றம்புக்கனையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் சிலர் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த அதிகாரிகளை இன்று முற்பகல் 11.00 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, பொலிஸ் மா அதிபர், மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், கேகாலை மற்றும் றம்புக்கனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் ஆகியோர் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளனர்.
கடந்த 19ஆம் திகதி றம்புக்கனை ஆர்ப்பாட்டத்தின் போது பிரதேசவாசிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு சம்பவ இடத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், குறித்த குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்கவுள்ளது.
றம்புக்கனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் நாரண்பெத்த பிரதேசத்தைச் சேர்ந்த சமிந்த லக்ஷான் என்பவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.