கடூழிய சிறைத் தண்டனைக்கு உட்பட்டவர்களை வைத்துள்ள புஸ்ஸ உயர்பாதுகாப்பு சிறைச்சாலைக்குள் இருந்து ஐந்து கைபேசிகள், கைபேசி சார்ஜர்கள் மற்றும் ஐந்து சிம்கார்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலை அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், சிறைச்சாலையின் விசேட பிரிவின் நுழைவாயிலுக்கு அருகாமையில் பூமிக்கு அடியில் புதையுண்டு காணப்பட்ட நிலையில் இந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக புஸ்ஸ சிறைச்சாலை அத்தியட்சகர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Author: admin
தேசிய ரீதியிலான பாடசாலைகளுக்கிடையிலான 5000 மீட்டர் ஓட்டப்போட்டியில் தேசிய ரீதியில் கிளிநொச்சி மாணவன் சாதைனை படைத்துள்ளார். இந்த போட்டி கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது. இந்த போட்டியில் கிளி/ முழங்காவில் தேசிய பாடசாலையின் மாணவன் சுமன் கீரன் தோற்றி முதலாவது இடத்தினை பெற்று, வரலாற்றில் முதன் முறையாக தேசிய மட்டத்தில் சாதனை படைத்துள்ளார். இந்த வீரன் அவரது வெற்றிக்கு உறுதுணையாய் உழைத்த பயிற்றுவிப்பாளர்களுக்கும், அவரது பெற்றோர்களுக்கும் கற்ற பாடசாலைக்கும் பெருமையை தேடி கொடுத்துள்ளார்.
கடந்த வருடத்தில் மாத்திரம் 14,547 சிறைக் கைதிகளும், 62,426 சந்தேக நபர்களும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள சிறைச்சாலைகள் திணைக்களம், அதில் 349 பட்டதாரிகளும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டியுள்ளது. நீதிமன்றங்களால் தண்டனை விதிக்கப்பட்ட அல்லது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் படிப்படியாக அதிகரித்துள்ளதாக திணைக்களத்தின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். மொத்தமாக 349 பட்டதாரிகளும் உயர்தரத்தில் சித்தியடைந்த 5,395 கைதிகளும் சாதாரண தரத்தில் சித்தியடைந்த 17,616 கைதிகளும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் சிறையில் உள்ள 2.2% பேர் பாடசாலைக்குச் செல்லவில்லை என்று புள்ளிவிவரங்கள் மூலம் அறிய முடிகிறது. கடந்த ஆண்டு 16 வயதுக்குட்பட்ட 87 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன், 70 வயதுக்கு மேற்பட்ட சிறைக் கைதிகள் 436 பேர் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எரிவாயு விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் உணவுப் பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படாது என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமைமா உள்ளிட்ட பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதால் உணவகங்களுக்கு ஓரளவு நிம்மதி கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எரிவாயு கோதுமை மா உள்ளிட்ட பொருட்களின் விலை குறைவினால் உணவுப் பொருட்களின் விலையை குறைக்குமாறு உணவக உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் 60 வீதமான உணவகங்கள் விலையை குறைக்கவில்லை என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் நியாமான விலையில் உணவக உரிமையாளர்கள் வழங்க வேண்டும் என்றும் அச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணிக்கு வரி அறவிடப்பட மாட்டாது என்று இலங்கை மத்திய வங்கி விளக்கம் அளித்துள்ளது. இலங்கையர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணிக்கு வரி அறவிடப்படபோவதாக, பரவி வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என மத்திய வங்கி கூறியுள்ளது. இதேபோன்று இந்த பணத்தை பலவந்தமாக இலங்கை நாணயத்திற்கு மாற்றப்பட மாட்டாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளில் உள்ள இலங்கை ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்படும் பல்வேறு சலுகைகளை எவ்வித மாற்றமும் இன்றி அதே முறையில் தொடர்ந்து அனுபவிக்க முடியும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் ருஹுணு தேசிய கல்வியியற் கல்லூரியின் 54 மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். ருஹுணு தேசிய கல்வியியற் கல்லூரிக்குள் அண்மைக்காலமாக ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பில் கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக கல்லூரி ஆணையாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்துள்ளார். இதன்படி, மாணவர்களின் ஒழுக்கத்தைப் பேணுவதற்கான அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சு உத்தரவுகளை வழங்கியது. இதனடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடைய 54 மாணவர்களை இடைநிறுத்துவதற்கு தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். ருஹுணு கல்வியியல் கல்லூரியால் நடத்தப்படும் ஒழுக்காற்று விசாரணைக்கு மேலதிகமாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையில் தனியான விசாரணையும் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரக் கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ளாவிட்டால், அடுத்த வருடத்தில் 6 மணித்தியால மின்சார விநியோகத் தடைக்கு செல்லவேண்டி ஏற்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. எரிசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். மின்சார அலகு ஒன்றுக்கான செலவு 56 ரூபா 90 சதமாக உள்ளபோதும், அதில் அரைவாசிக்கட்டணமே மின்சாரப் பாவனையாளர்களிடம் இருந்து அறிவிடப்படுகிறது. எனவே இந்த நட்டத்தை ஈடுசெய்ய முடியாதுபோனால், எதிர்காலத்தில் மின்சார உற்பத்தியை மேற்கொள்ளமுடியாத நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கான சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்ட வரைவு ஆசிரியருக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. அதற்கான சட்டமூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. அமைச்சரவைக் கூட்டத்தின் போது, வரைவுச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பி வைத்து, வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து அவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது. இதன்படி, பிரதமர் இது தொடர்பான ஆரம்ப சட்டமூலம் குறித்து கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடியதுடன், கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் அமைச்சரவையின் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முன்வைக்கப்பட்ட கருத்துக்களை கருத்திற்கொண்டு சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்ட வரைவு ஆசிரியருக்கு அறிவுறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
ஜப்பானின் ஆய்ச்சி மாகாணத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் வழக்கத்துக்கு மாறாக அதிக எண்ணிக்கையில் கோழிகள் இறந்துள்ளன. இதை தொடர்ந்து இறந்த கோழிகளை பரிசோதித்ததில் அவற்றில் பெரும்பாலானவை பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது. இது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆய்ச்சி மாகாணத்தில் 11 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பறவை காய்ச்சல் மேலும் பரவுவதை தடுக்கும் விதமாக மாகாணம் முழுவதிலும் சுமார் 3 இலட்சத்து 10 ஆயிரம் கோழிகளை அழிக்க அதிகாரிகள் முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர். இதே போல் கோஹிமா மாகாணத்திலும் பறவை காய்ச்சல் காரணமாக 34 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பானில் கடந்த ஒக்டோபர் மாத இறுதியில் இருந்து பறவை காய்ச்சல் பரவி வருவதும் இதுவரை 33 இலட்சம் கோழிகள் அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பாடசாலை மாணவர் ஒருவரின் ஊடாக ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்த நால்வர் ஹொரணை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடம் 13 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 120 மாத்திரைகள் இருந்ததாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் தொடர்பில் கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று (5) மில்லனிய மற்றும் பரகஸ்தோட்டை ஆகிய பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 18 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரின் ஊடாக இந்த போதைப்பொருட்களை மாணவர்களுக்கு விற்பனை செய்ததாக விசேட அதிரடிப்படையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மல்லனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.