பொத்துவில் பிரதேசத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துடன் இணைந்து மேற்கொண்ட திடீர் பரிசோதனையின் போது, வாழைக் காய்களுக்கு இரசாயன திரவம் உபயோகித்து அதனை பழுக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டு பொத்துவில் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
பொத்துவில் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ஸி.றிஸ்வான் சந்தேக நபர்கள் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் இருவருக்கும் தலா 10,000 ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவிட்டார்.
அண்மைக்காலமாக பொத்துவில் பிரதேசத்தில் பழங்களை பழுக்க வைப்பதற்காக இரசாயன திரவம் பயன்படுத்தப்பட்டு வருதாகவும் இதனால் அவ்வாறான மருந்து தெளிக்கப்பட்ட பழங்களை உண்பதால் பக்க விளைவுகளான வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதாகவும் பொது மக்கள் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையிலையே இவ்வாறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர்கள் எம்.எஸ்.எம்.மலீக் தெரிவித்தார்.
இந்த திடீர் பரிசோதனையின் போது பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் .ஏ.யு.அப்துல் சமட், பொது சுகாதார பரிசோதகர்களான எம்.பைரூஸ், எம்.ஐ.அர்ஸாத், எம்.ஏ எல்.ஏ.பாரி, முஹம்மட் சர்ஜுன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொத்துவில் மாவட்ட நீதிமன்ற நீதிவான் ஏ.ஸி.றிஸ்வான் சந்தேக நபர்களுக்கு எச்சரிக்கை விடுத்து தண்டப்பணத்தை செலுத்துமாறு உத்தரவிட்டார்.