உக்ரைன் மீதான போர் தொடர்ந்து வரும் நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புதினின் ரகசிய காதலியான அலினா மரடோவ்னா கபீவா-க்கு அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற்று பதக்கங்கள் பெற்றுள்ளார். தற்போது, ரஷ்ய அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ரஷ்யா டுடேவில் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், இவருக்கும் ஜனாதிபதி புதினுக்கும் மறைமுக உறவு இருப்பதால் அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதனால், அமெரிக்காவில் அலினாவுக்கு சொத்துகள் இருந்தாலும், இனி பயன்படுத்த முடியாது என்றும் ரஷ்ய வங்கிகள் உள்ளிட்ட அமெரிக்க நிதி அமைப்பில் எந்த பரிமாற்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அமெரிக்கா தரப்பில் ரஷ்ய ஜனாதிபதி புதினின் மகள்களான மரியா புதின், கேத்தரீனா டிக்கோனோவாவை குறி வைத்து பல்வேறு தடைகளை விதித்ததுடன் இருவரும் பொருளாதாரத் தடைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து ரஷ்ய பிரதமர் மிகைல் மிசுஷ்டின், வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் மனைவி, குழந்தைகள், முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வடேவ் உள்ளிட்ட பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர்களுக்கும் அமெரிக்கா தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.