கடந்த இரண்டு மாதங்களில் இலங்கையின் மின்சாரத் தேவை குறைந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், வாராந்தம் 48 முதல் 49 மில்லியன் அலகுகளாக இருந்த வாராந்த மின் நுகர்வு 38 முதல் 39 மில்லியன் அலகுகளாகவும், வார இறுதி மின் நுகர்வு 33 முதல் 34 மில்லியன் அலகுகளாகவும் குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
வழமையாக அமுல்படுத்தப்படும் மின்வெட்டு தவிர்ந்த ஏனைய மின் உற்பத்தி முறைகளை மக்கள் தெரிவு செய்தமையே மின் நுகர்வு குறைந்தமைக்கான காரணம் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் ஒக்டோபர் இறுதி வாரம் வரையே நிலக்கரி கையிருப்பு போதுமானதாக உள்ளது என்றும் அதற்குள் நிலக்கரி இறக்குமதி செய்யப்படாவிட்டால் நீண்ட நேர மின்வெட்டை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
தேசிய மின்கட்டமைப்புக்கு 900 மெகாவோட் மின்சாரத்தை வழங்கும் நுரைச் சோலை லக்விஜய அனல் மின்நிலையத்தின் 3 மின்பிறப்பாக்கிகளில் 2 பிறப்பாக்கிகள் தற்போது இயங்கிவருவதாக குறிப்பிட்டார்.
தற்போதைய நிலையில் நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய அளவுக்கு நீர்த் தேகக்கங்களில் நீர் காணப்படுவதாகவும் எதிர்வரும் நவம்பர் மாதமளவில் நிலக்கரி கிடைக்காவிடின் நீண்ட நேர மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என்றார்.