எதிர்வரும் மூன்று வருடங்களில் அனைவருக்கும் சுத்தமான நீர், சுகாதாரம் மற்றும் நீர் தொடர்பான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதே அரசாங்கத்தின் தேசிய இலக்கு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள நீர் வழங்கல் திட்டங்களின் கொள்ளளவையும் தரத்தையும் மேம்படுத்தி, நாடு முழுவதும் புதிய நீர் திட்டங்கள் ஆரம்பிக்கப் படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
இன்று முற்பகல் ஜப்பானின் குமமோட்டோவில் இடம்பெற்ற 4ஆவது ஆசிய பசுபிக் நீர் உச்சி மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
கொவிட் -19 தொற்றுநோய் இருந்தபோதிலும், கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையால் பொதுமக்களுக்கு முன்னரை விட 50% க்கும் அதிகமான தண்ணீரை வழங்க முடிந்துள்ளது.
நீர் சுழற்சி முகாமைத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் நீர் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதாகவும் கொவிட் -19 தொற்று நோயால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் விளைவாக வளங்களுக்கான அணுகல் தடைப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
எனினும், கடந்த இரண்டு வருடங்களில், பங்கேற்பு அபிவிருத்திக் கோட்பாட்டின் கீழ் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இது தனது அரசாங்கத்தின் அபிவிருத்தி முயற்சிகளின் கொள்கை எனவும் குறிப்பிட்டார்.
முதலீட்டு வாய்ப்புகள், தொழில்நுட்ப பரிமாற்றம், நிதியுதவி, விரிவான அபிவிருத்தி உதவிகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் நிலையான முன்முயற்சிகள் ஆகியவற்றுக்கான ஆதர வையும் அரசாங்கம் வரவேற்பதாக அவர் தெரிவித்தார்.