அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் அலுவலகம் ஒன்றை நிறுவவுள்ளதாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
“அமைதியான செயற்பாட்டாளர்களுக்கு எந்தவிதமான பாரபட்சத்தையும் ஏற்படுத்த நான் இடமளிக்கமாட்டேன்” என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, போராட்டக்காரர்களை தாம் வேட்டையாடுவதாக சில குழுக்கள் சமூக ஊடகங்கள் மூலம் பெரும் பிரசாரம் செய்ய முயற்சிப்பதாகவும், அது உண்மையல்ல என்றும் குறிப்பிட்டார்.
அமைதியான செயல்பாட்டாளர்களுக்கு ஏதேனும் அநீதி ஏற்பட்டால், அந்த நபர் 24 மணி நேரமும் செயல்படும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு புகார்களை ஆய்வு செய்து, அதற்கேற்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
தெரியாமல் அல்லது மற்றவர்களின் செல்வாக்கு காரணமாக இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட நபர்கள் இருந்தால், அவர்கள் மீது அனுதாபத்துடன் செயல்பட திட்டம் தயாரிக்கப்படும். “எனினும், வேண்டுமென்றே சட்டத்தை மீறி வன்முறை மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் நபர்கள் இருந்தால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்திற்கு புறம்பாக யாரையும் செயல்பட அனுமதிக்க மாட்டேன். சட்டம் உங்களுக்கும் எனக்கும் ஒன்றுதான்,” என்றார் ஜனாதிபதி.
மே 09ஆம் திகதி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கியவர்களுக்கும், போராட்டம் என்ற போர்வையில் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கும் சமமாக சட்டம் அமுல்படுத்தப்படும். இந்த நடவடிக்கையில் அரசியல் தலையீடு இல்லை என்பதை உறுதி செய்வேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வன்முறை மற்றும் பயங்கரவாதத்திற்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இருப்பினும், அகிம்சை மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கும். அமைதியான போராட்டம் என்பது அடிப்படை உரிமை. அந்த உரிமைகளை நான் ஏற்றுக்கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.