வானுயர்ந்த கோபுரங்களை நிர்மாணம் செய்வதனால் நாடு அபிவிருத்தி அடைந்து விட்டதாக கூற முடியாது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துமாறு கதிர்னால் தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரியுள்ளார்.
ஜனநாயக ரீதியில் மக்களுக்கு அரசாங்கத்தின் மீது எதிர்ப்பை காண்பிக்க அது சந்தர்ப்பமாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று இலங்கையில் ஒருவர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவராக இருந்திருந்தால் அவர் தற்பொழுது வறியவராக மாறியுள்ளார்.
பெரிய பாதைகளை அமைத்து உலகிற்கு பெரிதாக காட்டினாலும், பெரிய கோபுரங்களை அமைத்து, பெரிய விமான நிலயங்கள் அமைத்து பிரச்சாரம் செய்தாலும், அந்த விமான நிலையத்தில் ஒரு விமானமும் தரையிறங்குவதில்லை.
இலங்கையில் பலர் இன்று உண்ண உணவின்றி தவிக்கின்றனர். சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய முயற்சிக்கின்றனர். நத்தார் காலத்தில் கொழும்பை அழகாக சோடிப்பார்கள்.
எனினும் சாப்பிட எதுமில்லாத அழகிய நகரமாகவே இருக்கும். தலைவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றார்கள். உலகம் முழுவதும் சுற்றித் திரிந்து தலைவர்கள் யாசகம் செய்கின்றார்கள்.
பாடசாலை பிள்ளைகளுக்கு சாப்பிட இல்லாத நிலையில் எவ்வாறு அவர்கள் படிப்பார்கள்? வானுயர்ந்த கோபுரம் அமைத்து அதில் தரகுப் பணம் ஈட்டிக் கொள்ளப்பட்டது.
அந்தப் பணத்திற்கு என்ன ஆனது? கோபுரங்களை அமைப்பதனால் நாடு அபிவிருத்தி அடைந்து விடாது என தெரிவித்துள்ளார்.