பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று 21 ஆவது திருத்தம் தொடர்பில் சட்ட வரைவு ஆலோசகர், சட்டமா அதிபர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜயதாச ராஜபக்ஷ மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோருடன் கலந்துரையாடி அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் அதிகாரங்களை வெகுவாகக் குறைத்து பாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்தும் 21ஆவது திருத்தச் சட்டத்தின் சரத்துக்களை இரு எம்.பி.க்களும் மேற்கொள்வார்கள் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இது 19வது திருத்தத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும், ஆனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது இதில் அடங்காது. எனினும் இது ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும். இது சுதந்திரமான நிறுவனங்களுக்கு மீண்டும் அதிகாரம் அளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் நடைபெற்ற கூட்டத்தில், புதிய திருத்தத்தை அடுத்த வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பித்து, வரும் நாட்களில் இறுதி செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதேவேளை கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பதவி விலக வேண்டிய அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதை அறிந்துள்ளதாகவும் புதிய அரசியலமைப்பு திருத்தங்களுக்கு தனது சம்மதத்தை தெரிவித்துள்ளதாகவும் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் பிரதமர் விக்ரமசிங்க கலந்துரையாடி அமைச்சரவையை அமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சரவையில் இணைவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடி வருவதாக தெரியவருகிறது.
அமைச்சரவை 20 அமைச்சர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படும் என ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிக்கு அறிவித்துள்ள அதேவேளை, பொருளாதார சவால்கள் காரணமாக நிதி அமைச்சை ரணில் வைத்திருக்க வேண்டுமென சில சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைத்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.