எதிர்வரும் 25 ஆம் திகதி வரை வீட்டுப் பாவனைக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
போதுமான அளவு எரிவாயு சிலிண்டர்கள் இன்மையால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
எரிவாயு தீர்ந்துபோயுள்ள காரணத்தினால் கடந்த 12 ஆம் திகதி தொடக்கம் வீட்டுப் பாவனைக்கான சமையல் எரிவாயு சிலிண்டகைளை விநியோகிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தலா 3,600 மெற்றிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய இரு கப்பல்கள் எதிர்வரும் 25 அல்லது 26 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
அதன் பின்னர் வீட்டுப் பாவனைக்கான சிலிண்டர்களை விநியோகிக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் தொழிற்சாலைகள், வைத்தியசாலைகள், தகன சாலைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான எரிவாயு விநியோகம் முன்னெடுக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்மையால் மக்கள் தொடர்ச்சியாக பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர்.