நொதோர்ன் தனியார் வைத்தியசாலை ஸ்தாபகர் எஸ்.பி.சாமியால், யாழ் மாநகர சபைக்கு இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான தீயணைப்பு வாகனம் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வாகனத்தை உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) நொதோர்ன் தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்றது. கடந்த 2020ஆம் ஆண்டு யாழ். மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்புப் படை வாகனம் விபத்தில் முற்றாக சேதமடைந்திருந்த நிலையில் யாழ் வணிகர் கழகத்தின் ஒருங்கிணைப்பில் நொதோர்ன் தனியார் வைத்தியசாலை ஸ்தாபகர் எஸ்.பி.சாமியால் குறித்த வாகனம் யாழ் மாநகர சபைக்கு கையளிக்கப்பட்டது. கையளிப்பு நிகழ்வைத் தொடர்ந்து, குறித்த தீயணைப்பு வாகனம், தீயணைப்புபடை வீரர்களால் பரிசோதித்து பார்க்கப்பட்டது. குறித்த நிகழ்வில் நொதோர்ன் தனியார் வைத்தியசாலை நிர்வாகத்தினர், யாழ் மாநகர முதல்வர், யாழ்ப்பாண மாவட்ட செயலர், யாழ் மாநகர ஆணையாளர், யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் யாழ் வணிகர் கழக பிரதிநிதிகள், தீயணைப்பு படை பிரிவு உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
Author: admin
வவுனியா வேப்பங்குளத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனியார் காணியில் அமைந்துள்ள கைவிடப்பட்ட மலசலகூடத்தினை புனரமைக்கும் பணியினை மேற்கொண்டிருந்த போதே குறித்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன்போது 60 மில்லி மீற்றர் குண்டு ஒன்றும் கைக்குண்டு ஒன்றும், சிறிய ரக மிதிவெடி ஒன்றையும் பொலிஸார் இனங்கண்டனர். இதுதொடர்பான மேலதிக தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், இதுகுறித்து நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை பிரதி முகாமையாளரை இடமாற்ற கோரி போக்கு வரத்துசபையின் நடத்துனர்கள் சாரதிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் இணைந்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 4 தொழிற்சங்கங்களும் இணைந்து முன்னெடுத்துள்ள பணிபகிஷ்கரிப்பினால், இன்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணிக்கு வெளிமாவட்ட மற்றும் குறுந்தூர பஸ் போக்குவரத்து சேவை தடைப்பட்டுள்ளது. போக்குவரத்து சபையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட முன்னாள் முகாமையாளருடன் பிரதி முகாமையாளர் பல இலஞ்ச ஊழல் மோசடியில் ஈடுபட்டுவருவதாகவும் 10 நடத்துனர்களை வேலையில் இருந்து பணிநீக்கம் செய்துள்ளதாகவும் சாரதிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. அத்துடன், இதுதொடர்பான ஆதாரங்களுடன் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர்கள் மேலும் தெரிவித்தனர். அத்துடன், தமக்கு நீதி கிடைக்கும்வரை இந்த பணிபகிஷ்கரிப்பு போராட்டம் தொடர்ந்து இடம்பெறும் என தொழிற்சங்க தலைவர் துரைராஜா தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் நேற்று (4) ஹிக்கடுவ பிரதான பாடசாலை மைதானத்தில் வைத்து போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. சந்தேகநபர் 29 வயதுடைய பெண் எனவும், அவரிடம் 8 கிராம் 229 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரத்கம முகாமின் விசேட அதிரடிப்படையினர் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். பெண் ஒருவருடன் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக ஹிக்கடுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து குறித்த பெண் நீண்டு காலமாக ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
அதிகரித்துள்ள பணவீக்கத்திற்கு இணையான கொடுப்பனவு, அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்ட அதன் பொதுச்செயலாளர் தம்மிக்க முணசிங்க, 2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் அரச உத்தியோகத்தர்களுக்கு வேதனம் அதிகரிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கை செலவினம் தாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. உணவு பணவீக்கம் 80 சதவீதத்தினையும் கடந்துள்ளது.. அண்மையில் இடைக்கால பாதீடு முன்வைக்கப்பட்ட போதிலும், அதில் எவ்வித ஒதுக்கீடுகளும் செய்யப்படவில்லை. எனவே அரசாங்கத்தின் பணவீக்கத்திற்கான கொடுப்பனவு வழங்க வேண்டும். பொருட்கள் மற்றும் எரிபொருள் விலையினை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தின் பொதுச்செயலாளர் தம்மிக்க முனசிங்க குறிப்பிட்டுள்ளார்.
