தாயாரினால் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட பதின்ம வயது மகள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் மீட்கப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமியே நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். சிறுமி 4 மாதங்களுக்கு மேலாக பாடசாலைக்கு செல்லாத நிலையில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் தாயாரின் பாதுகாப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். சிறுமி யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது, அவரை சிறுவர் இல்லத்தில் சேர்த்து பராமரிக்குமாறு உத்தரவிடப்பட்டது. போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டமை தொடர்பில் சிறுமியின் பெற்றோர் மீது நீதிமன்ற வழக்குகள் உள்ளதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
Author: admin
நாட்டில் எதிர்வரும் காலப்பகுதியில் முட்டையொன்றின் விலை 75 ரூபாய் வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இரசாயன உரத்துக்கு விதிக்கப்பட்ட தடைக் காரணமாக, நாட்டில் முட்டை மற்றும் கோழிப்பண்ணை தொழில் பாரிய வீழ்ச்சி அடைந்துள்ளதாக தேசிய கால்நடைவள அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் கோழிகளின் எண்ணிக்கை பாரியளவில் குறைவடைந்துள்ளதால் முட்டை மற்றும் கோழி இறைச்சித் தொழிற்துறையை மீள முன்னோக்கி கொண்டு செல்வதற்கு மேலும் காலம் எடுக்கும் என அந்தச் சபையின் தலைவர் பேராசிரியர் எச்.டபிள்யு சிறில் தெரிவித்துள்ளார். வர்த்தக அமைச்சு முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை அமுலாக்குவதற்கு முன்னர், கால்நடைவள அபிவிருத்தி சபையில் எவ்வித ஆலோசனைகளையும் பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்காரணமாக எதிர்வரும் காலப்பகுதியில் முட்டையொன்றின் விலை 75 ரூபாய் வரை அதிகரிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரச உத்தியோகத்தர்கள் அலுவலகத்திற்கு வரும் போது பொருத்தமான அலுவலக உடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றறிக்கையை வெளியிட பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை தயாரிப்பதற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன குறிப்பிட்டார். பெண்கள் அலுவலகங்களுக்குச் செல்லும்போது சேலை அல்லது அலுவலகத்திற்கு ஏற்ற உடை அணியலாம் என்று ஏற்கனவே சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், சிலர் சுற்றறிக்கையின் முதல் பகுதியை மாத்திரம் அமுல்படுத்துவதாகவும், பொருத்தமான அலுவலக ஆடை என்றால் என்ன என்பதை மறந்து விட்டதாகவும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, தகுந்த அலுவலக உடையை அனுமதிக்க வேண்டும் என புதிய சுற்றறிக்கை வெளியிட முடிவு செய்யப்பட்டு, விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது
அமெரிக்கா இலங்கைக்கு அவசரகால மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதுவர் கர்லயா, சுகாதார அமைச்சுக்கு விட்டமின்கள், நாட்பட்ட நோய்களுக்கான மருந்துகள், வடிகுழாய்கள் கையுறைகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளும் மருத்துவப் பொருட்களும் அவசரமாகத் தேவைப்படுவதாகத் தெரிவித்தார். இதனையடுத்து, அமெரிக்காவில் உள்ள உலகின் முன்னணி மருத்துவ நிறுவனம் ஒன்றினால் இந்த மருந்து பொருட்கள் வழங்கப்படுவதாக அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகம் அறிக்கை ஒன்றை விடுத்து அறிவித்துள்ளது. அதன்படி, எழு இலட்சத்து எழுபத்து மூவாயிரம் டொலர்கள் பெறுமதியான அவசரகால மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை அமெரிக்கா நன்கொடையாக வழங்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் உத்தேச கடன் வசதிகள் தொடர்பாக அதன் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று அமெரிக்கா செல்லவுள்ளது. அடுத்த மாதம் 6ஆம் திகதி அமெரிக்காவின் வொஷிங்டனுக்குச் செல்லும் அவர்கள், அங்கு மேலதிக கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர். இந்த கலந்துரையாடலில் மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட அரசாங்க பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். வெளிநாட்டு கையிருப்பு குறைப்பு உட்பட பல பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள இலங்கை, 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான நீண்டகால கடன் வசதிக்கான பணியாளர் மட்ட உடன்பாட்டை ஏற்கனவே எட்டியுள்ளது. இத்தொகை 04 வருட காலப்பகுதியில் எட்டு தவணைகளாக இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 12ஆம் திகதியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள வெளிநாட்டுக் கடனை செலுத்துவது தொடர்பான மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் உடன்படிக்கைகள் மற்றும் முன்னேற்றம் குறித்தும் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். மழை நிலைமை : கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில்…
காற்றில் வைரஸ் கலந்திருந்தால், அதை குறுஞ்செய்தி மூலம் அணிந்திருப்பவருக்குக் காட்டிக் கொடுக்கும் வகையில், நவீன முகக்கவசத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள டோங்ஜி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த புதிய முகக்கவசம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நவீன முகக்கவசத்தை ஒருவர் அணிந்து கொண்டு வெளியில் செல்லும்போது, அவரைச் சுற்றி காற்றில் இருக்கும் சாதாரண வைரஸ் முதல் கொரோனா வைரஸ் வரை எந்த வகையான வைரஸ் கலந்திருந்தாலும், அதனை கண்டறிந்து, அணிந்திருப்பவரின் கையடக்க தொலைபேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி, முகக்கவசம் அணிந்திருப்பவரை எச்சரிக்கும் வகையில் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முகக்கவசமானது காற்றோட்டம் குறைவாக உள்ள இடங்களிலும், அதாவது Lift அல்லது மூடிய அறைகள் போன்றவற்றிலும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் உள்ள இடங்களிலும் திறனுடன் செயற்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கம்பஹா, அகரவிட்ட பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் போது கத்தியால் குத்தப்பட்டு 30 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு ஆணும் பெண்ணும் வீதியில் நடந்து சென்ற பெண்ணின் பையை திருட முற்பட்ட போது வாகனத்திலிருந்து கீழே விழுந்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் வசித்த இருவர் சந்தேகத்திற்கிடமான பெண்ணை பிடிக்க முற்பட்ட போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் அவர்களை கத்தியால் குத்திவிட்டு பெண்ணை விடுவித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். காயமடைந்த இருவரும் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கம்பஹா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
சில பல்கலைக்கழகங்களில் பகிடிவதை சம்பவங்கள் இடம்பெறுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது குறித்து பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார். பகிடிவதையை தடை செய்யும் சட்டத்தின் கீழ், அவ்வாறான நடவடிக்கைகளுடன் தொடர்புபடும் மாணவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பேராசிரியர் தெரிவித்தார். இதேவேளை, பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகிடிவதைக்கு எதிரான மற்றும் பகிடிவதைக்கு ஆதரவான மாணவர்களுக்கு இடையிலும் மோதல்கள் இடம்பெற்றுள்ளமை குறித்து பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார். மோதல் குறித்து மூன்று மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் தெரிவித்தார்.
கடந்த வாரம் காணாமல் போனதாக கூறப்பட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 24 வயதுடைய சிறுவனின் சடலம் கண்டி மகாவலி ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர் யக்கலையை வசிப்பிடமாகவும், பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் 4 ஆம் வருட மாணவரும் ஆவார். ஞாயிற்றுக்கிழமை (18) காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, பேராதனைப் பொலிஸார் குறித்த மாணவனைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். செப்டம்பர் 16 ஆம் திகதி குறித்த மாணவர் எழுதிய கடிதம் அவரது தங்கும் விடுதியில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவரின் மரணத்திற்கான காரணம் குறித்து பேராதனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.