இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ளார்.
கடந்த 22 ஆம் திகதி நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜுன் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக 5 ஆவது சம்பவமாக இது பதிவாகியுள்ளது.
இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிப்பதாகவும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது வரை தமிழகத்தைச் சேர்ந்த 94 மீன்பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ளன.
அவற்றின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி, அவர்களது படகிற்கான உரிமையைக் கோர வேண்டுமென்ற நிபந்தனையின் பேரிலேயே கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் முன்னதாக விடுவிக்கப்பட்டனர்.
தற்போது இலங்கையில் நிலவும் சூழ்நிலை காரணமாக அவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் முன்னிலையாவதிலிருந்து விலக்களிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.