தங்கத்தின் விலை இன்றும் (புதனக்கிளமை) அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றைய தங்கம் விலை பின்வருமாறு பதிவாகியுள்ளது. * அவுன்ஸ் 680,742 ரூபாய் *1 கிராம் 24 கரட் ரூ. 24,020.00 *24 கரட் 8 கிராம் (1 பவுன்) ரூ. 192,100.00 *1 கிராம் 22 கரட் ரூ. 22,020.00 *22 கரட் 8 கிராம் (1 பவுன்) ரூ. 176,150.00 *1 கிராம் 21 கரட் ரூ. 21,020.00 *21 கரட் 8 கிராம் (1 பவுன்) ரூ. 168,150.00
Author: admin
இலங்கை உட்பட பல நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அந்த நாடுகளில் வறுமை நிலை அதிகரித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி வெளியிட்டுள்ள ´Global Economic Prospects 2023´ என்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வறுமையால் பல குடும்பங்கள் ஊட்டச்சத்து மிக்க உணவுக்கான தமது செலவினங்களைக் குறைத்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், 2022 இல் இலங்கையின் உற்பத்தி 9.2% குறைவடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, இலங்கைக்கான அந்நிய செலாவணி வரத்து குறைவடைந்துள்ளதால், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் இறக்குமதி தடைபட்டுள்ளதுடன், வெளிநாட்டுக் கடனை செலுத்துவதும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அல்லது நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் வருமானம், அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், நலத்திட்ட உதவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில திட்டங்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்துவதற்கான திட்டம் தொடர்பில் தற்போது சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடன் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் ஷெஹான் சேமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மாதத்திற்கான ஓய்வூதிய கொடுப்பனவிற்கான பணம் இன்று(புதன்கிழமை) வங்கிக் கணக்குகளுக்கு விடுவிக்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார். திறைசேரியின் நிதி நிலை காரணமாக வங்கிகளுக்கு பணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார். ஓய்வூதியத்திற்காக மாதாந்தம் சுமார் 26 பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாகவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சமுர்த்தி உள்ளிட்ட அரச மானியங்களுக்கு தேவையான பணத்தை குறிப்பிட்ட திகதிகளில் வழங்குவதற்கு சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதிக்குள் வெளியிட பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த டிசெம்பர் 18 ஆம் திகதி பரீட்சை நடைபெற்றதுடன், 334,698 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.
உள்ளாட்சிமன்ற தேர்தலை இலக்கு வைத்து முதலாவது அரசியல் கூட்டணி இன்று(புதன்கிழமை) உத்தியோகப்பூர்வமாக உதயமாகவுள்ளது. மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா சபாகய, டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை, அநுர பிரியதர்சன யாப்பா அணி என்பன இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கவுள்ளன. கூட்டணி அங்குரார்ப்பண நிகழ்வு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெறவுள்ளது. இந்த புதிய கூட்டணி நடைபெறவுள்ள தேர்தலில் ஹெலிகொப்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.
2023ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் இலங்கையில் 2,142 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 02 ஆம் திகதி முதல் 07 திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இந்த எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. குறித்தக் காலப்பகுதியில் கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, 440 பேர் டெங்கு நோயாளர்களாக உள்ளனர். அத்துடன், குறித்த காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் 433 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 273 பேரும், கல்முனை மாவட்டத்தில் 147 பேரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 128 டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். இது தவிர கடந்த 7 நாட்களில் களுத்துறை மற்றும் கண்டி மாவட்டங்களில் அதிக சதவீத டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு அல்லது அமைச்சரவை அமைச்சர்களுக்கு மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அதிகாரம் இல்லை என முன்னாள் எரிசக்தித்துறை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார். மின்சார சபை சட்டம் மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் அடிப்படையில் இது ஏற்புடையது இல்லை என்றும் நேற்று (10) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் தெரிவித்தார். கடந்த காலத்தை பாதிக்கும் வகையில் கட்டணத்தை மாற்றுவதற்கு இந்த தரப்புக்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். எனினும் மின்சாரக் கட்டணத்தை அறிவிப்பதற்கான முழு அதிகாரமும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயல்பாடுகளில் ஜனாதிபதி எவ்விதத்திலும் தலையிடவில்லை என ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் மாறுப்பட்ட கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி தலைவரின் அழைப்பை ஏற்று தங்கள் செல்லவில்லை என்றும் நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி விடுத்த அழைப்பிற்கு மதிப்பளித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம் என்றும் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இதனால் ஆணைக்குழுவின் சுயாதீனத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் செலுத்தும் கட்டு பணத்தை ஏற்குமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வைப்புத் தொகையை ஏற்றுக்கொள்வது அவர்களின் பொறுப்பாகும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்தாயக்க அனைத்து மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் கடிதம் மூலம் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஜனவரி 18 ஆம் திகதி முதல் ஜனவரி 21 ஆம் திகதி நண்பகல் வரை வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தேர்தல் அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.