நேற்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்கள் சிலவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளன. ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவினாலும் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 10 ரூபாவாலும் விலைக் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, புதிய விலையாக ஒட்டோ டீசல் ஒரு லீற்றர் 415 ரூபாவுக்கும், ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 355 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பெற்றோல் உள்ளிட்ட ஏனைய எரிபொருட்களின் விலையில் மாற்றமில்லை எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
Author: admin
(எம்.என்.எம்.அப்ராஸ்) ஜிசேர்ப்(GCERF)நிறுவனத்தின் அனுசரணையில் ஹெல்விடாஸ்(HELVETAS) நிதியுதவியுடன் சமாதானமும் சமூக பணி(PCA)நிறுவனத்தினால் அம்பாறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வை-சென்ச்(y-change) திட்டத்தின்,அம்பாறை மாவட்டத்தில் 20 பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள இளைஞர் நல்லிணக்க குழுக்களின் இணைப்பாளர்களுக்கான கலந்துரையாடல் அம்பாரையில்(29)இடம்பெற்றது. அம்பாரை மாவட்டத்தில் நிலவுகின்ற நல்லிணக்க முரண்பாடுகளை இனங்கண்டு அதனை குறைப்பதற்கான செயற்ப்பாடுகளை அடையாளப் படுத்துவதன் மூலம் அம்பாரை மாவட்டத்தில் இன நல்லுறவை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி இதன் போது கலந்துரையாடப்பட்டது இதில் வை-சேன்ச்(y-change) திட்டத்தின் திட்ட இணைப்பாளர் ஐ.சுதாவாசன்,நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர்களான கே.டி.ரோகிணி டப்ளியு.எம்.சுரேகா,சமாதான தொண்டர்களான டி.டிலக்சினி,ஜே.சங்கீத்,எல்.சிரோத்,ஏ.எம்.ஹசினி, எம்.எம்.எம்.அஹ்னாப்,உட்பட அம்பாரை மாவட்ட நல்லிணக்க இளைஞர் குழுக்களின் பிரதேச இணைப்பாளர்கள்,அம்பாரை மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
(எஸ்.எம்.எம்.றம்ஸான்) கல்முனை கல்வி வலயத்தில் வருடாந்த ஒளி விழா வலயக் கல்விப் பணிப்பாளர் சஹதுல் நஜீம் தலைமையில் அலுவலகத்தின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்முனை திரு இருதயர் நாதர் ஆலயத்தின் அருட்பணி தேவதாசன் ஆடிகளார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதோடு வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதி,உதவிக் கல்விப் பணிப்பாளர்கள்,உத்தியோத்தர்கள்,ஊழியர்கள் உட்பட பாடசாலை அதிபர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனரா.
இலங்கையின் பொருளாதாரத்தின் மிக முக்கிய வருடமான 2023ஆம் ஆண்டில், தமது பொறுப்புகளை எவரும் தட்டிக்கழிக்கக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். புதிய வருடத்தில் வளமான இலங்கைக்காக ஒன்றிணைந்து தம்மை அர்ப்பணிக்குமாறு அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். 2023 புத்தாண்டில் ஜனாதிபதி அலுவலக ஊழியர்களுடன் இணைந்து இன்று(திங்கட்கிழமை) காலை தமது கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்க முன்னர், தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதன்பின்னர் அனைத்து ஊழியர்களும் ஒன்றிணைந்து, அரச பணிக்கான சத்தியப் பிரமாணத்தை செய்துகொண்டனர். பின்னர் அனைத்து ஊழியர்களுடனும் ஜனாதிபதி, தேநீர் விருந்துபசாரத்தில் இணைந்து கொண்டார். ஜனாதிபதி பணிக்குழாமின் ஊழியர்களுக்கு, ஜனாதிபதி புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். புத்தாண்டில் பணிகளை ஆரம்பிக்க முன்னர் உரையாற்றிய ஜனாதிபதி, ”அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள், ஐந்தரை மாதங்களுக்கு முன்னர் இந்த அலுவலகத்தில் ஒரு வரலாற்றுப் பணியை நாங்கள்…
நாட்காட்டிகள் மற்றும் நாட்குறிப்புகளை அச்சிடுவது 90 வீதத்தால் குறைந்துள்ளதாக இலங்கை அச்சகத்தின் தலைவர் ஆரியதாச வீரமன் தெரிவித்துள்ளார். நாட்காட்டிகள், புத்தகங்கள் மற்றும் நாட்குறிப்புகள் அச்சிடுவது கனவாகிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். காகிதத்தின் விலை உயர்வால் புத்தகங்களை வெளியிடுவதும், பிற பொருட்களை அச்சிடுவதும் கனவாகி விட்டது. “அதிகாரிகள் நிலைமையில் கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும்,” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அலுவலக நேரத்தில் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் போது அரச ஊழியர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டு பொது நிர்வாக அமைச்சின் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். பெரும்பாலான அரச ஊழியர்கள் அலுவலகங்களில் பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருப்பதை அவதானிக்க முடிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டை குறைத்து, அலுவலக நேரங்களில் மக்களுக்கான சேவைகளை முன்னெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஸ்ட வைத்திய அதிகாரியும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதி செயலாளருமான பாலித ராஜபக்ஸ மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிராக, பதுளை பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் உள்ளிட்ட பணியாளர் குழாமினர் இன்று (2) அமைதிப்போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். நேற்று (1) தன்னுயிரை மாய்த்துக்கொண்ட யுவதி ஒருவர், பதுளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளதுடன், குறித்த யுவதியை வைத்தியசாலைக்கு தாமதித்து வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றதால் காப்பாற்ற முடியாமல் போனதாக வைத்தியர் தெரிவித்துள்ளார். இதன்போது வைத்தியசாலைக்குள் புகுந்த கும்பலொன்று அமைதியின்மையாக நடந்துக்கொண்டதுடன், தன்னை தாக்கியதாகவும் வைத்தியர் பாலித ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் வைத்தியரால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, தாக்குதலுடன் தொடர்புடைய மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பதுளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையில், வைத்தியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையை கண்டித்தே இந்த எதிர்ப்பு போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, ஜனாதிபதி செயலகத்தில் இன்று (02) காலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சிநேகபூர்வ கலந்துரையாடலின் போது கெமரூன், ஜனாதிபதிக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணைக்கு அனுமதி கிடைத்தால், நாட்டிலுள்ள அனைத்து மின்சார சபைக் கிளை அலுவலகங்களுக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். நாளை (03) நண்பகல் 12 மணிமுதல் இரண்டு மணிநேரம் இந்த போராட்டம் நடைபெறும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு முதல் சாரதி அனுமதிப் பத்திரத்தை புதுப்பிக்கும் ஒவ்வொரு சாரதிக்கும் கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய புதிய சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் குசலானி டி சில்வா தெரிவித்துள்ளார். தற்போது இலங்கையர்களுக்கு நான்கு வகையான சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுகின்றன. அந்த சாரதி அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்படும்போது, புதிய கியூ.ஆர். குறியிடப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கேட்டல் குறைபாடு உள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் இந்த வருடம் மார்ச் மாதத்தின் பின்னர் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.