சர்வகட்சி அரசாங்கத்துக்காக அரசியல் கட்சிகளுடன் பல நாட்களாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஒவ்வொரு கட்சியும் முன்வைத்த முன்மொழிவுகள் எதிர்வரும் திங்கட்கிழமை (08) பங்குபற்றிய அனைத்துக் கட்சிகளுக்கும் பொதுவாக வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் உள்ள 11 சுயேட்சைக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் 43ஆவது (சேனாங்கய) பிரிவினருடன் நேற்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி விக்ரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மக்கள் விடுதலை முன்னணி (ஜனதா விமுக்தி பெரமுன) தேசிய மக்கள் சக்தி ( ஜாதிக ஜனபல வேகய) மற்றும் இன்னும் சில தமிழ் அரசியல் கட்சிகள் மாத்திரமே எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்த எஞ்சியுள்ளதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், மக்களின் அபிலாஷைகளுக்காக அரசியல் சித்தாந்தங்களை ஒதுக்கி வைத்துவிட்டு சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் அனைவரது ஆர்வத்தையும் பாராட்டினார். 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மீளக் கொண்டுவருவது…
Author: admin
புறக்கோட்டை – மெனிங் சந்தைக்கு அருகில் உள்ள மிதக்கும் சந்தைப் பகுதியை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் ஜனாதிபதி இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முத்துராஜவெல பெற்றோலிய முனையத்தில் இருந்து கட்டுநாயக்க பிரதேசத்தில் உள்ள நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்காககொண்டு செல்லப்பட்ட எரிபொருள் பவுசரை மீகொட பிரதேசத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்களை மெகொட பொலிஸார் கடந்த தினம் கைது செய்திருந்தனர். இவர்களில் இரண்டு பெரிய தனியார் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் இருவர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். முத்துராஜவெல பெற்றோலிய முனையத்தின் இரண்டு சிரேஷ்ட அதிகாரிகள் இந்த மோசடிக்கு தலைமை தாங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் மீகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இதேவேளை, கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக மண்ணெண்ணெய் இல்லாமல் தமது தொழில் முடங்கியுள்ளதாக தெரிவித்து காலி மீனவர்கள் இன்று (06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருளை பெற்றுக் கொள்வதில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு, விரைவில் தீர்வு காண முடியும் என நம்புவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சில குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு எரிசக்தி அமைச்சுடன் கலந்துரையாடி வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கந்தகாடு பிரதேசத்தில் உள்ள வயல் நிலங்களுக்கு இன்று கண்காணிப்பு விஜயமொன்றில் ஈடுபட்ட போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் நெல் அறுவடைக் காலத்திற்கு மாத்திரமன்றி எதிர்வரும் பயிர்ச்செய்கைக் காலத்திலும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை, பெரும் போகத்தில் நெல்லுக்கு அதிக விலை கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். நெல் சந்தைப்படுத்தல் சபை அடுத்த வாரம் முதல் நெல் கொள்வனவுகளை ஆரம்பிக்கும். நெல் சந்தைப்படுத்தல் சபை நெல் கொள்வனவுகளை ஆரம்பிக்கும் போது, தனியார் துறையினர் அதிக விலை கொடுப்பார்கள் என எதிர்பார்த்துள்ளதாக விவசாய அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் QR முறைமைக்கு அமைய நாடுமுழுவதும் எரிபொருள் விநியோகிக்கப்படுவதோடு எரிபொருளுக்கான வரிசை தற்போது குறைவடைந்தும் உள்ளது. அத்தோடு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகளில் ஈடுபடும் கொள்கலன் தாங்கி ஊர்திகளுக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு கனியவள கூட்டுதாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும் , QR முறைமைக்கு அமைய போதுமான எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியவில்லை எனவும் தங்களது வாகனங்களுக்கு போதுமான எரிபொருளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகனங்களின் ஒன்றியம் கோரியிருந்தது. இதற்கமைய மேல் மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 4 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குறித்த கொள்கலன் தாங்கி ஊர்திகளுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது.
இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். நேற்று (05) இடம்பெற்ற இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் அடங்குகின்றனர். அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கோவிட் இறப்புகளின் எண்ணிக்கை 16,583 ஆகும். இதேவேளை, இலங்கையில் மொத்தமாக அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 666,580 ஆகும்.
திருகோணமலை – கிண்ணியாவில் முச்சக்கரவண்டி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை எரிபொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது 200 லீற்றர் டீசலும், 100 லீற்றர் பெற்றோலும் சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்டவர்கள் கிண்ணியா சூரங்கள் பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 23 வயதுடையவர்களாவர். அவர்களை நாளை மறுதினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக கிண்ணியா காவல்துறை தெரிவித்துள்ளது.
அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, லாஸ் ஏஞ்சல்ஸில் ‘ஜனநாயகத்துக்கான ஸ்ரீலங்கன்ஸ்’ என்ற பெயரில் இலங்கையர்கள் குழு நேற்று இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல மாதங்களாக மக்கள் நடத்திய போராட்டங்களினால் கிடைத்த வெற்றி தமக்கு பறிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டை தற்போதைய நிலைக்கு கொண்டு வருவதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். அவர்கள் இலங்கை அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் கொத்து, உணவுப் பொதி மற்றும் தேநீரின் விலை குறைக்கப்படும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைந்துள்ளதாகவும் எரிவாயு விலை எதிர்வரும் திங்கட்கிழமை குறையும் என எதிர்ப்பார்ப்பதாகவும் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் பேக்கரி பொருட்களின் விலைகளும் குறையும் என தெரிவிக்கப்படுகிறது.
சகல கட்சிகளை உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைப்பது தற்போதைக்கு பயன்தரக்கூடிய விடயம் அல்ல என நேற்று சமகி ஜன பலவேகய கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வாக சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதை தான் பார்க்கவில்லை என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஊழலை ஒழிப்பதே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களின் முக்கிய கோரிக்கை என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார். எனவே ஊழலற்ற நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு விரைவான தீர்வுகளை காண்பதற்கும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.