இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்வதற்கான மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் அறிக்கை அரசாங்கத்தின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்கவினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 7 ஆம் சரத்தின் அடிப்படையில் அமைச்சரின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரணதுங்க தெரிவித்துள்ளார். முன்னதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மின்சார கட்டண அதிகரிப்பு யோசனைக்கு எதிர்ப்பை வெளியிட்டது முதல், ஜனக ரத்நாயக்கவை பதவியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Author: admin
அகதிகளாகப் பதிவு செய்து 92,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தற்போது தமிழ்நாட்டில் தங்கியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று உறுதிப்படுத்தியுள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் , 92,435 இலங்கையர்கள் அகதி முகாம்களுக்குள்ளோ அல்லது வெளியேயோ தமிழ் நாட்டில் தங்கியுள்ளனர் என்றார். தமிழகத்தில் தற்போது மொத்தம் 106 அகதி முகாம்கள் இயங்கி வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார். தமிழக அகதி முகாம்களில் தற்போது 19,046 குடும்பங்களைச் சேர்ந்த 58,435 நபர்கள் தங்கியிருப்பதாக அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
கிளிநொச்சி போலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பக்கணை பகுதியில் பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் இன்று (09) அதிகாலை 3.30 குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. கண்டாவலைப் பகுதியில் இருந்து புளியம்பொக்கணை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மாட்டுடன் மோதியதி விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் சிறு காயங்களுக்குள்ளானார். சம்பவ இடத்தில் இரண்டு கால்நடைகளும் இறந்துள்ளன. 18 வயதுடைய புளியம்பக்கடை பகுதியைச் சேர்ந்த இளைஞனே சம்பவத்தில் பலியாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட 41 இலங்கையர்கள் இன்று (09) காலை விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குறித்த 41 இலங்கையர்களும் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு கிறிஸ்மஸ் தீவில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு இன்று (09) காலை அனுப்பி வைக்கப்பட்டனர். அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான ASY-013 விமானத்தில் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவிலிருந்து தமது பயணத்தை ஆரம்பித்த இவர்கள் இன்று காலை 9.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணம் மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும், இவர்கள் பல நாள் மீன்பிடி படகுகள் மூலம் கடல் கடந்து அவுஸ்திரேலியா சென்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தாம் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் கட்சி சார்பற்ற வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக நெத் வானொலியுடன் அவர் குறிப்பிட்டுள்ளார். எழுபத்தைந்து வருடங்களாக இந்நாட்டின் நெருக்கடியான பொருளாதார நிலைமையை நிர்வகிப்பதற்கு புதிய பொருளாதாரக் கொள்கைகளை தாம் முன்வைப்பதாகவும் அவர் கூறினார். மதத் தலைவர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டு. கரடியனாறு பிரதேசத்தில் இருந்து மட்டக்களப்பு நகருக்குள் சட்டவிரோதமாக முச்சக்கரவண்டி ஒன்றில் மரை இறைச்சியை கடத்திச் சென்ற ஒருவரை நேற்று திங்கட்கிழமை (8) மாலை வலையிறவு பாலத்தில் வைத்து கைது செய்துள்ளதுடன் 30 கிலோ மரை இறைச்சியை மீட்டுள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு புலனாய்வு பிவிரினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து தலைமையக பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவதினமான நேற்று மாலை 6 மணியளவில் வலையிறவு பாலத்தில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதன்போது நகரை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் இருந்து 30 கிலோ மரை இறைச்சியை மீட்டதுடன் ஒருவரை கைது செய்ததுள்ளதோடு, கடத்தலுக்கு பாவிக்கப்பட்ட முச்சக்கரவண்டியையும் மீட்டனர். இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது கைது செய்யப்பட்டார். இராணுவம் குறித்து அவதூறாக பேசியது உட்பட பல்வேறு வழக்குகள் இம்ரான் கான் மீது பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. சில மாதங்களுக்கு முன்பு, இம்ரான் கானை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நாடு முழுவதும் வெடித்த கலவரத்தை தொடர்ந்து அவரது கைது நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று இம்ரான் கானை பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினர் கைது செய்தது.
2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மாற்றுவது தொடர்பில் ஆராயப்படுவதாக த இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து போட்டிகள் மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அண்மைய நாட்களில் அதிகரித்து வருகின்றன. பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளதார நெருக்கடி, இந்திய வீரர்களை பாகிஸ்தானுக்கு அனுப்புவதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி வழங்காமை போன்ற விடயங்கள் இதில் தாக்கம் செலுத்தியுள்ளன. இந்தியா இந்த போட்டிகளை டுபாயில் விளையாடுவதற்கு எதிர்பார்த்திருந்ததாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. அதேபோன்று ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் பாகிஸ்தானுக்கு வெளியே போட்டியை நடத்துவதற்கான யோசனையை ஆதரித்ததாக தெரிவிக்கப்படுகின்றன. இது குறித்த தீர்மானம் இந்த மாத இறுதியில் எடுக்கப்படும் என த இந்தியன் எக்ஸ்பிரஸ் மேலும் தெரிவித்துள்ளது. ஆசியக் கிண்ணக் கிரிக்கட் தொடரை நடத்துவதற்கு ஓமன் முன்வந்த போதிலும் நிபந்தனைகளுக்கு அமைய தற்போது இலங்கை ஒரு விருப்பமாக கருதப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் இந்த கிரிக்கெட்…
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள வளிமண்டல நிலை இன்று பங்களாதேஷ் மற்றும் மியான்மரை நோக்கி நகர்ந்து புயலாக மாறும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த காலநிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்யும். விசேடமாக மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பலத்த காற்று மற்றும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் எதிர்வு கூறியுள்ளது.
மன்னாரில் கடந்த சில நாட்களாக சிறுவர்களை இலக்கு வைத்து கடத்தல் முயற்சிகள் இடம்பெறுவதாகவும் கடந்த சனிக்கிழமை மற்றும் நேற்றைய தினம் மக்கள் நடமாட்டம் குறைந்த பாதை வழியாக பயணித்த இரு சிறுவர்களுக்கு உணவு பொருட்களை வழங்கி கடத்த முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டதாக பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் குறித்த விடயம் மாவட்ட அரசாங்க அதிபர், வலயக்கல்வி பணிப்பாளர், மன்னார் பொலிஸார், இரானுவத்தினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் இன்று (09) மன்னாரில் உள்ள பாடசாலைகளுக்கு விசேட இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருப்பதுடன் பொலிஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேநேரம் அதிகளவான பெற்றோர்களும் பிள்ளைகளுடன் பாடசாலைக்கு வருவதையும் மாணவர்கள் குழுக்களாக பயணிப்பதையும் வீதிகளில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. மேலும் குறித்த கடத்தல் முயற்சி தொடர்பில் நேற்றைய தினம் மன்னார் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் குறித்த கடத்தல் கும்பல் மற்றும் வாகனம் தொடர்பாக மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.