17 வயது பாடசாலை மாணவியின் ஆபாச காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 20, 23 மற்றும் 24 வயதுடைய சந்தேகநபர்கள் மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த காணொளியை பாதிக்கப்பட்ட மாணவி தனது காதலனுடன் பகிர்ந்துள்ளதாகவும், அவர் அதனை தனது நண்பர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இருப்பினும், நண்பர்கள் பின்னர் சமூக ஊடகங்களில் வெளிப்படையான பாலியல் உள்ளடக்கத்துடன் குறித்த காணொளியை பதிவிட்டுள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களும் மொனராகலை பண்டாரவாடிய, பட்டியாலந்த மற்றும் மகந்தனமுல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லிட்ரோ நிறுவனம் இன்று (05) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, 12.5 கிலோகிராம் சிலிண்டர் 271 ரூபாவாலும், 5 கிலோகிராம் சிலிண்டர் 107 ரூபாவாலும், 2.3 கிலோகிராம் சிலிண்டர் 48 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது லிட்ரோ சமையில் எரிவாயுவின் புதிய விலை இதோ! 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர்- 4,280 ரூபா 05 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர்- 1,720 ரூபா 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர்- 800 ரூபா
பாகிஸ்தானில் ஒரு உணவகத்தில் இரண்டு சிறுவர்களுக்கு தண்ணீர் போத்தல்களில் அசிட் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 27 அன்று பாகிஸ்தானில் ஒரு பிரபல உணவகத்தில் பிறந்தநாள் விருந்து நடைபெற்றுள்ளது. இதில் இரண்டு சிறுவர்களுக்கு தண்ணீர் போத்தல் வழங்கப்பட்டபோது அதில் தண்ணீருக்குப் பதில் அசிட் இருந்தது பின்னர் தெரிந்தது. “ஊழியர்கள் விநியோகித்த தண்ணீர் போத்தலைக் கொண்டு என் மருமகன் கைகளைக் கழுவினான். சிறிது நேரத்திற்குப் பிறகு அவன் அழத் தொடங்கினான். அப்போதுதான் அமிலம் பட்டு அவன் கைகளில் தீக்காயம் ஏற்பட்டது தெரிய வந்தது” என்று பாதிக்கப்பட்ட சிறுவனின் உறவினர் ஒருவர் கூறினார். அதுபோல மற்றொரு தண்ணீர் போத்தலில் இருந்த அசிட்டை குடித்ததால் அவரது இரண்டரை வயது மருமகள் வஜிஹா வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுவன், சிறுமி இருவருக்கும் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் உணவக…
உலக சந்தையில் செப்டம்பர் மாத இறுதியில், 85 டொலராக இருந்த பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்று சுமார் 92 அமெரிக்க டொலர்களை எட்டியது. இந்த நிலையில், பிரென்ட் ரக மசகு எண்ணெய் விலை செப்டெம்பர் இறுதி வாரத்தில் ஒரு தடவை 82 அமெரிக்க டொலர் வரை விலை சரிந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, WTI மசகு எண்ணெய் விலை செப்டெம்பர் இறுதி வாரத்தில் 78 அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்த நிலையில், நேற்று 86 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தயாராக இருந்த ஒன்றரை தொன் மஞ்சள் தொகை தமிழ்நாடு – மதுரை பகுதியில் சுங்க அதிகாரிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான லொறி ஒன்றை சோதனையிட்ட போது, இந்த மஞ்சள் கையிருப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மண்டபம் பகுதியில் இருந்து கடல் மார்க்கமாக இவற்றை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தயார் செய்திருந்தமை அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.