மேலுமொரு நிலக்கரி கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பலில் 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரி கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று (25) நாட்டை வந்தடைந்த இந்த கப்பலில் இருந்து நிலக்கரியை தரையிறக்கும் பணிகள் இன்று (26) ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கமைய, நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகளை இடையூறின்றி முன்னெடுத்துச் செல்ல முடியும் என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Author: admin
பிரிட்டனின் பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்ற பிறகு நாட்டு மக்களுக்கு முதல்முறையாக உரையாற்றினார். கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ரிஷி சுனக்கை ஆட்சி அமைக்க மன்னர் 3ஆம் சார்லஸ் இன்று அழைப்பு விடுத்தார். இதையடுத்து, பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்ற ரிஷி சுனக், பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு சென்ற ரிஷி சுனக், நாட்டு மக்களுக்கு முதல்முறையாக உரையாற்றினார். “நாட்டின் வளர்ச்சியை முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ் விரும்பியதில் தவறில்லை. மாற்றத்தை உருவாக்குவதற்கான அவரது அமைதியின்மையை நான் பாராட்டுகிறேன். ஆனால், பொருளாதாரத்தை கையாள்வதில் சில தவறுகள் செய்யப்பட்டன. தவறான எண்ணம் இல்லையெனினும், தவறுகள் நடந்துவிட்டன. இந்த அரசு அனைத்து நிலைகளிலும் நேர்மையுடனும், பொறுப்புடனும் செயல்படும். பொருளாதார நிலைத்தன்மை மற்றும் உறுதியை ஏற்படுத்துவதே இந்த அரசின் முதல் திட்டமாகும். சில கடினமான முடிவுகள் வரப்போகிறது என்பது இதன் அர்த்தம். நான் வழிநடத்தும் இந்த அரசு, அடுத்த தலைமுறையினருக்கு…
முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை மற்றும் விலங்கு உணவுத் தட்டுப்பாடு காரணமாக, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை தட்டுப்பாடு ஏற்படலாம் என்று அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர். எம். சரத் ரத்நாயக்க தெரிவித்தார். மேற்குறிப்பிட்ட காரணங்களால், சுமார் 50 வீதமான முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை உற்பத்தியை கைவிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அண்மைய காலங்களில் முட்டை விலை கடுமையாக உயர்ந்து வந்தமையால், அதனைக் கட்டுப்படுத்த அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்தது. இந்த கட்டுப்பாட்டு விலை மூலம் ஏற்படும் நஷ்டம் காரணமாக முட்டை உற்பத்தியாளர்கள் இறைச்சிக்காக கால்நடைகளை விற்பனை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, கோழி இறைச்சியின் விலை குறைந்துள்ளதுடன், ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1,000 முதல் 1,200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுவருகின்றது.
பல தசாப்தங்களாக ஆட்சி செய்து கொண்டிருந்த ராஜபக்சர்கள் தற்போது காணாமல் போயுள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மீண்டுமொரு ராஜபக்ச முகாம் நாட்டில் ஆட்சியமைக்க முடியாதளவிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சிதறிப் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் அரசாங்கத்தில் இடம்பெறும் ஊழல் மோசடிகளைக் கண்காணிப்பதற்கு ஜே.வி.பியிலிருந்து ஓரிருவரை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்தால் போதும் என்று மக்கள் எண்ணினர். ஆனால் இன்று ஆட்சியை ஜே.வி.பி.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இதனைக் கூறும் மக்கள் நினைத்தால் எம்மால் தேர்தலில் வெற்றி பெற முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் நுவரெலியா பிரதான மத்திய சந்தைக்கு அருகில் பயணித்துக் கொன்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்துள்ளது குறித்த முச்சக்கர வண்டிக்கு நுவரெலியா கண்டி வீதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் நிரப்பிக் கொண்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணித்துக் கொன்டிருந்த போது திடீரென்று தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. குறித்த விபத்தானது இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாகவும் , விபத்தின் போது முச்சக்கரவண்டியில் சாரதி மற்றும் சாரதியின் மனைவி, பிள்ளை ஒருவரும் இருந்ததாகவும் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் முச்சக்கரவண்டி திடீரென தீ பிடித்த நிலையில் அதனை அணைக்க பலரும் போராடி தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே வாகனம் தீ பிடித்து இருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகம் தெரிவிக்கப்படுகிற சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், பேர்த்தில் இன்று நடைபெற்றுவரும் இலங்கைக்கெதிரான சுப்பர் – 12 குழு ஒன்றுப் போட்டியில் அவுஸ்திரேலியா முதலில் களத்தடுப்பிலீடுபடுகிறது.
மாவனெல்லை-உத்துவன்கந்தை பிரதேசத்தில் இன்று (25) இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் காயமடைந்த 38 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்தில் படுகாயமடைந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மரணமடைந்துள்ளார். காயமடைந்தவர்கள் மாவனெல்ல, கேகாலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டு பஸ் வண்டிகளினதும் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் உள்ள முக்கிய சில புள்ளிகள், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து புதியதொரு கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் எனத் தெரியவருகின்றது. இதற்கான பேச்சுகள் வெற்றியை நோக்கி நகர்கின்றன எனவும், ஐ.தே.கவின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான ரவி கருணாநாயக்கவின் மத்தியஸ்தத்துடனேயே பேச்சுகள் தொடர்கின்றன எனவும் சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, அடுத்த வருடம் ஆரம்பத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இந்தக் கூட்டணி போட்டியிடும் எனவும், ‘அன்னம்’ புதிய கூட்டணியின் சின்னமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. கண்டி, கம்பஹா, காலி, பொலனறுவை, பதுளை, கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் உள்ள மொட்டு கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் இந்தக்கூட்டணியில் இணையவுள்ளனர். அதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய தூண்களில் ஒருவரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும், விரைவில் தீர்க்கமானதொரு அரசியல் முடிவொன்றை எடுக்கவுள்ளார் எனவும் அறியமுடிகின்றது.
இரட்டைக் குடியுரிமை வைத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியது நாடாளுமன்றம் அல்ல தேர்தல்கள் ஆணைக்குழு என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்தல் ஆணையமே தெரிவு செய்வதால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். மேலும், இரட்டைக் குடியுரிமை வைத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நீதிமன்றில் சவால் விடுக்கும் திறன் நாட்டின் எந்தவொரு பிரஜைக்கும் இருப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டார். இரண்டு அல்லது மூன்று எம்.பி.க்கள் இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பதாகத் தமக்குத் தெரிய வந்துள்ளதாகத் தெரிவித்த சபாநாயகர், வேறு எம்.பி.க்கள் எவரேனும் இருக்கின்றார்களா என்பது தமக்குத் தெரியாது எனவும் தெரிவித்தார். இரட்டைக் குடியுரிமை குறித்து சட்டப்படி செயல்படாத வரையில் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்றார். சட்டங்களை தயாரிப்பது மட்டுமே நாடாளுமன்றத்தின் செயற்பாடு எனவும் அந்த சட்டங்களை நடைமுறைப்படுத்துவது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பொறுப்பாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பொகவந்தலாவ பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ நகருக்கு அருகாமையில் உள்ள கெசல்கமுவ ஓயாவிலிருந்து குறித்த ஆணின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சடலம் ஒன்று ஆற்றில் மிதப்பதனை கண்டு நபர் ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலினை அடுத்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த நபர் எவ்வாறு இறந்தார் என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.