அரசாங்கத்தினால் பாடசாலை மாணவர்களின் போஷாக்கினை உறுதிப்படுத்துவதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன . இதற்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதோடு பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்காக 3000 டொன் துவரம் பருப்பு அமெரிக்காவிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ளது. மேலும், 1700 டொன் டின் மீன் கிடைக்கப்பெறவுள்ளது இன்று கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில்,
‘சிறுவர்களை பாதுகாப்போம்’ அமைப்புடன் கல்வி அமைச்சின் போஷாக்கு வேலைத்திட்ட பிரிவு ஒன்றிணைந்து பாடசாலைகளில் உணவு வழங்கும் வேலைத்திட்டத்தினை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ளது.
ஆரம்பப் பிரிவில் 16 இலட்சத்து அதிகமான மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். அவர்களுக்கான உணவு வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக பல்வேறு தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
இதற்கு முன்னர் பாடசாலைகளில் மதிய உணவு வழங்கப்படாத பாடசாலைகளிலும் அதற்காக வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டங்களுக்கான ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காக நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் , அமெரிக்கா மற்றும் ரஷ்ய தூதுவர்களுடனும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதற்கமைய பாடசாலைகளில் அதிகளவான மாணவர்களுக்கும் , ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கும் உணவு வழங்கும் வேலைத்திட்டத்தினை பரந்தளவில் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.