பஞ்சாபில் தனியார் பல்கலைக்கழக மாணவி ஒருவரே தமது சக மாணவிகளை ஆபாசமான வகையில் வீடியோ எடுத்து தமது ஆண் நண்பருக்கு அனுப்பியதாகவும், அவை இணையத்தில் வைரலானதாகவும் பஞ்சாபில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தில் பெரும் போராட்டம் வெடித்தது.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர் என செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறையினர் அதை மறுத்துள்ளனர்.
பஞ்சாபின் மொஹாலி நகரின் அருகே உள்ள சண்டிகர் பல்கலைக்கழகம் எனும் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நேற்று நள்ளிரவு மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் குறித்து இன்று அதிகாலை 3 மணியளவில் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர், விடுதியில் சக மாணவிகள் குளிக்கும்போது வீடியோ எடுத்து, அவற்றை இமாச்சல பிரதேசம் மாநில தலைநகர் சிம்லாவில் உள்ள தமது ஆண் நண்பருக்கு அனுப்பியதாகவும், அவை வைரலானதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தைக் கண்டித்து மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள், விடுதியில் தங்கியிருக்கும் சில மாணவிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
ஆனால் இதுகுறித்து பேசிய மொஹாலியின் காவல் கண்காணிப்பாளர் விவேக் சோனி, “தற்கொலை முயற்சிகள் அல்லது உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. அதீத பதற்றத்தை உணர்ந்த மாணவி ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். எங்களின் குழு அவருடன் தொடர்ந்து இணைப்பில் உள்ளது. ஒரே ஒரு மாணவியின் வீடியோ மட்டுமே எங்களின் கவனத்திற்கு வந்துள்ளது. வேறு எந்த வீடியோவும் எங்களின் கவனத்திற்கு வரவில்லை.
இதுவரை நடந்த விசாரணையில், வீடியோ எடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட மாணவியின் வீடியோ ஒன்று மட்டுமே கிடைத்துள்ளது. அவர் வேறு எந்த வீடியோவையும் பதிவு செய்யவில்லை. அலைபேசிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்; அது தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்படும்,” என்று தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் அமைதி காக்க வேண்டும் என பஞ்சாப் பள்ளி கல்வித் துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் வீடியோ எடுத்ததாக கூறப்படும் மாணவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையையும் பதிவு செய்துள்ளனர். அதன்பிறகே மாணவிகளின் போராட்டம் சற்று தணிந்தது.
பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஊடகங்கள் தற்போது உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து பேசிய பஞ்சாப் மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் மணிஷா குலாடி, “விசாரணை நடந்து கொண்டு வருகிறது. குற்றம் செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என மாணவர்களின் பெற்றோருக்கு உறுதியளிக்கிறேன்.” என தெரிவித்தார்.
முன்னதாக பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகள் சிலர், ஊடகங்களுக்கு ஆடியோ மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. அதில், விடுதியில் படிக்கும் மாணவி ஒருவர் பிற மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. அது வைரலானதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக 4 மாணவிகளின் வீடியோக்கள் வைரலாகியிருக்கலாம் என்று நம்பப்பட்டது. ஆனால் அந்த ஆடியோவில் பல மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் பல்கலைக்கழகம் இதுகுறித்து எந்த கடுமையான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும் அந்த ஆடியோ மெசேஜில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் வைரலான மற்றொரு வீடியோவில், குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணை விடுதி காப்பாளர் விசாரிப்பது போன்று தெரிகிறது. அதில் அவர் சில வீடியோக்களை எடுத்ததாகவும் ஷிம்லாவில் வசிக்கும் ஓர் ஆணுக்கு அந்த வீடியோக்கள் அனுப்பப்பட்டதாகவும் கூறுகிறார்
‘இதை ஏன் செய்தாய்’ ? என விடுதி காப்பாளர் கேட்ட கேள்விக்கு மாணவி பதில் ஏதும் கூறவில்லை.