சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார் ஜப்பானில் நடைபெற்ற ஆசியாவின் எதிர்காலம் மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் அங்கிருந்து மலேசியா வழியாக ஜனாதிபதி நாடு திரும்பியுள்ளார் நேற்றிரவு 11 மணியளவில் மலேசியா விமான சேவை விமானம் ஒன்றில் ஜனாதிபதி நாட்டை வந்தடைந்ததாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Author: admin
மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் பன்றிகளுக்கு வைரஸ் நோய் பரவி வருவதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. பன்றிகளின் சுவாச மண்டலத்தில் ஏற்படும் இந்த வைரஸ் நோய் TRRS என்ற பெயரால் அறியப்படுவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் டொக்டர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்தார். இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட பன்றிகள் உயிரிழப்பதாகவும் நோய்க்கான தடுப்பூசிகளை உடனடியாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஹேமலி கொத்தலாவல குறிப்பிட்டார். எவ்வாறாயினும், இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவும் அபாயம் இல்லை என அவர் கூறினார்.
டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழை உடனடியாக வெளியிட தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். புத்தளம் மாவட்டத்தில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் இல்லாதவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கும் நடமாடும் சேவையில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொழிநுட்ப அமைச்சுடன் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை நாளை இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையே நாளை நடைபெறவுள்ளது. ஜூன் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பரீட்சையில் 4, 72,553 மாணவர்கள் தோற்றவுள்ளனர். பாடசாலை மூலம் 3,94,450 பேர் தோற்றவுள்ளனர். நாடளாவிய ரீதியில் உள்ள 3,568 பரீட்சை மத்திய நிலையங்களுக்குமான வினாத்தாள்கள் விநியோகிக்கும் நடவடிக்கை நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பமாகியது. பரீட்சைக்காக 40 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, வடமேல், கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். # பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல். • அனுராதபுரம் – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம். • மட்டக்களப்பு – பிரதானமாக சீரான வானிலை. • கொழும்பு – பிரதானமாக சீரான வானிலை. • காலி – பிரதானமாக சீரான வானிலை. • யாழ்ப்பாணம் – பிரதானமாக சீரான வானிலை.…
வவுனியா – கூமாங்குளம் கிராம அலுவலகத்தில் மக்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த அரிசி பாவனைக்கு ஒவ்வாத நிலையில் காணப்படுவதாக தெரிவித்து குறித்த அரிசி களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த கட்டிடம் சுகாதார பிரிவினரினால் சீல் வைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களுக்கு 10கிலோ அரிசி பை விகிதம் வழங்குவதற்காக கூமாங்குளம் கிராம அலுவலர் பிரிவுக்கு ஓப்பந்தகாரரான வவுனியாவிலுள்ள பிரபல அரிசி ஆலையினால் நேற்று (26.05.2023) காலை 4860 கிலோ அரிசி (10கிலோ பை விகிதம் 486 அரிசி பை) இறக்கப்பட்டது. குறித்த அரிசி பைகள் மக்களுக்கு நேற்றையதினமே பகிர்ந்தளிப்பட்டப்பட்டதுடன், அவை பழுதடைந்த நிலையில் காணப்பட்டத்தினையடுத்து பொதுமக்கள் சுகாதார பிரிவினருக்கு தகவல் வழங்கியிருந்தனர். சுகாதார பிரிவினர் கூமாங்குளம் கிராம சேவையாளர் அலுவலகத்திற்கு வருகை மேற்கொண்ட சுகாதார பிரிவினர் குறித்த அரிசியினை பரிசோதனைக்குட்படுத்தியதுடன், அவை பாவனைக்கு ஓவ்வாத நிலையில் காணப்படுவதினை உறுதிப்படுத்தியதுடன் அலுவலகத்தின் களஞ்சியசாலையினை சீல் வைத்தனர்.
நேற்றைய தினம் வரையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, 19.8 வீதத்தால் வலுப்பெற்றுள்ளதாக மத்திய வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி நேற்றைய தினம், 295 ரூபா 62 சதமாகவும், விற்பனைப் பெறுமதி 308 ரூபா 54 சதமாகவும் காணப்பட்டது. இதேநேரம், யூரோவுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, 18.9 வீதத்தாலும், ஸ்ரேலிங் பவுண்ஸுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, 17 வீதத்தாலும் வலுப்பெற்றுள்ளது. இந்திய ரூபாவுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, 19.7 வீதத்தாலும், ஜப்பான் யென்னுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, 26.4 வீதத்தாலும் வலுப்பெற்றுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அம்பலாங்கொட தர்மசோக பாடசாலையின் பிரதி அதிபர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள 4 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. நேற்று (26) பெந்தர பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட மோட்டார் சைக்கிளில் இருந்த இரத்தக் கறைகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பிரதி அதிபர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை பெற்று வருகின்றார்.
தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகளுக்கு அவரது தாயாரின் மரபணு (DNA) கோரப்பட்டுள்ளது. தாயாரின் இரத்த மாதிரிகளை அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கைகளை கோருமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்று (26) உத்தரவிட்டுள்ளார். அவரது தாயார் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் ரத்த மாதிரிகளை பெற்றுக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் தொடர்பான இரண்டாவது பிரேத பரிசோதனை நேற்று (26) கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கொழும்பு பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவப் பேராசிரியர் அசேல மெண்டிஸ் தலைமையிலான ஐவர் அடங்கிய நிபுணர் குழுவினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக கிறிஸ்தவ மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மீண்டும் மன்னிப்பு கேட்டுள்ளார். ஏனைய மதங்கள் தொடர்பில் கிறிஸ்தவ மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ அண்மையில் வெளியிட்ட கருத்து நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் அவருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்திருந்தது. இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த 21 ஆம் திகதி அவர் தனது அறிக்கையினால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு மன்னிப்பு கோருவதாக சிங்கப்பூரில் இருந்து தெரிவித்துள்ளார். இதேவேளை, தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி ஜெரோம் பெர்னாண்டோ தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் நேற்று (26) அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். மேலும் தனது கருத்து குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து மீண்டும் மன்னிப்பு கேட்டுள்ளார்.