தேசிய அடையாள அட்டைகளை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் அட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக 2005ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்தவர்களுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக திணைக்களத்தினால் சான்றளிக்கப்பட்ட ஆவணத்தை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார். இவ்வாறு வழங்கப்படும் ஆவணம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை செல்லுபடியாகும் வகையில் தயாரிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Author: admin
மின்சாரம் வழங்கல், எரிபொருள் விநியோகம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் என்பன தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன் இதுதொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, மின்சார வழங்கலுடன் தொடர்புடைய அனைத்து சேவைகளும், கனியவள உற்பத்திகள், எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம் என்பன தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக காணப்படுகின்றன. அத்துடன், வைத்தியசாலைகள், தாதியர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் அதுபோன்ற ஏனைய நிறுவனங்களில் நோயாளர்களின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, பாதுகாப்பு, போசாக்கூட்டல் மற்றும் சிகிச்சையளித்தல் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 47,353 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். கடந்த 1ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குறித்த சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில், அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்து வந்துள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 12,064 ஆகும். மேலும், இந்தியாவில் இருந்து 5,838 பேரும், ஜேர்மனியில் இருந்து 3,945 பேரும், பிரிட்டனில் இருந்து 3,862 பேரும், பிரான்சில் இருந்து 2,241 பேரும் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அத்துடன், இம்மாதம் 105,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
தேர்தல் செலவுகளுக்காக பணம் அச்சிடப்படாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கட்டம் கட்டமாக திறைசேரியினால் இதற்கான நிதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தலுக்காக பணத்தை அச்சிட முடியாது எனவும், கடன் மறுசீரமைப்பு மற்றும் அத்தியாவசிய கடன்களை மீள செலுத்தல் தவிர்ந்த வேறு எந்தவொரு காரணிக்காகவும் பணத்தை அச்சிட அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவே அராசங்கத்தின் கொள்கையாகும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் கொள்கை மீறப்பட்டால் இதனை விட பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த உள்ளூராட்சி தேர்தலுக்கு 8 பில்லியன் செலவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இம்முறை நாட்டு நிலைமைகளுக்கமைய இந்த செலவுகள் இரு மடங்காக அதிகரிக்கக் கூடும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஹபராதுவ பகுதியிலுள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர், அவரது மகன் மற்றும் ஹோட்டல் கணக்காளர் ஆகியோ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வெளிநாட்டு பிரஜையின் 6 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு பணத்தை திருடிய சம்பவம் தொடர்பில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஹோட்டலிலுள்ள பாதுகாப்பு பெட்டகத்தின் இரகசிய இலக்கத்தை பயன்படுத்தி, இந்த திருட்டு இடம்பெற்றுள்ளமை பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அரசாங்கத்தினால் 19 வாகனங்களும், உணவு, பானங்கள் உள்ளிட்ட செலவுகளுக்காக மாதாந்தம் 950,000 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி செயலகத்திற்கு ஊடகவியலாளர் ஒருவர் விடுத்த எழுத்துமூல கோரிக்கைக்கு அமைய இந்த தகவல் வழங்கப்பட்டுள்ளதாக நேற்று (17) நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தைக் கூட வழங்க முடியாத சூழ்நிலையில் இவ்வாறான செலவை மேற்கொள்வது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், நாட்டின் ஒட்டுமொத்த செலவீனங்களைப் பார்க்கும் போது இது ஒரு சிறிய செலவு மட்டுமே என்றார். மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், 1977ம் ஆண்டு முதல் அரசாங்கத்தின் செலவு வருமானத்தை விட அதிகமாக உள்ளது, அன்றாட செலவுகளுக்கு போதிய வருமானம் இல்லாத நாடாக நாம் வந்துள்ளோம். இந்த சிறிய செலவுகளைப் பார்க்கும் முன், பெரிய அளவிலான செலவுகளைப் பார்க்க வேண்டும். அதாவது அரசு ஊழியர் சம்பளம்,…
இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய நீல இரத்தின கல் விற்பனை செய்யப்படாமல் மீண்டும் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வா தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு இரத்தினபுரி பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 500 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள இந்த இரத்தினகல் சுவிட்சர்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் அதன் அங்கீகாரத்தைப் பெற்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த இரத்தின கல்லை எடுத்துச் சென்ற குழுவினரால் அதனை விற்க முடியாமல் போனதால் கடந்த வாரம் மீண்டும் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. ஒரு நல்ல ஒப்பந்தம் கிடைத்தவுடன் அதனை விற்போம் என்று குழு தெரிவித்துள்ளது. குழுவின் கூற்றுப்படி, அவர்கள் துபாயை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்துடன் பல கலந்துரையாடல்களை மேற்கொண்டனர், இரத்தின கல்லுக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க குறித்த நிறுவனம்…
கொழும்பு – குதிரை பந்தயத் திடலில் யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டமைக்கான காரணத்தை வெளியிட்ட பொலிஸார் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர். பல்கலைக்கழகத்தில் விரிவுரைகளை முடித்துக் கொண்டு இன்று காலை 11 மணியளவில் தனது காதலனுடன் பேசுவதற்காக குதிரை பந்தயத் திடாலை நோக்கி சென்றுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இவரது காதலனும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் இளைஞன் என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தின் போது குறித்த இளைஞன், குதிரை பந்தயத் திடாலுக்கு அருகே நடந்து செல்வது அருகிலுள்ள CCTV கமெராவில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கொழும்பு தெற்கிற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த மாரப்பனவின் மேற்பார்வையில் இடம்பெற்று வருகின்றன. உயிரிழந்த யுவதி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது காதலனிடம் உறவை முறித்துக் கொள்ளுமாறு யோசனை கூறியுள்ளார். எனினும், தனது காதலி வேறொருவருக்கு சொந்தமாகிவிடுவார் என எண்ணி கொலை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா மற்றும் சீனாவின் இணக்கப்பாட்டை பெற்றுக்கொள்வதற்காக நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மக்களுக்கு நிவாரணம் வழங்குவதன் மூலம் அவர்களை துன்பத்திலிருந்து விடுவிக்கும் புதிய அரசியல் முறைமையில் ஒற்றுமையுடன் கைகோர்க்குமாறு ஜனாதிபதி அனைத்து மக்கள் பிரதிநிதிகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மிகுந்த இக்கட்டான பொருளாதார பின்னணியின் மத்தியிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த வருடம் மருந்துகளுக்காக சுமார் 30 தொடக்கம் 40 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபைக்கு வழங்க வேண்டிய 108 பில்லியன் ரூபாவை வழங்கவில்லையாயின், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நடத்த முடியாத நிலை ஏற்படும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. குறைந்தபட்சம் தற்போது பெற்றுக்கொள்ளும் எரி எண்ணெய், நெப்டாவிற்கான கட்டணத்தையேனும் செலுத்த முன்வர வேண்டும் என கொழும்பில் நேற்று (17) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுசந்த சில்வா தெரிவித்துள்ளார்.