பண மோசடி தொடர்பான குற்றச்சாட்டில் கைதான திலினி பிரியமாலி, ஜானகி சிறிவர்தன, இசுரு பண்டார மற்றும் பொரளை சிறிசுமண தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் முன் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Author: admin
போலந்தில் வீழ்ந்து வெடித்த ஏவுகணையால் இருவர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து உக்ரைன் போர் அண்டை நாடுகளில் பரவக்கூடும் என்று உலகளாவிய எச்சரிக்கை எழுப்பப்பட்டது. போலந்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணை வீச்சு, உக்ரைன் வான் பாதுகாப்பு ஏவுகணையால் ஏற்பட்டிருக்கலாம் என்று நேட்டோ அமைப்பு கூறியுள்ளது. எனினும் போரைத் தொடங்கியதால் இறுதியில் ரஷ்யாவே இதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என்று நேட்டோவின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். எனினும் ரஷ்யா அதனை மேற்கொள்ளவில்லை என்ற தகவல் வெளியானது, இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடந்து வருகின்றது.அதன் முடிவுக்காக நாங்கள் காத்திருக்க வேண்டும். இது திட்டமிட்ட தாக்குதலின் விளைவு என்பதற்கான எந்த அறிகுறியும் தங்களிடம் இல்லை. மேலும் நேட்டோவுக்கு எதிரான தாக்குதல் இராணுவ நடவடிக்கைகளுக்கு ரஷ்யா தயாராகி வருகின்றது என்பதற்கான எந்த அறிகுறியும் தங்களிடம் இல்லை என்றும் நேட்டோவின் செயலாளர் ஸ்டோல்டன்பெர்க் கூறியுள்ளார்.
செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் வீடொன்றுக்கு அருகில் வெட்டப்பட்டிருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி வீழ்ந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். செட்டிகுளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 9 வயது சிறுவன் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சிறுவன் தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்த நிலையில், விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, தாயும், அப்பகுதி மக்களும் சேர்ந்து குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரியவந்தது.
இந்தோனேசியாவின் பாலி அருகே 271 பேருடன் சென்ற படகில் தீ பரவல் ஏற்பட்டதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. லிம்பா் துறைமுகத்தில் இருந்து கீட்டாபாங் நகரத்தை நோக்கி சென்ற குறித்த படகில் 236 பயணிகளும், 35 பணியாளா்களும் இருந்தனா். காரங்ககேசம் கடற்கரையில் இருந்து சுமாா் 1.5 கி.மீ. தூரத்தில் இருந்தபோது அந்த படகில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து அதிலிருந்த பயணிகளைக் காப்பாற்ற இரண்டு கடற்படைக் கப்பல்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. மீட்புப் படையினரும், மீனவா்களும் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்டவா்களின் விவரங்கள் தெரியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2018 ஆம் ஆண்டு வடக்கு சுமத்திரா மாகாணத்தில் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 167 போ் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
நாளை (18) முதல் அமுலுக்கு வரும் வகையில் மோட்டார் வாகனப் பதிவுக் கட்டணம் மற்றும் ஏனைய கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சாதாரண முறையின் கீழ் வாகனங்களை பதிவு செய்ய 2,000 ரூபாய் கட்டணமும் முன்னுரிமை அடிப்படையிலான கட்டணம் 3,000 ரூபாயாகவும் அதிகரிக்கப்படவுள்ளது. அத்துடன் ஒருநாள் சேவையின் கீழ், வாகனங்களை பதிவு செய்வதற்கான கட்டணம் 4,000 ரூபாயாகவும் தாமதமாகி செலுத்தப்படும் பதிவுக் கட்டணங்கள் பல்வேறு கட்டங்களாக அதிகரிக்கப்படவுள்ளன. அவ்வாறு தாமதக்கட்டணமாக மகிழுந்துக்கு நாளொன்றுக்கு 100 ரூபாயும், உந்துருளிக்கு 50 ரூபாயும் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பதிவு செய்யப்பட்ட வாகனச் சான்றிதழின் விவரங்களை மாற்றுவதற்கு 3,000 கட்டணம் வசூலிக்கப்படும்.
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் பேரில் கைதான அவர் 150,000 $ பிணையில் விடுவிக்கப்பட்டார்.
உரங்களை தடை செய்யும் முட்டாள்தனமான முடிவால் தேயிலை கைத்தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை தான் ஒப்புக்கொள்வதாக பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார். ஆனால் அமைச்சரவையின் ஒற்றுமை உடைந்து விடும் என்பதால் தான் இது வரை அதை பகிரங்கமாக கூறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். தேயிலை தொழில் பிரச்சினைகள் தொடர்பில் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தேயிலை பயிர்ச்செய்கைக்காக ஏற்கனவே 3,000 மெற்றிக் தொன் யூரியா விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ரமேஷ் பத்திரன, உரங்களை இறக்குமதி செய்வதற்கு இறக்குமதி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் என்ற ரீதியில் இந்த உரத்தடையை முதலில் எதிர்த்தவர் தாம் என்றும் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
தமது வித்தியாலயத்தில் தரம் 5 இல் கல்விப்பயிலும் மாணவர்கள் மூவர் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு அவர்களுக்கு மின்சாரம் பாய்ச்சி தண்டனை வழங்கினர் என்றக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். களுத்துறை, மில்லனிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர், மில்லனிய பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஆகியோரே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்ட கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா வழக்கை ஜனவரி 18 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் போட்டியிடுவார் என கூறப்பட்ட நிலையில், அதற்கான அறிவிப்பை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை நடந்த விழாவில் பேசிய ட்ரம்ப், அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாகவும், புகழ்பெற்றதாகவும் மாற்றுவதற்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளேன் என்று தெரிவித்தார். ஏற்கெனவே ஜனாதிபதியாக இருந்த ட்ரம்ப் கடந்த தேர்தலில் போட்டியிட்டு ஜோ பைடனிடம் தோல்வியடைந்தார். தற்போது மூன்றாவது முறையாக போட்டியிடவுள்ளார். கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபை, செனட் சபை தேர்தல் முடிவுகள் ஆளும் ஜனநாயக கட்சிக்கே சாதகமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இலகுரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் விசேட முன்னோடி வேலைத்திட்டம் கம்பஹா மாவட்டத்தில் இன்று (16) ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு இலகுரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஸ்ரீலங்கா செவிப்புலன் வலுவற்றோர் மத்திய சம்மேளனம் சுமார் 40 வருடங்களாக முன்வைத்த கோரிக்கைக்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த முன்னோடி வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தின்படி, ஸ்ரீலங்கா செவிப்புலன் வலுவற்றோர் மத்திய சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் நாடளாவிய ரீதியில் கிட்டத்தட்ட 300,000 பேர் எதிர்காலத்தில் சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.