முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நடப்பு பொருளாதார பிரச்சினைகளுக்கு பொறுப்புக்கூறவேண்டும் என்ற அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ரொயட்டர் செய்திச்சேவை தெரிவித்துள்ளது. அத்துடன் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராகவும் விசாரணைகளை முன்னெடுக்க உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பில் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெசனல் உட்பட்ட தரப்புக்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களின் மீதே இந்த அனுமதி இன்று வழங்கப்பட்டுள்ளது.
Author: admin
கேகாலை மாவட்டம் மாவனல்ல கல்விவலையத்திற்குட்பட்ட தோத்தலோயா தமிழ் வித்தியால அதிபருக்கு எதிராக இன்றைய தினம் தோட்ட மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த பாடசாலையில் ஆசிரியர்கள் காலை 9 மணிக்கு வருகை தந்து 10 மணி அளவில் சென்று விடுவதாகவும் நமது குழந்தைகளுக்கு சரியான கல்வி கிடைப்பது இல்லை என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். அதுமட்டுமல்லாது ஆசிரியப்பற்றாக்குறையால் மாணவர்களுக்கு சரியான கல்வி கிடைப்பதில்லை எனவும், அதிபர் சரியாக பாடசாலைக்கு வருவதில்லை என்றும் குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஆகியன பிற்போடப்பட்டுள்ளன. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை, 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சவாலில் இருந்து நாட்டை மீட்டெடுக்க நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் எனவும், அதற்கு துல்லியமான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது அவசியம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரவித்தார். பிரசாரம் இன்றி எதனையும் சாதிக்க முடியாது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை தாமதமின்றி மக்களுக்கு கொண்டு சேர்க்க அர்ப்பணிப்புடன் செயற்படுமாறும், அனைத்து ஊடக செயலாளர்களிடமும் கோரிக்கை விடுத்தார். அரச தொடர்பாடல் பொறிமுறை தொடர்பில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் ஆகியோரின் ஊடக செயலாளர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று (07) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த மாணவர் செயற்பாட்டாளர் ஹஷான் ஜீவந்த குணதிலக்க, விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த அவர், நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டதையடுத்து, அவரது தடுப்புக் காவல் உத்தரவும் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் 40 வீதமானோர் பட்டினியை எதிர்கொள்வதாக, மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் பணிப்பாளரும், உலக தொழிலாளர் சம்மேளனத்தின் செயலாளருமான கலாநிதி சிவப்பிரகாசம் தெரிவித்துள்ளார். கொட்டகலையில் இடம்பெற்ற போசாக்கு மட்டத்தை விருத்தி செய்வதற்கான கருத்து பரிமாற்ற தெளிவூட்டல் நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன், எஞ்சிய 60 வீதமானோர் ஒருவேளை அல்லது இருவேளை உணவையே எடுத்துக்கொள்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். கர்ப்பிணி தாய்மார், பாலூட்டும் தாய்மார் மற்றும் சிறார்களின் உணவு உட்கொள்ளல் நிலைமை மோசமாக உள்ளதாகவும் அவர் கூறினார். மலையக பிரதேசத்தில் போசாக்கு மட்டமானது மிகவும் குறைவாக காணப்படுகின்ற நிலையில், 6 பிரதேசங்களில் மனித அபிவிருத்தி தாபனம் போசாக்கு திட்டத்தை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மனித அபிவிருத்தி தாபனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பி.பி.சிவப்பிரகாசம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் விதுர சம்பத் கலந்து கொண்டதோடு, பிரதேச கிராம சேவகர்கள், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின்…
நாட்டு மக்கள் உட்கொள்ளும் உணவுப் பொருட்களின் தரம் தொடர்பில் ஆய்வொன்றை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்து ஆராயப்படும் என அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆய்விற்காக 25-க்கும் மேற்பட்ட அத்தியாவசிய உணவு வகைகள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதன் மாதிரிகளை சேகரிக்கும் பணிகள் அடுத்த மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன. கடந்த காலங்களில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் தரம் குறித்து பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன. அதனை பரிசீலித்ததன் பின்னரே இந்த தீர்மானத்தை எடுத்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச வருமானத்திற்கு பங்களிப்பு செலுத்தும் அரச நிறுவனங்களில் பெருமளவு ஊழியர்கள் பற்றாக்குறை காணப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதற்கான புதிய ஆட்சேர்ப்புகளை தற்போது மேற்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், அரச சேவையில் ஈடுபட்டுள்ள இளம் ஊழியர்களுக்கு போட்டிப் பரீட்சை நடாத்தி அதன் மூலம் ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அறிவித்துள்ளார்.
எம்பிலிபிட்டிய – கொலன்ன, ஹேயஸ் தோட்டத்தின் பீ பிரிவில் வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீது இனந்தெரியாதோர் தீ மூட்டி எரித்து நாசமாக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் இன்று அதிகாலை 1.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹேயஸ் தோட்டத்தின் பீ பிரிவை சேர்ந்த சிவகுமார் என்பவரின் முச்சக்கர வண்டியே இவ்வாறு தீ வைத்து நாசமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி, முச்சக்கர வண்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீட்டுக்கும் சிறு சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து கொலன்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி தோட்டப் பகுதியில் நாளுக்கு நாள் கசிப்பு உட்பட மது விற்பனையும் அதிகரித்தது வருவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். கைதிகளுக்கு இறைச்சி தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் பெரிய சமையல் பாத்திரத்தில் விழுந்ததில் ஏற்பட்ட தீக்காயங்களினால் இவர் உயிரிழந்துள்ளார். கொலைக்குற்றச்சாட்டில் கடந்த 2001ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தத. இந்நிலையில் கைதி, 25 வருட சிறைவாசத்தின் பின்னர் 2028ஆம் ஆண்டு விடுதலை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த நபர் தங்காலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் கைதி உயிரிழந்துள்ளதாக கைதியின் மரணம் தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு நீதியமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கடந்த 26ஆம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் 10 தினங்கள் தொடர்சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் அவர் நேற்று (06) உயிரிழந்துள்ளார்.