ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தனது கையடக்கத் தொலைபேசி தினமும் முழு நேரமும் ஒட்டுக்கேட்கப்படுவதாகக் கூறுகிறார்.
‘அத தெரண’வுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது பேசிய அவர், தனது கையடக்கத் தொலைபேசி உரையாடல்கள் கண்காணிக்கப்படுவதாக பொறுப்புடன் தெரிவிக்க முடியும் என்றார்.
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இதுவரையான சீர்திருத்தங்கள், நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளை சிரேஷ்ட ஆலோசகர் பதவிகளுக்கு நியமிப்பது போல் தெரிகிறது” என்றும் அவர் கூறினார்.
உறுதியளித்தபடி ஒருமித்த அரசாங்கத்தை அமைப்பதற்கு பதிலாக ஜனாதிபதி இவ்வாறான சீர்திருத்தங்களை மேற்கொள்வதாக தனது டுவிட்டர் செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்.
“தனக்கு வாக்களித்த எம்.பி.க்களுக்கு ஆறுதல் கூறுவதும், நிராகரிக்கப்பட்ட கட்சிக் கூட்டாளிகளுக்கு வெகுமதி அளிப்பதும் அதே பழைய கேவலமான முறையின் தொடர்ச்சியாகும்” என்று அவர் மேலும் கூறினார்.
இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை நியமிப்பதற்காக பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி வாக்கெடுப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்து டலஸ் அழகப்பெரும போட்டியிட்டார்.
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அனைத்து கட்சி தலைவர்களுடன் இணைந்து அனைத்து கட்சி அரசாங்கத்தை உருவாக்குவோம் என ஜனாதிபதி கடந்த வார இறுதியில் அறிவித்திருந்த போதிலும் அவரது கருத்துக்கள் இவ்வாறாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.