இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு 2 இலட்சம் அவுஸ்திரேலிய டொலர் பிணைத் தொகையை திரட்டுவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் போராடி வருவதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. மீண்டும் ஒரு முறை பிணை கோரி மேல்முறையீடு செய்வதற்காக அடுத்த வார தொடக்கத்தில் நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவே குறித்த தொகையை திரட்ட முயல்வதாக அறியமுடிகிறது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் நன்கொடைகளை கோரியுள்ள நிலையில், கிரிக்கெட் வீரர் வனிந்து ஹசரங்க, அடுத்த வாரம் பிணை விண்ணப்பத்தை தாக்கல் செய்வதற்கு பாரிய தொகையை கையளித்துள்ளார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Author: admin
“பொருளாதார கொலையாளிகளுக்கு மத்தியில்” என்ற புதிய புத்தகத்தை முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் வெளியிட்டுள்ளார். சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ள குறித்த புத்தகம் 2500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இலங்கையின் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்காக விமர்சிக்கப்பட்ட நபர்களில் ஒருவராக இருக்கும் கப்பரால், “நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் என்ன செய்துள்ளார் என்பதை அறிந்து இரவில் நிம்மதியாக உறங்க முடிகிறதா?” என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற முன்றலில் குறித்த கேள்வி எழுப்பப்பட்டதுடன், “என்னால் நன்றாக தூங்க முடிகிறது. மக்களுக்கு எதிராக நான் எதுவும் செய்யவில்லை. நான்தான் நாட்டை திவாலாகும் நிலையிலிருந்து காப்பாற்றினேன். மக்கள் எதையும் சொல்லலாம்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
(எஸ்.எம்.எம்.றம்ஸான்) நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகிறது. இவ்வாறு பெருக்கெடுத்து ஓடும் ஆறு கடலுடன் கலக்கும் போது ஆற்று நீருடன் ஆற்றல் வளரும் சல்லுத்தாவரங்களும் ஆற்றில் கலக்கிறது. இத் தாவரங்களுடன் பாம்பு,ஆமை போன்ற விலங்குகளும் கடலில் இருந்து உயிருடன் கரைகளில் ஒதுங்கி நடமாடுவது டன் கரையோரங்களில் காணப்படும் படகு’,தோணி , கற்கள் மற்றும் நீர் வடிந்தோடும் துவாரங்களுக்குள்ளும் பாம்புகள் பதுங்கி இருப்பதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர் இதனால் கடற்கரைக்கு ஓய்வு எடுக்கச் செல்பவர்கள் மிக அவதானமாக இருப்பதோடு அங்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.
பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர் ஒருவர் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளார். தாலாவிட்ட, எப்பாவல பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இந்த மீனவர் கடந்த செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி “ஹிருன் புதா 2” என்ற பல்நாள் மீன்பிடி கப்பலில் மேலும் ஐந்து மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். குறித்த மீனவர் மீன்பிடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது நேற்று (11) மாலை கடலில் விழுந்ததாக படகின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களால் ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஒரு கோடியே 78 இலட்சம் ரூபா பணம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவை கோட்டை நீதவான் திலின கமகே கோட்டை பொலிஸாருக்கு வழங்கியதாக “அத தெரண” செய்தியாளர் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதியின் படுக்கையறையில் கண்டெடுக்கப்பட்ட பணம் இலஞ்சமாக அல்லது வேறு ஏதாவது விடயம் தொடர்பில் பெறப்பட்டதா என்பது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதியின் சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மிரிஹானவில் உள்ள அவரது இல்லத்தில் இல்லை என பொலிஸார் வழங்கிய தகவலை கவனத்தில் கொண்ட நீதவான், அவர் தற்போது வசிக்கும் இல்லத்திற்கு சென்று வாக்குமூலம் பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்
நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு லிட்டர் டீசல் 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. டீசலின் புதிய விலை 450 ரூபாவாகும் இதேவேளை, மண்ணெண்ணெய் விலை 25 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 365 ரூபாவாகும். ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றமில்லை.
மட்டக்களப்பு மாநகரசபையில் நீண்டகாலமாக நிலவிவரும் குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை காண அனைவரும் இணைந்து நடவடிக்கையெடுக்கவேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார். தேசிய வாசிப்பு மாதத்தின் இறுதி நிகழ்வு நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் மாநகரசபையின் ஆணையாளர் நா.மதிவண்ணன் தலைமையில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் அண்மைக்காலமாக குப்பைகள் அகற்றுவது தொடர்பிலான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதை அறிவேன். நானும் இந்த பகுதியில் நிரந்தர வசிப்பிடத்தினைக்கொண்டவர் என்ற அடிப்படையில் இந்த பிரச்சினையினால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம் என்றும் தெரிவித்தார். மேலும் இந்த பிரச்சினை இன்று, நேற்று ஏற்பட்ட பிரச்சினையாகவுள்ளமையால் இதற்கான தீர்வினை மாநகர முதல்வர் மற்றும் உறுப்பினர்கள்,அதிகாரிகள் இணைந்து வழங்கவேண்டும். அத்துடன் குப்பைகளை அகற்றுவதற்கு நிரந்தர தீர்வொன்று அவசியமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹாவின் பல பகுதிகளில் நாளை (13) 8 மிணித்தியாலம் 30 நிமிடங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. குறித்த பிரதேசங்களுக்கு நாளை காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என குறித்த சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, பேலியகொட தோட்டம், ஜா-எல, கட்டுநாயக்க – சீதுவை நகரசபை பகுதிகளுக்கும் களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவாங்கொட பிரதேச சபை பகுதிகளுக்கும் கம்பஹா பிரதேச சபை பகுதிக்கும் குறித்த காலப்பகுதியில் நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் வௌிநாட்டு பணவனுப்பல்கள் 355.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் 2,929.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வௌிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.
வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட நெடுங்கேணியில் பெருந்தொகையான பப்பாசி மற்றும் தென்னைமரங்களை யானைகள் அழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெடுங்கேணி புளியங்குளம் பிரதான வீதிக்கு அருகாமையில் சுமார் 8 ஏக்கர் அளவில் பப்பாசி செய்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று இரவு தோட்டத்தினுள் உள்நுழைந்த யானைகள் அறுவடைப் பருவத்தில் காணப்பட்ட சுமார் 150 க்கும் மேற்பட்ட பப்பாசி மரங்களை முறித்து அழித்துள்ளது. இதேவேளை அருகாமையில் உள்ள காணிக்குள் புகுந்த யானைகள் ஒருதொகை தென்னை மரங்களையும் அழித்துள்ளது. மேலும் யானை வேலி அமைக்கப்பட்டு இருந்தும் தமக்கு பிரியோசனம் இல்லை என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். இதேவேளை தற்போது வளர்ப்பு யானைகளை இப்பகுதியில் வருவதால் இவ் அழிவுக்கு காரணம் எனவும், விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர். எனவே இதற்கான சரியான தீர்வினை தமக்கு பெற்றுத்தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.