நாட்டின் தேவைக்கு அதிகமாக இறப்பரை இறக்குமதி செய்யப்படுவதால் நாட்டில் இறப்பரின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்.ரஜித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு நாட்டின் தேவைக்கு அதிகமாக 16000 மெற்றிக் தொன் இறப்பர் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், 2018 ஆம் ஆண்டு தேவைக்கு அதிகமாக 13000 மெற்றிக் தொன் இறப்பர், 2019 இல் 12000 மெற்றிக் தொன், 2019 இல் 14000 மெட்ரிக் தொன் மற்றும் இந்த ஆண்டு 10000 மெற்றிக் தொன் இறப்பர் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,நாட்டின் ஏற்றுமதி தொழில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், நாட்டின் தேவைக்காக மட்டுமே ரப்பர் இறக்குமதியை ஒழுங்குபடுத்த குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Author: admin
தெற்காசியாவின் முதலாவது டிஸ்னிலேண்ட் வணிக நோக்கு பூங்காவை ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா தெரிவித்துள்ளார். இலங்கையில் 18 பில்லியன் டொலர் முதலீட்டுக்கான ஆரம்பத் திட்டங்களைப் பற்றி கலந்துரையாடுவதற்காக இராஜாங்க அமைச்சர் அடுத்த மாதம் அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அறியமுடிகின்றது. மேலும் நவம்பர் மாத இறுதியில் ஆய்வுகளை நடத்துவதற்கு டிஸ்னி நிறுவன முதலீட்டாளர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மத்தள விமான நிலையம் உள்ளிட்ட பிரதேசத்தில் உள்ள பாரிய உட்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்துவதற்கு இவ்வாறான முதலீடு நன்மை பயக்கும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் 09 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தறை, புத்தளம், பதுளை, இரத்தினபுரி மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலேயே டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவக்கூடும் என்பதால், நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருக்க வேண்டாம் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தீபாவளிப் பண்டிகையானது அனைவரது அபிலாசைகளையும் பூர்த்தி செய்து இலங்கையை சௌபாக்கியம் நிறைந்த நாடாக உருவாக்கும் சிறந்த எதிர்காலத்தின் தொடக்கமாக அமைய வேண்டுமென பிரார்த்திப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதனை தெரிவித்துள்ளார். மேலும் வண்ண மயமான கலாசார நிகழ்வான தீபாவளி நன்னாளில் வாழ்த்து தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன் என்று தெரிவித்த ஜனாதிபதி அஞ்ஞானம் நீங்கி, மெய்ஞானம் பிறக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அதேபோல நம் தாய் நாட்டை முன்னொருபோதும் இல்லாத விதத்தில் சூழ்ந்திருக்கும் இருளை விரட்டி, ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயற்பட வேண்டும் என தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
போதை பாக்குடன் பாடசாலைக்கு வந்த மாணவன், தனது கையினை பிளேட்டால் அறுத்து காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெல்லிப்பளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று (21) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த மாணவன் போதை பாக்குடன் பாடசாலைக்கு வருகை தந்துள்ளார். அது தொடர்பில் அறிந்து கொண்ட ஆசிரியர்கள் மாணவனிடம் விசாரணைகளை முன்னெடுத்து பாக்கினையும் மீட்டு இருந்தனர். அதனை அடுத்து அதிபர் ஊடாக அப்பகுதி சுகாதார பரிசோதகருக்கு சம்பவம் தொடர்பில் அறிவித்த போது , குறித்த மாணவன் தனது கையினை வெட்டி காயப்படுத்தி உள்ளான். காயத்திற்கு உள்ளான மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். மாணவனுக்கு எங்கிருந்து பாக்கு கிடைத்தது என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் தினங்களில் நாடாளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கும் நாடாளுமன்ற விவாதங்களைப் பார்வையிடுவதற்கும் பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ முன்வைத்த யோசனைக்குப் நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாடாளுமன்றத்தில் உள்ள பொதுமக்கள் கலரியிலிருந்து நாடாளுமன்ற விவாதங்களைப் பார்வையிடப் பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். எனவே, பாடசாலை அதிகாரிகள் தங்களது விண்ணப்பத்தை படைக்கலசேவிதருக்குக் கடிதம் மூலமாகவும் 011 2777 473 அல்லது 011 2777 335 என்ற தெலைநகல் இலக்கங்கள் மூலமாகவும் சமர்ப்பிக்க முடியும்.
கொழும்பு -கிராண்ட்பாஸ்-செயின்ட் ஜோசப் வீதியில் வீடொன்றின் மீது சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிராண்ட்பாஸில் வசிக்கும் 55 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் நேற்று இரவு முதியவர் ஒருவரை பராமரிப்பதற்காக அருகில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். இதன்போது, குறித்த வீட்டின் சுவர் அவர் மீது இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
வெலிக்கந்த பகுதியில் இராணுவ ஜீப் வண்டியொன்று விபத்திற்குள்ளானதில் இராணுவ விசேட அதிரடிப்படையின் கப்டன் தர அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர். இன்று சனிக்கிழமை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இலங்கை இராணுவத்தின் 8806 இலக்கம் கொண்ட டிஃபென்டர் ரக ஜீப் கட்டுப்பாட்டை இழந்து முத்துவெல்ல பகுதியில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் இராணுவத்தின் சிறப்புப் படையைச் சேர்ந்த கேப்டன் தேவிந்தா வுட்வார்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கனடாவில் கைத்துப்பாக்கிகளை விற்பனை செய்ய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தடை விதித்துள்ளார். கைத்துப்பாக்கியை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி வன்முறை தொடர்ந்து அதிகரிப்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை உள்ளதாகவும், கனடாவில் கைத்துப்பாக்கிகளுக்கான சந்தையை முடக்கிவிட்டதாகவும் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
சீனாவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் இருந்து முன்னாள் ஜனாதிபதி ஹு ஜின்டாவோ வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். பெய்ஜிங்கில் உள்ள அரங்கம் ஒன்றில் இன்று நடைபெற்ற மாநாட்டின்போது ஜனாதிபதி ஜி ஜின்பிங் அருகில் முன்னாள் ஜனாதிபதி 79 வயதான ஹு ஜின்டாவோ அமர்ந்திருந்தார். அப்போது இரண்டு பணியாளர்கள் அவரை அங்கிருந்து வலுக்கட்டாமாக வெளியே அழைத்துச்சென்றனர்.