ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மியாகோ நகருக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலில் 5 ஆகப் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரையில் எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Author: admin
சிறைச்சாலைகளில் பெண்களுக்கென தனியான அறைகள் அமைக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள இன்று (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். சிறைகளில் பெண் கைதிகள் தனித்தனியாக தங்க வைக்கப்பட்டிருந்தாலும், பெண்களுக்கு தனி இடங்களை ஒதுக்குவது முக்கியம் என்றும் அவர் கூறினார். ஐந்து நீதிச் சட்டமூலங்கள் மீதான நாடாளுமன்ற விவாதத்தின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள இவ்வாறு தெரிவித்தார். சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின் சட்டங்களில் திருத்தம் செய்து கைதிகளும் மனிதர்கள்தான் என்பதை அமைச்சர் உறுதிப்படுத்த முயன்றுள்ளார் என்றும் குறிப்பிட்டார். மேலும் தொற்றாத மற்றும் குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கூட சிறைகளில் உள்ளனர் என்றும் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
இன்று (19) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. குறித்த பொருட்களை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் கொள்வனவு செய்ய முடியும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, ஒரு கிலோகிராம் வெள்ளைப் பூண்டு விலை 60 ரூபாயால் குறைக்கப்பட்டு புதிய விலை 490 ரூபாயாகவும் ஒரு கிலோகிராம் கோதுமை மா 55 ரூபாயால் குறைக்கப்பட்டு புதிய விலை 320 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது. ஒரு கிலோ கிராம் நெத்தலிக் கருவாடு 50 ரூபாயால் குறைக்கப்பட்டு 1,450 ரூபாயாகும் பருப்பு ஒரு கிலோ கிராம் 30 ரூபாயால் குறைக்கப்பட்டு 285 ரூபாய்க்கு விற்பனையாக உள்ளது. மேலும், ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனி 15 ரூபாயால் குறைக்கப்பட்டு 260 ரூபாயாகவும் இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசி ஒரு கிலோ கிராம் 5 ரூபாயால் 169 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (19) விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார் என ஜனாதிபதி காரியாலய தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் வரி மாற்றம் தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங் தனதுரையில் விளக்கமொன்றை கொடுப்பார் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன.
நாட்டின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் நான்கு பேர் சரியான ஊட்டச்சத்தான உணவைப் பெறுவதில்லை என்றும் மக்களின் வருமானத்தில் 75% உணவுக்காகவே செலவிடப்படுவதாகவும் தேசிய பேரவையின் துணைக் குழு வெளிப்படுத்தியுள்ளது. பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய பேரவையின் உப குழு நாடாளுமன்றத்தில் அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் கூடியது. தற்போதைய பொருளாதார நெருக்கடியுடன் பத்து வருடங்களாக நாட்டில் போசாக்கு குறைபாடு நிலைமை அதிகரித்துள்ள நிலையில், அந்த நிலைமையை களைவதற்கு மேற்கொள்ளக்கூடிய குறுகிய மற்றும் நடுத்தர கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. 2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் வருமானம் மற்றும் வீட்டுச் செலவு குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, தற்போதைய நிலைவரத்தை கருத்திற்கொண்டு, பாடசாலைகளுக்கு வரும் மாணவர்கள் பற்றாக்குறையாக உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாகவும் இதன்போது கூறப்பட்டது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல்…
இரத்மலானை விமான நிலையத்தை விமானப் பாடசாலையாகவும் தனியார் விமான நிலையமாகவும் மாற்றவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலத சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சுவீடனில் 26 வயது இளம் பெண் ரோமினா பூர்மோக்தாரி காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக பொறுப்பேற்ற பிரதமர் உல்ஃப் கிறிஸ்டெர்ஸன் தலைமையிலான அமைச்சரவையில் ஈரான் வம்சாவளியை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான ரோமினா பூர்மோக்தாரி காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர் அமைச்சராக நியமிக்கப்பட்டதன் மூலம் சுவீடனின் 27 வயது இளம் அமைச்சர் என்ற இதற்கு முந்தைய அமைச்சர் ஒருவரின் சாதனையை முறியடித்துள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தம்பா நகரில் இருந்து நியூ ஜெர்சிக்கு சென்ற விமானத்தில், பாம்பு இருந்ததைக் கண்டு பயணிகள் அச்சமடைந்தனர். கடந்த திங்கட்கிழமை யுனைடர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நியூ ஜெர்சியில் தரையிறங்கிய போது, வணிக வகுப்பில் இருந்த பயணிகள், அங்கு பாம்பு இருந்ததைக் கண்டு கூச்சலிட்டுள்ளனர். உடனடியாக நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு அந்த பாம்பு பிடிக்கப்பட்டுள்ளது. இதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என யுனைடட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் – நவாலி பகுதியில் 13 வயதுச் சிறுமி ஒருவரை 41 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார். இது தொடர்பில் அப்பகுதி மக்கள் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து 41 வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் இன்றையதினம் கைது செய்துள்ளனர். குறித்த நபருக்கும் சிறுமியின் தாயாருக்கும் இடையே தவறான உறவு காணப்பட்டது. இந்நிலையில் சந்தேகநபர் சிறுமியுடனும் தவறாக நடந்துகொண்டுள்ளார். மானிப்பாய் பொலிஸாரால் சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம்-வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த இருவர், வீட்டில் இருந்த முதியவர் மீது தாக்குதலை மேற்கொண்டதில் முதியவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் தேவமயில் முருகவேள் (வயது 65) எனும் முதியவரே படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் ஊறணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை, நாவலடி , ஊரிக்காடு பகுதியில் உள்ள வீடொன்றினுள் இன்று (19) புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில், வாள் மற்றும் கோடாரியுடன் புகுந்த இருவர் வீட்டில் இருந்த முதியவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான முதியவரின் அவல குரலை கேட்டு , அயலவர்கள் ஒன்று கூடிய வேளை தாக்குதலாளிகள் வீட்டை விட்டு தப்பியோடியுள்ளனர். தப்பியோடிய இருவரையும் அயலவர்கள் விரட்டிய போது , ஒருவர் அயலவர்களினால் மடக்கி பிடிக்கப்பட்டார். இருந்த போதிலும் மற்றையவர் தப்பியோடியுள்ளார். அயலவர்களால் மடக்கி பிடிக்கப்பட்டவர் வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.