ராமேஸ்வரம் அடுத்த சேரான்கோட்டை கடற்கரை பகுதியில் 2 மாத கைக்குழந்தை மற்றும் ஒரு சிறுமி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 நபர்கள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, பால், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்கள் விலை கிடுகிடு என உயர்ந்து மக்கள் வாழ்வதற்கே வழியில்லாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆளும் அரசுக்கு எதிராக இலங்கை மக்கள் வீதியில் இறங்கி கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து இலங்கையில் வாழ வழியின்றி ஈழத்தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்கு வருவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
இந்த நிலையில் ஏற்கனவே 21 குடும்பத்தைச் சேர்ந்த 75 பேர் வந்துள்ள நிலையில் தற்போது ராமேஸ்வரம் அடுத்த சேரான்கோட்டை கடற்கரைப் பகுதியில் 2 மாத கைக்குழந்தை மற்றும் ஒரு சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் கியூ பிரான்ச் போலீசார் அகதிகளாக வந்த ஈழத் தமிழரிடம் உரிய விசாரணை நடத்துவதற்காக மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பின்னர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட உள்ளனர்.