உண்மைகளைப் பேசும் என்னால் இனி பொது வெளிகளில் சில விடயங்கள் தொடர்பில் பகிரங்கமாக கருத்துக்களை வெளியிட முடியாது. எனது கருத்து சுதந்திரம் நீக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக மௌனமே அரசியல் தொடர்பிலான கேள்விகளுக்கு எனது பதிலாக அமையும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
நிபந்தனைகளுடனேயே நான் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றேன். எனவே சில விடயங்கள் தொடர்பில் என்னால் பகிரங்கமாக கருத்துக்களை வெளியிட முடியாது.
நான் உண்மையைப் பேசுபவன். எனவே இனி ஊடகவியலாளர்களின் பெரும்பாலான கேள்விகளுக்கு மௌனமே எனது பதிலாக இருக்கும்.
காரணம் சில விடயங்கள் தொடர்பில் நான் ஏதேனும் கருத்துக்களை வெளியிட்டால் மீண்டும் சிறைச்சாலை செல்ல நேரிடும்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் என்னை விடுதலை செய்யுமாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
ஆனால் அவர் அவற்றை நிராகரித்தார். மாறாக கொலையாளியொருவருக்கு மன்னிப்பு வழங்கினார். அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலிருந்த போது பல சந்தர்ப்பங்களில் , ஆடைகளை தயார்படுத்தி வைக்குமாறு கூறி என்னை ஏமாற்றியிருக்கின்றனர்.
ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கின்றார். அதற்காக அவருக்கும் , எனது விடுதலைக்காக பாடுபட்ட ஏனையோருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.
தற்போது எனது பேச்சு சுதந்திரம் நீக்கப்பட்டுள்ளது. இது ஒரு சிறிய கட்டுப்பாடாகும். எனவே முன்னரைப் போன்று ஊடகவியலாளர் மாநாடுகளில் என்னால் கருத்துக்களை வெளிப்படுத்த முடியாது.
தற்போது பிளவுபட்டுள்ள எனது தரப்பினர் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பது எனது கனவாகும். அதனை வெற்றி பெறச் செய்வதற்கு என்னால் முடியுமெனில் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். நாடு தற்போதுள்ள நிலைமையில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமானதாகும்.
அமைச்சர் மனுஷ நாணயக்கார வழங்கிய நியமனக்கடிதம் கிடைக்கப் பெற்றது. எனினும் அதற்கு இன்னும் நான் பதிலளிக்கவில்லை.
இந்நாட்டில் ஊழல், மோசடிகளில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவதில்லை. மாறாக அவற்றை வெளிப்படுத்துபவர்களே கைது செய்யப்படுகின்றனர்.
நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று நம்புகின்றேன். எனவே கம்பஹா மாவட்டத்தில் மக்களின் அதிகளவான விருப்பு வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட எனக்கு மீண்டும் பாராளுமன்ற உறுப்புரிமை கிடைக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும் என்றார்.