தென்மேற்கு ஜப்பானின் மியாஸாகி மாகாணத்தில் நள்ளிரவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒசு தீபகற்பத்துக்கு அருகே 30 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தின் திறன் ரிச்டர் அளவு கோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. சேத விவரங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ககோஷிமாவில் உள்ள சென்டாய் அணுமின் நிலையத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Author: admin
யாழ். நாவற்குழி பகுதியில் இன்று பட்டபகல் வீடொன்றுக்குள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டிலிருந்த தாய் மற்றும் மகனை கட்டிவைத்து தாக்கிவிட்டு வீட்டிலிருந்த பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் படுகாயமடைந்த தாயும், மகனும் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. நாவற்குழி மேற்கு-சித்தி விநாயகர் கோவிலடி பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் இன்று புகுந்த கொள்ளையர்கள், வீட்டிலிருந்த தாயையும், மகனையும் கொடூரமாக தாக்கியுள்ளனர். கொள்ளையர்களின் தாக்குதலில் 17 வயதான மகனின் கை முறிந்துள்ளதுடன், 42 வயதான தாயின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. காயமடைந்த தாயும் மகனும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நெல்லுக்கு உரிய விலை மற்றும் அடுத்த பருவத்திற்கு உரிய நேரத்தில் உரம் வழங்குமாறு கோரி ஸ்ரீலங்கா சுதந்திர விவசாயிகள் முன்னணி மற்றும் பொலனறுவை விவசாயிகள் இணைந்து இன்று காலை பொலனறுவையில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது மகன் ஆகியோர் கலந்து கொண்டு வீதியில் அமர்ந்து தமது ஆதரவை வெளிப்படுத்தினர். ஒரு கிலோ கோதுமைக்கு 150 ரூபா உத்தரவாத விலையை வழங்குமாறும் கோரி முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் பல பகுதிகளைச் சேர்ந்த விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2023ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான 70 வீத சீருடைகளை வழங்க சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். எஞ்சிய 30 வீதம் உள்நாட்டு உற்பத்தியில் இருந்து கொள்வனவு செய்யப்படவுள்ளதாக தெரிவித்த கல்வி அமைச்சர், அதற்கமைய, எதிர்வரும் ஜனவரி மாதம் பாடசாலை சீருடைகளை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் அடுத்த வருடம் முதல் அனைத்து பாடசாலைகளிலும் முதலாம் ஆண்டு முதல் ஆங்கிலம் கற்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) உரையாற்றும்போதே, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளார். அதற்கமைய, உத்தேச கல்வி சீர்திருத்தத்தின் கீழ், முதலாம் தரத்தில் இருந்து பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் பணி அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு தேவையான 33 இலட்சம் பாடப்புத்தகங்களை அச்சிடாமல் இருக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. பாடப்புத்தகங்கள் அச்சிடுவதற்கு 1600 கோடி ரூபாய் செலவிடவேண்டி உள்ளதாலும் காகித தட்டுப்பாடு காரணமாகவும் இந்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் முதன்மைச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். அதன்படி பழைய பாடப்புத்தகங்களை சேகரித்து மாணவர்களுக்கு வழங்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச அமைப்புகளின் நோக்கங்களை தோற்கடிக்க, இலங்கையர்கள் என்ற வகையில் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். காலியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இதனை குறிப்பிட்டுள்ளார். “அதிர்ஷ்டவசமாக உலகையே எதிர்த்துப் போராடக் கூடிய தலைவர் ஜனாதிபதியாகிவிட்டார்” என்று கூறிய அவர், அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “இலங்கையின் குடிமக்கள் குறிப்பாக அரசியல் குழுக்களில் செல்வாக்கு செலுத்த வேண்டும். அவர்கள் விரும்பியபடி நடந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது. இலங்கை மக்கள் அரசியல் கட்சித் தலைவர்களை ஒன்றிணைத்து தேசிய வேலைத்திட்டத்தில் உடன்படுமாறு தொடர்ந்து கூற வேண்டும். அதற்குத் தேவையான தலைமைத்துவம் இலங்கைக்கு இப்போது கிடைத்துள்ளது. அதுதான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. இவரைக் கண்டால் உலக நாடுகள் அச்சம் கொள்கின்றன. சர்வதேச சமூகம் எப்பொழுதும் எமது நாட்டை பலவீனமான நிலைக்கு தள்ளவே முயற்சிக்கின்றது.…
நாட்டில் கடந்த ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது செப்டெம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 21 சதவீதத்தால் குறைந்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இதனைத் தெரிவித்துள்ளது. ஓகஸ்ட் மாதத்தில் 47 ஆயிரத்து 293 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் வருகைத்த தந்துள்ளனர். எனினும், செப்டம்பர் மாதத்தில் 29 ஆயிரத்து 802 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது இந்த ஆண்டில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த வரவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குளிர்காலத்தில் வலுவான மறுமலர்ச்சிக்கான சுற்றுலாத் துறையின் நம்பிக்கைக்கு இது பின்னடைவை ஏற்படுத்தும் என கவலை வெளியிடப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பது தொடர்பில் பரிசீலிக்குமாறு பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர்கள், 2வது அமர்வின் பின்னர் பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு 98 நாட்களே உள்ளதாக சுட்டிக்காட்டினர். இந்தக் கோரிக்கைக்கு பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இந்த முன்மொழிவு பரீட்சை திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படும் என்றும், நியாயமான தன்மையை உறுதிப்படுத்துவதற்கு தன்னால் முடிந்த உதவிகளை வழங்குவதாகவும் தெரிவித்தார். எவ்வாறாயினும், 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி டிசம்பர் மாதம் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன சனிக்கிழமை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் வேலை வாய்ப்பற்றோர் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக புள்ளி விபரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டாம் காலாண்டுப் பகுதியில் வேலை வாய்ப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வட்டி வீத உயர்வு, இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள், பணவீக்கம் உள்ளிட்ட பல காரணிகளினால் இந்த நிலைமை உருவாகியுள்ளது. முதலாம் காலாண்டில் வேலை வாய்ப்பற்றோர் எண்ணிக்கை 4.3 வீதமாக காணப்பட்டதாகவும், இரண்டாம் காலாண்டில் இது 4.6 வீதமாக உயர்வடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் முழுமையான அளவில் முயற்சியான்மைகளை மூட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இரண்டாம் காலாண்டில் மொத்த தேசிய உற்பத்தியானது 8.4 வீத பின்னடைவினை சந்தித்துள்ளது.