அளுத்கமவில் உள்ள பல்பொருள் அங்காடியில் இருந்து 3,100 ரூபா பெறுமதியான குழந்தைகளுக்கான பால் மாவை திருடிய குற்றச்சாட்டில் 30 வயதுடைய மீனவத் தொழில் புரியும் நபரொருவர் அளுத்கம பொலிஸாரால் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளார். தனது ஒரு வயது எட்டு மாத குழந்தையின் பசியை போக்குவதற்காக இவ்வாறு பால்மாவை திருடியதாக அவர் அழுது கொண்டே பொலிஸாரிடம் கூறியுள்ளார். சந்தேகநபர் பல்பொருள் அங்காடிக்கு சென்று பால்மாவை எடுத்து அவர் அணிந்திருந்த சட்டையில் மறைக்க முற்பட்ட போது, அங்கு பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர் சம்பவத்தை பார்த்து அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அவர் அளுத்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Author: admin
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பிஸ்கட் மற்றும் பிற இனிப்பு வகைகளின் உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளின் அதிக விலை தொடர்பான குற்றச்சாட்டுகளை தற்போது நிவர்த்தி செய்துள்ளனர். டொலர் நெருக்கடிக்கு மத்தியில் உற்பத்திக்காக ‘ஏ’ தர கோதுமை மாவை இறக்குமதி செய்ததன் விளைவாக பல பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மே மாதத்தில் கோதுமை மாவின் விலை ரூ. 74, தற்போது இதன் விலை ரூ. 290-300 ஆகும். “இது 277% விலை உயர்வு” என்று உள்ளூர் உற்பத்தியாளர்கள் ஊடகங்களுக்கு உரையாற்றினர். டொலர் நெருக்கடியின் போது தரமான கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கு செலவிடப்பட்ட தொகையே தமது உற்பத்திப் பொருட்களின் விலையை உயர்த்தியதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
கடந்த மே மாதத்தில் மாத்திரம் நாளாந்தம் 650 சுற்றுலா பயணிகளின் வருகை பதிவானதுடன், தற்போது அந்த எண்ணிக்கை 1,600 வரை உயர்ந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரச் சபை குறிப்பிட்டுள்ளது. இந்த மாதத்தின் முதல் இரு வாரங்களில் 15,000 இற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியா உட்பட ஐரோப்பிய நாடுகளிலும் இந்தியா – கனடா ஆகிய நாடுகளிலிருந்தும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை மீண்டும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரச் சபை தெரிவித்துள்ளது.
கடந்த வாரத்தில் 1,590 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 50.8% நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. 56 MOH பிரிவுகள் டெங்கு அதிக ஆபத்துள்ள வலயங்களாக கணக்கிடப்பட்டுள்ளதாக NDCU குறிப்பிட்டுள்ளது. அக்குறணை, மாத்தளை மாநகர சபை, அம்பலாங்கொட, வாரியபொல, அஹெலியகொட, எம்பிலிபிட்டிய மற்றும் கலிகமுவ ஆகியவை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வருடத்தில் இதுவரை 50,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
கொழும்பை வந்தடைந்த ஒரு கப்பலில் இருந்து 100,000 மெட்ரிக் டொன் கச்சா எண்ணெய் இறக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. இதன்படி, சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என CPC இன் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், 120,000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை ஏற்றிச் செல்லும் மற்றொரு கப்பல் ஒகஸ்ட் 29 ஆம் திகதி நாட்டை வந்தடைய உள்ளது என்று சிபிசி தெரிவித்துள்ளது.
தனது பயணப் பொதியில் 5 கிலோகிராம் கொக்கேய்ன் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த போலாந்து பிரஜை ஒருவர், இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்கைனின் மொத்த மதிப்பு ரூ. 245 மில்லியன் என்று SL சுங்கம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாத ஆரம்பம் வரையில் விடுமுறையின்றி வாராந்தம் 5 நாட்களும் பாடசாலையை நடத்துவதற்கு எதிர்பார்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். தற்போது நாடு முழுவதும் வாராந்தம் ஐந்து நாட்களும் பாடசாலைகள் நடத்தப்படுகின்றன. பாடசாலைகளுக்கு போக்குவரத்து காரணங்களால் சமூகமளிக்க முடியாத நிலைமைகள் குறித்த முறைபாடுகள் எவையும் இதுவரையில் கிடைக்கவில்லை. அவ்வாறான நிலை ஏற்பட்டால் அது குறித்து போக்குவரத்து சபை உள்ளிட்ட தரப்புடன் கலந்துரையாடி அந்த பிரச்சினையைத் தீர்த்து, வாராந்தம் 5 நாட்களும் பாடசாலைகளை நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. கொவிட் பரவலுக்கு மத்தியில் பாடசாலைகளை நடத்திச் செல்வது குறித்த எச்சரிக்கை எதனையும் சுகாதார அமைச்சு இதுவரையில் முன்வைக்கவில்லை. அதற்கான வழிகாட்டிகள் மற்றும் அறிவுறுத்தல்களை சுகாதார அமைச்சு வழங்கினால் அதன்படி பாடசாலைகள் செயற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்துக்கு வாடகை விமானம் மூலம் கடந்த வாரம் செல்வதற்கான செலவை இலங்கை அரசாங்கம் செலுத்தியதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்த நிலையில், அந்த செலவில் இலங்கை அரசாங்கம் எவ்வித பங்களிப்பும் செய்யவில்லை என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி தனது வெளிநாட்டு பயணங்களுக்காக தனது சொந்த நிதியை செலவிட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அமைச்சரவையின் இன்றைய சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவருக்கு பதிலளித்த அமைச்சர் குணவர்தன, இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு என்பதாலேயே அதற்கான கட்டணத்தை செலுத்தியதாக தெரிவித்தார். ஒவ்வொரு நிறைவேற்று முன்னாள் ஜனாதிபதியும் அவர்களது துணைவியார்களும் நன்மைகள், சலுகைகள் மற்றும் சிறப்பு வசதிகளை அனுபவிக்கின்றனர். எனவே. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கட்டணத்தை செலுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார். இந்த சட்டத்தின் விதிகளின் கீழ் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன,சந்திரிகா குமாரதுங்க மற்றும் ஹேமா பிரேமதாச ஆகியோருக்கு…
திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதோடு , பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு வெளிநாட்டு உதவிகளின் ஊடாக உதவ திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் பருப்பு போன்ற இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்புக்கு ரூபாவிற்கு ஈடாக டொலரின் மதிப்பு அதிகரிப்புடன் வாழ்க்கைச் செலவும் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 203 ரூபாவாக இருந்த டொலரின் பெறுமதி இன்று 365 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அந்நியச் செலாவணி அதிகரித்ததன் காரணமாக பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதாகவும் இதன் மூலம் பணவீக்கம் அதிகரித்து அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியும் உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், விலைவாசி உயர்வைத் தடுக்க முடியாத நிலை இருப்பதாகவும் கூறினார்.
இந்த வாரத்திற்கு மேல் அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படாது என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். நாடு ஸ்திரமான நிலைக்குத் திரும்பி வருவதால் இந்த வார இறுதிக்குள் அவசரகாலச் சட்டங்கள் நீக்கப்படும் என ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார். பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2வது பிரிவின் கீழ் இலங்கையில் ஜூலை 18 முதல் பொது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு பின்னர் பாராளுமன்றம் நிறைவேறியது.