பாடசாலை அதிபர் ஒருவர் மாணவி ஒருவரை தும்பு தடியால் தாக்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கொட்டக்கலை போகாவத்தை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவரையே அதிபர் தும்புதடியால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவி காயங்களுடன் கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கொட்டகலை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி சாவித்திரி சர்மா தெரிவித்துள்ளார்.
பாடசாலையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த ஆசிரியர் விருந்து விழாவிற்கு 300 ரூபாவினை தலா ஒவ்வொரு மாணவரும் தரவேண்டும் என பாடசாலையின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சில மாணவர்கள் குறித்த தொகையை செலுத்தியுள்ளதோடு சிலர் செலுத்தவில்லை.
இந்நிலையில், பணம் செலுத்தாத மாணவர் ஒருவரை, உடனடியாக பணத்தினை செலுத்துமாறு தகாத வார்த்தை பிரயோகங்களினால் நிந்தித்துள்ளார்.
இதனை பார்வையிட்ட மாணவரின் மூத்த சகோதரி ” ஐயா, தந்தை பாடசாலைக்கு அருகிலேயே கடமையாற்றுகின்றார், நான் பணத்தை வாங்கி தருகின்றேன், தம்பியை திட்ட வேண்டாம்” என அதிபரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மாணவியின் கோரிக்கையினை செவிமடுக்காத அதிபர் மாணவியை தொடர்ச்சியாக துரத்தி தும்புத்தடியால் தாக்கியுள்ளார்.
அதிபரின் தாக்குதலை தாங்க முடியாத மாணவி கதறியதால், பாடசாலைக்கு அருகில் கடமையாற்றிக்கொண்டிருந்த தந்தை அழுகைக்குரலை கேட்டு ஓடிவந்து, மகளை அதிபரின் தாக்குதலில் இருந்து காப்பாற்றியுள்ளார்.
தனது புதல்வியை காப்பாற்றிய தந்தை அவரை அயலவர்களின் உதவியுடன் கொட்டகலை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மாணவிக்கு முதல் கட்ட சிகிச்சைகளை வழங்கிய கொட்டகலை வைத்திய அதிகாரி மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அத்துடன் தனது மகள் தாக்கப்பட்டுள்ளமையினால் அதனால் ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்படுமாயின் பாடசாலை அதிபரே பொறுப்பினை ஏற்க வேண்டும் என மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான தனக்கு வருமானம் குறைந்தளவிலேயே கிடைப்பதினால் அதிபரால் கேட்கப்பட்ட 300 ரூபாவினையேனும் தன்னால் உரிய நேரத்திற்கு செலுத்த முடியாமல் போனதாகவும் மாணவியின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.