ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானத்தை தொடர்ந்து, இலங்கை இராணுவ அதிகாரிகள் பலருக்கு அங்கத்துவ நாடுகள் பயணத்தடை விதிக்குமென தகவல் வெளியாகியுள்ளது.
இதில் உடனடி நடவடிக்கையெடுக்கும் கனடா, குறைந்தது இராணுவ உயர் அதிகாரிகள் மூவரை தடைசெய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகளும் இதைப் பின்பற்றும் என நம்பப்படுகிறது.
ஜெனீவாவை தளமாகக் கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கடந்த வியாழக்கிழமை ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்’ என்ற புதிய தீர்மானத்தை நிறைவேற்றியது. இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 20 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும், 20 நாடுகள் வாக்களிக்கவில்லை. ஏழு நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகவும் வாக்களித்தன.
இந்தத் தீர்மானத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அதன் விளைவாக மனித உரிமை மீறல்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் கீழ் செயல்படும் புதிய செயலகம், மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்ததாகக் கூறப்படும் பொருளாதாரக் குற்றங்கள் மற்றும் புதிய தீர்மானத்தில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் விசாரிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையால் வெளியிடப்பட்டுள்ள கறுப்புப் பட்டியல் நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் 193 அங்கத்துவ நாடுகளில் 42 நாடுகள் கறுப்புப் பட்டியலில் உள்ளன.
மனித உரிமைகள் தொடர்பில் ஐ.நா.வுடன் ஒத்துழையாமையை அண்மைய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.