அண்மையில் முன்னெடுக்கப்பட்ட வரி திருத்தத்தை அரசாங்கம் திரும்பப் பெறத் தவறினால், அடுத்த வாரம் பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பல தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன. இலங்கை துறைமுக அதிகாரசபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை ஆகிய தொழிற்சங்கங்கள் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் வங்கித் தொழிற்சங்கங்கள் இணைந்து நேற்று(புதன்கிழமை) அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. கடந்த வருடம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் புதிய திருத்தத்தை இரத்துச் செய்யுமாறு அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக கோரி வருகின்றனர். அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இவ்வளவு அதிக வரி விதிப்பது நியாயமற்றது என தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. தங்களது கோரிக்கையை அரசாங்கம் தொடர்ந்தும் புறக்கணித்தால் எதிர்வரும் 17ஆம் திகதி மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.
Author: admin
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் சகோதர சிங்கள மக்கள் அச்சம் கொள்ளவேண்டியதில்லை. மாகாணசபை முறைமை என்பது வடக்கு, கிழக்குக்கு மட்டும் உரித்தானது அல்ல. நாட்டில் ஏனையப் பகுதிகளில் உள்ள மக்களும் அந்த முறைமையின் ஊடாக சிறந்த சேவையைப் பெறலாம் என இலங்கை தொழிலார் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். யட்டியாந்தோட்ட எக்கலாஸ் கீழ்பிரிவு தோட்டத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசின் கொள்கைத்திட்டத்தை முன்வைத்து முக்கிய பல விடயங்களை எடுத்துரைத்திருந்தார் குறிப்பாக மலையக மக்களுக்கு பிரஜாவுரிமை கிடைக்கப்பெற்றிருந்தாலும், பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் இன்னும் எஞ்சியுள்ளன. இவற்றை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மலையக எம்.பிக்களுடன் பேச்சு நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார் அத்துடன், மலையக மக்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் சம்பந்தமாக கூடுதல் கவனம் செலுத்தப்படும்…
துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் ஏற்பட்ட பேரழிவுகரமான இரண்டு நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆயிரத்தை கடந்துள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனிடையே, அருகிலுள்ள சிரியாவில், நாட்டின் உள்கட்டமைப்பை அழித்த பல வருட மோதல்களால் நிவாரண முயற்சிகள் சிக்கலாகிவிட்டதாக கூறப்படுகின்றது. குறிப்பாக நிலநடுக்கத்திற்குப் பிறகு துருக்கிக்கும் சிரியாவுக்கும் இடையிலான பாப் அல்-ஹவா கடவை வீதிகள் மோசமாக சேதமடைந்ததால் மூடப்பட்டுள்ளது. ஆனால், சிரியாவிற்கு உதவ மேலும் இரண்டு எல்லை வாயில்களைத் திறக்கவுள்ளதாக, , துருக்கியின் வெளியுறவு அமைச்சர் மெவ்லுட் கவுசோக்லு தெரிவித்தார். இதேவேளை, துருக்கியில் அவசர சேவைகளின் பதில் மிகவும் மெதுவாக இருப்பதாகவும், அரசாங்கம் மோசமாக தயாராக இருப்பதாகவும் விமர்சகர்கள் கூறினர். ஆனால், எர்டோகன் அரசாங்கம் சில சிக்கல்களை எதிர்கொண்டதை ஏற்றுக்கொண்டார், ஆனால் நிலைமை இப்போது கட்டுப்பாட்டில் உள்ளது என கூறினார். துருக்கியின் பிரதான எதிர்க்கட்சியின் தலைவர் கெமல் கிலிக்டரோக்லு இதற்கு உடன்படவில்லை.
இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இன்று (வியாழக்கிழமை) நாக்பூரில் இப்போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணிக்கு ரோஹித் சர்மாவும், அவுஸ்ரேலிய அணிக்கு பெட் கம்மின்சும் தலைமை தாங்கவுள்ளனர். உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை நிர்ணயம் செய்வதால் இந்த டெஸ்ட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவுஸ்ரேலிய அணி இந்தியாவில் தொடரை கைப்பற்றி 19 ஆண்டுகள் ஆகிறது. இம்முறை அவுஸ்ரேலியா அணி தொடரை வென்று இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமா அல்லது இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துமா என பொறுத்திருந்து பார்ப்போம்… அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கோடீஸ்வர தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் சயனைட் உடலுக்குள் கலந்ததால் உயிரிழந்ததாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (08) அளுத்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மரணத்திற்கான காரணம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட மருத்துவ சாட்சியங்கள் முரண்பாடானவை என ஷாப்டர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி அனுஜ பிரேமரத்ன தெரிவித்திருந்தார்
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகமும், உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் தலைவருமான பான் கீ மூன், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை புதன்கிழமை பாராளுமன்றத்தில் சந்தித்துள்ளார். பான் கீ மூனை, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க ஆகியோர் வரவேற்றுள்ளனர். உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் என்ற ரீதியில் பான் கி மூன், பசுமை அபிவிருத்தி, நிலைபேறான அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்தியிருந்ததுடன், கார்பன் வெளியீட்டைக் குறைத்து நிலைபேறான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பப் புதிய கூட்டாண்மைகளை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும்போது தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்களை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு சுமார் 70,000 வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளது.
துருக்கி ஜனாதிபதி ரசெப் தயிப் எர்டோகனுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசி வாயிலாக உரையாடினார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பாரிய அழிவைச் சந்தித்துள்ள துருக்கி மக்களுக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்க இலங்கை மக்கள் தயாராக உள்ளார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பின்னர் காணாமல் போயுள்ள இலங்கை பெண்ணை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. 69 வயதான குறித்த பெண் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என அங்காராவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
மக்கள் பணத்தை தவறாக பயன்படுத்தியவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கஸ்பேவ பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.