தற்போதைய ஓட்டுனர் உரிமத்திற்குப் பதிலாக டிஜிட்டல் ஓட்டுனர் உரிமம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று (11) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார். இதன்படி, சிப் கொண்ட தற்போதைய ஓட்டுனர் உரிமத்திற்குப் பதிலாக QR குறியீடு கொண்ட டிஜிட்டல் ஓட்டுனர் உரிமம் எதிர்வரும் காலங்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
Author: admin
நாட்டுக்கு வெவ்வேறு இராஜதந்திரிகள் விஜயம் செய்கின்றமை தொடர்பாக வீண் அச்சமடையத் தேவையில்லை என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் எரிக் சோல்ஹைம்மின் விஜயம் புலம்பெயர் அமைப்புக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர், இலங்கை ஒரு சுயாதீன அரசு என்ற ரீதியில் ஏனைய அரசுகளின் அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டிய தேவை கிடையாது என தெரிவித்துள்ளார். வெவ்வேறு இராஜதந்திரிகள் நாட்டுக்கு விஜயம் செய்கின்றமை தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் நாம் அனைத்து நாடுகளுடனும் பிரிவினையற்ற வெளியுறவுக் கொள்கையின் ஊடாக பயணிப்பதற்காகவே செயற்படுகின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின்படி, கடுமையான கடன் நெருக்கடி காரணமாக உடனடி நிவாரணம் வழங்கப்பட வேண்டிய 05 நாடுகளில் இலங்கையும் உள்ளது. இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலகில் வறுமையில் வாடும் பகுதிகள் மேலும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் வாய்ப்புகள் காணப்படுகின்றன. இதனால், உலகில் சுமார் 54 நாடுகள் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாக அவர்கள் இன்று (11) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து நாட்டின் சாத்தம் தீவு பகுதியில் பைலட் வகையை சேர்ந்த 500 திமிங்கிலங்கள் திடீரென கரையொதுங்கி உள்ளன. இதுபற்றி அரசு கூறும்போது, கடந்த வெள்ளிக்கிழமை 250 பைலட் திமிங்கிலங்கள் சாத்தம் தீவிலும், அதற்கு 3 நாட்கள் கழித்து 240 பைலட் திமிங்கிலங்கள் பிட் தீவிலும் கரையொதுங்கின என தெரிவித்து உள்ளது. இந்த பகுதியில் சுறா மீன்கள் அதிகம் காணப்படும் என கூறப்படுகிறது. இதனால், அவற்றை காப்பாற்றுவது கடினம். மனிதர்கள் மற்றும் திமிங்கிலங்கள் மீது சுறாக்கள் தாக்குதல் நடத்த கூடிய ஆபத்து உள்ளது. அதனால், உயிருடன் இருந்த திமிங்கிலங்கள், பயிற்சி பெற்ற குழுவினரால் கருணை கொலை செய்யப்பட்டன. அவை தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகாமல் தடுக்கும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது என அரசு தொழில்நுட்ப கடல்வாழ் ஆலோசகரான தவே லண்ட்குவிஸ்ட் கூறியுள்ளார். இந்த முடிவை அவ்வளவு சீக்கிரம் எடுத்து விடவில்லை. ஆனால், இதுபோன்ற சம்பவங்களில் இதுவே, மிக இரக்க தன்மை கொண்ட இறுதி வாய்ப்பு…
காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவருமான றஊப் அப்துல் மஜீதின் கடற்கரை வீதியிலுள்ள வீட்டை உடைத்து கொள்ளையிட்ட நபரை காத்தான்குடி பொலிசார் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.எம்.ஏ.றஹீம் தெரிவித்தார். குறித்த வீட்டை பூட்டிவிட்டு இரு தினங்களின் பின்னர் மீண்டும் வந்து திறந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவை உடைத்து பெறுமதி மதிக்கமுடியாத வெண்கலத்திலான கழுகு சிலை மற்றும் மின்பிறப்பாகி என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார். குறித்த கொள்ளையிடப்பட்ட பொருட்களை கடையொன்றில விற்பனை செய்யப்பட்ட நிலையில் குறித்த சந்தேக நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.ஏ.றஹீம் தலைமையில் கருணாரட்ன ஜெயசிங்க சாணக தனோஜன் சந்திரதாச ஆகிய பொலிஸ் குழுவனரே சந்தேக நபரைக் கைது செய்தனர். கைதான நபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தனது விலைகளை குறைத்துள்ளதாக இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது அதற்கமைய 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாலும் ,5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 200 ரூபாயாலும் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5300 ரூபாயாகவும் 5 கிலோ கிராம் சிலிண்டரின் புதிய விலை 2120 ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது
முதலாவது பிணை முறி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் உள்ளிட்ட 10 பேரை கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் விடுவித்துள்ளது. குறித்த நபர்களுக்கு எதிராக பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது என குறிப்பிட்டு இவ்வாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெரும்போக நெற்செய்கைக்கு தேவையான நீரை எதிர்வரும் 20ஆம் திகதி விநியோகிக்கவுள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது. மகாவலி H வலயத்திற்கு உட்பட்ட வெலிகந்தை, கிராந்துருகோட்டை மற்றும் கலாவாவி ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகிக்கப்படவுள்ளதாக அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் நெவில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இதனைத் தவிர இராஜாங்கனை மற்றும் நாச்சதூவ குளங்களிலிருந்தும் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.
2022 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொது தராதர பத்திர உயர்த்தர பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகளுக்காக தெரிவு செய்யப்படவுள்ள ஆசிரியர்கள் வழிகாட்டல் கோவையின் நிபந்தனைகளுக்கு அமையவே தெரிவு செய்யப்படுவார்கள் என பரீட்சைகள் ஆணையாளர் எல் எம் டி தர்மசேன தெரிவித்தார். விடைத்தாள்களை திருத்துவதற்கான ஆசிரியர் தெரிவு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல் எம் டி தர்மசேன வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள்களை திருத்துவதற்கான ஆசிரியர் தெரிவு தொடர்பான வழிகாட்டல் நிபந்தனைகள் தொடர்பில் www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் வாயிலாக அறிந்துக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். இணைய வசதியற்ற ஆசியரியர்கள் 011 2 785 231 அல்லது 011 2 785 216 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பதன் வாயிலாகவும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் எல் எம் டி தர்மசேன தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட நாவற்காடு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் இன்று (செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது. மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர பிரதம அதிதியாக கலந்துகொண்டதோடு, கிராமிய வீதி மற்றும் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் சூரிய சக்தி மின்நிலையம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இதற்கமைய சுமார் 2.5 பில்லியன் செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ள குறித்த சூரிய சக்தி மின்நிலையத்தின் ஊடாக பிறப்பிக்கப்படும் மின்சாரமானது நேரடியாக மின்சார சபைக்கு வழங்கப்பட்டு மக்கள் பாவனைக்கான பொது மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், 40 ஏக்கர் நிலப்பரப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த சூரிய சக்தி மின்நிலையத்தில், மேலதிகமாக உள்ள நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை மேற்கொண்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.