடயங்களில் ஈடுபடக்கூடாது என்ற அச்சவுணர்வு இளைஞர், யுவதிகளுக்கு வரலாம்.
எனவே ஊடகங்களும் இதுதொடர்பில் தொடர்ச்சியான நடவடிக்கையை மேற்கொண்டு, முழுமையான செய்தியை மக்களுக்கு வழங்க வேண்டும்.
கைது செய்யப்படும் போதைவஸ்து கடத்தல்காரர்களுக்கோ அல்லது பாவனையாளர்களுக்கோ அல்லது அதனை விற்பவர்களுக்கோ நீதிமன்றம் எத்தகைய தண்டனைகளை வழங்குகிறது என்பதை மக்கள் அறிய முடியாமல் உள்ளது.
இவ்வாறு கைது செய்யப்படுபவர்களுக்கு நீதிமன்றம் அதிகபட்ச தண்டனைகளை வழங்குவதென்பதும் இந்த போதைவஸ்து வியாபாரத்தை ஒழிப்பதற்கு ஒரு வழியாக இருக்கும். வடக்கு-கிழக்கு மாகாணங்களில் மிகப்பெருமளவிலான படையினர் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.
பொலிஸார், அதிரடிப்படையினர் என்ற பல பிரிவினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் படைப்பிரிவினருக்கு உதவ தங்களுக்கான உளவுப்பிரிவுகளையும் ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர்.
அவ்வாறான ஒரு சூழ்நிலையில், மிகப்பெருமளவிலான போதைவஸ்துகள் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் புழக்கத்தில் இருப்பது எவ்வாறு என்ற கேள்விகள் உருவாகின்றது.
இது தொடர்பான தகவல்களை படையினருக்குக் கொடுக்க மக்கள் அஞ்சுவதாகவும் கேள்விப்படுகின்றோம். ஏனெனில், உடனடியாக யார் மூலம் தகவல் கிடைத்தது என்ற செய்திகள் சம்பந்தப்பட்ட சமூக விரோதிகளுக்குப் போய்ச் சேர்ந்துவிடுவதாக அறிய முடிகிறது.
எனவே. பொலிஸ், படைத்தரப்பின் உயர் உத்தியோகஸ்தர்கள், கீழ் மட்டங்களில் நடக்கக்கூடிய இத்தகைய துஷ்பிரயோகங்களை அகற்றுவதனூடாக மக்களுடன் இன்னும் கூடுதலாக இணைந்து வேலைசெய்ய முடியும் என்பதுடன் அவர்களின் நம்பிக்கையையும் பெற்றுக்கொள்ள முடியும். போதைப் பொருள் கடத்தலில் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பிருப்பதாக அண்மையில் நாடாளுமன்றத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சட்டமியற்றும் அதிகாரமிக்கவர்களே இத்தகைய செயலில் ஈடுபடுவதென்பதும் இதன் மூலம் சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதற்கு இவர்கள் துணைபோகின்றார்கள் என்பதும் கண்டிக்கப்படவேண்டிய செயலாகும்.
இவ்வாறானவர்கள் நாடாளுமன்றத்திலோ அல்லது ஏனைய மாகாண உள்ளுராட்சி சபைகளிலோ இருப்பார்களாயின் இவர்கள் அப்பதவிகளிலிருந்து விரட்டப்படவேண்டியவர்கள் என்பதுடன் அதிகபட்ச தண்டனைக்கும் உள்ளாக்கப்படவேண்டியவர்கள்.
இவ்வாறான ஒரு மோசமான சூழலில் பெற்றோர்கள், சகோதரர்கள் தங்களது குழந்தைகளை ஏனைய சகோதரர்களை தொடர்ச்சியான கண்காணிப்புக்குள் உட்படுத்தி, இந்த சமூகத்தில் அவர்களை நற்பிரசையாகக் கொண்டுவர சகல முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
நாங்கள் சகலரும் ஒன்றிணைந்தாலே இளைஞர்கள், யுவதிகள், மாணவர்களைப் பாதிக்கும் இந்தக் கொடூரமான போதைவஸ்து அரக்கனை சமூகத்திலிருந்து அகற்ற முடியும். ஒன்றுபட்டு எமது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக குரல்கொடுப்போம் போராடுவோம்” என அவ்அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.