ஐரோப்பிய நாடுகளில் கடந்த இரண்டு மாத காலமாக போதியளவு மழைவீழ்ச்சி இல்லாத காரணத்தால் 500 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பெரும் வறட்சி நிலை ஆரம்பித்துள்ளது.
ஐரோப்பாவை பொறுத்தவரை, பொதுவாகவே அதிக மழை வீழ்ச்சியை பெறும் பிரித்தானியாவில் தற்போது மோசமான வறட்சி நிலை எதிர்கொள்ளப்படுவதால் நேற்று தெற்கு மற்றும் மத்திய இங்கிலாந்து பிராந்தியத்தில் அதிகாரபூர்வமான வறட்சி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பா தனது வரலாற்றில் மீண்டும் ஒரு மிக வறண்ட காலத்தை எதிர்நோக்கியுள்ளது. போதிய மழைவீழ்ச்சி இல்லாத காரணத்தால் ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் வற்றிவருவதால் நீர்வாழ் விலங்குகளுக்கும் கடும் ஆபத்து உருவாகியுள்ளது.
தண்ணீர் உபயோகத்தில் கட்டுப்பாடு
வறட்சி காரணமாக சில ஐரோப்பிய நாடுகள் தண்ணீர் உபயோகத்தில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
இங்கிலாந்தைப் பொறுத்தவரை முதற்கட்டமாக புல்வெளிகள் மற்றும் தோட்டங்களுக்குரிய நீர்ப்பாசனம் தடை செய்யப்பட்டுள்ளது. லண்டனைச் சுற்றியுள்ள 15 மில்லியன் மக்களுக்கு விரைவில் இந்தத் தடை நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
போதிய மழை வீழ்ச்சியில்லாமல் வறட்சிக்கு நீண்ட காலமாகப் பழகிய ஸ்பெயின், போர்த்துக்கல் போன்ற நாடுகள் கூட பெரும் விளைவுகளைச் சந்தித்துள்ளன.
ஆறுகளில் நீர்மட்டம் குறைவு
பிரித்தானியாவில் லண்டனின் முக்கிய நதியான தேம்ஸ், பிரான்சின் சென் நதி மற்றும் ஐரோப்பாவின் முக்கிய நதிகளான றைன் மற்றும் டான்யூப் ஆகியவற்றிலும் நீர்மட்டம் குறைந்துள்ளதால் அவற்றின் ஊடாக மேற்கொள்ளப்படும் சரக்கு கப்பல் போக்குவரத்தும் ஆபத்தில் உள்ளது.
ஜேர்மனியின் மிகப்பெரிய நீர்வழிப்பாதையான றைன், எதிர்வரும் நாட்களில் மிகக் குறைந்த மட்டத்தை எட்டக்கூடும் என அஞ்சப்படுகிறது.