புதுச்சேரியில் தாயைத் தவறாக பேசிய நபரை மிரட்டும் நோக்கில் யூடியூப் காணொளியைப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து, அந்த நபரின் வீட்டில் வீசிய சிறுவனிடம் விசாரணை நடந்துவருகிறது.
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம். இவருக்கு வயது 50. புதுச்சேரி நகர பகுதியில் சாலையோரத்தில் உள்ளாடைகள் விற்பனை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே இவரது வீட்டில் கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசி சென்றுள்ளார்.
இதுகுறித்து லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த இரண்டு மாதங்களாக குற்றவாளி யார் என்பதை கண்டறிய போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர் யார் என்பது கண்டறியப்படாமல் இருந்தது.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளில் வீட்டில் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி செல்வது தெரிந்தாலும், அந்த நபர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இதையடுத்து இவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வெளி நபர்களிடம் முன்விரோதம் ஏதேனும் இருந்துள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்யத் தொடங்கினர்.
பரசுராம் நடத்தி வரும் உள்ளாடைக் கடையில் அவரது மகன் விக்னேஷ் (வயது 25) தந்தைக்கு உதவியாக வார இறுதி நாட்களில் வந்து செல்வார். இவருக்கும் அதே கடையில் பகுதி நேர ஊழியராக பணியாற்றி வந்த 17 வயது சிறுவனுக்கும் முன்விரோதம் இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
அதையடுத்து போலீஸ் செய்த விசாரணையில் நெருப்புக்குழி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் நாட்டு வெடிகுண்டை வீசிச் சென்றது உறுதியானது. நேற்று முன்தினம் அச்சிறுவனை விசாரணைக்கு அழைத்து வந்தனர். அப்போது கடை முதலாளியின் மகன் விக்னேஷுடன் நட்பாக இருந்தாக அவர் கூறியுள்ளார்.
“சிறுவனின் தாயார் கட்டடங்களில் சித்தாள் வேலை செய்து வருகிறார். அவர் வேலைக்கு செல்வதைப் பார்த்துவிட்டு, சிறுவனின் தாயை அவருடன் பணியாற்றும் கட்டட வேலை செய்யும் ஊழியருடன் தொடர்புப் படுத்தி விக்னேஷ் மற்றவர்களிடம் தவறாகப் பேசியுள்ளார். குற்றம்சாட்டப்படும் சிறுவன் இதைத் தட்டிக் கேட்டுள்ளார். பின்னர் விக்னேஷை மிரட்ட முடிவு செய்து, பட்டாசுகளைக் கொண்டு நாட்டு வெடிகுண்டு தயார் செய்துள்ளார். அதனைப் பரமசிவம் வீட்டில் வீசு சென்றுள்ளார்,” என்று லாஸ்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இதையடுத்து சிறுவனை நேற்று ஞாயிற்றுக்கிழமை குற்றவியல் நீதிமன்ற நடுவர் வீட்டில் முன்னிலைப் படுத்தியுள்ளனர். சிறுவனிடம் விசாரணை செய்த குற்றவியல் நீதிமன்ற நடுவர் சிறுவனைக் கண்டித்து பெற்றோருடன் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். மீண்டும் அந்த சிறுவனை வரும் செவ்வாய்க்கிழமை பெற்றோருடன் வரும்படி அவர் கூறியுள்ளதாக ஆய்வாளர் செந்தில் தெரிவித்தார்.
“இந்த சிறுவன் கடந்த இரண்டு மாதங்களாக ஊரிலும் இல்லை. இவர் யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார். வெடிகுண்டு தயாரிக்கத் தேவையான வெடி பொருட்களை வீட்டில் அருகே கிடைத்த பட்டாசுகள், மற்றும் பட்டாசு தயாரிக்கும் கடைகளில் நாட்டு வெடிகளை வாங்கியுள்ளார். பின்னர் அதன் செய்முறை விளக்கங்களை யூடியூபில் பார்த்து வெடிகுண்டை தயாரித்துள்ளார்,” என்று ஆய்வாளர் செந்தில் தெரிவித்துள்ளார்.
செவ்வாயன்று மீண்டும் அந்தச் சிறுவன் முன்பு பெற்றோருடன் முன்னிலையாகும்போது அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரியவரும்.