எதிர்வரும் சில தினங்களில் நாட்டின் தென்பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை, தென், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இன்று (14) மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Author: admin
———————————- ( எம்.என்.எம்.அப்ராஸ்) மாணவர்களின் கற்றல் நடவடிக்கையினை மேம்படுத்தும் வகையில் அம்பாரை மாவட்டம் கல்முனை வலய கல்வி பிரிவில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் கல்வி கற்க்கும் வறுமை கோட்டின் கீழ் வாழும் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்காக இலவசமாக புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டது. கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் 2007 கல்விப் பொது தர சாதாரண தரம் 2010 கல்விப்பொது தர உயர் தரத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயம்,கல்முனை இராமகிருஸ்ண மிஷன் மகா வித்தியாலயம்,சாய்ந்தமருது ரியாழுள் ஜன்னா வித்தியாலயம், மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயம் என்பவற்றுக்கு மேற் குறித்த சாஹிரா தேசிய பாடசாலையில் 2007 க.பொ.த.சாதாரண தரம் 2010 க.பொ.த.உயர் தரத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து பாடசாலை அதிபர்களிடம் புத்தகப்பைகளை இன்று (13) வழங்கி வைத்தனர். நான்கு பாடசாலைகளுக்கும் மொத்தமாக 125 புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கோதுமை மாவின் மொத்த விலை குறைக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், 220 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோதுமை மா 200 முதல் 195 ரூபா வரை விற்பனை செய்யப்படவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.
இலங்கை இராணுவத்தில் உள்ள 200,783 வீரர்களின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டளவில் 135,000 ஆக குறைக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு வெள்ளிக்கிழமை (13) தெரிவித்துள்ளது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோனை மேற்கோள்காட்டி, பாதுகாப்பு அமைச்சு இதை தெரிவித்துள்ளது. மேலும், 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டில் இராணுவ பலம் 100,000 ஆக இருக்கும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்வெட்டு எவ்வாறு அமுல்படுத்தப்படும் என்பது தொடர்பான அறிவிப்பை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கமைய சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நாட்களில் மதியம் ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் எனவும், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடம் மின்சாரம் துண்டிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கை சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கும், தமிழில் ஒருவர் உரையாற்றுவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்கான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது தமிழில் உரையாற்றுவதற்கான அழைப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்னிடம் விடுத்திருந்தார். நான் அதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில் தமிழில் தேசிய கீதம் பாடப்படுமானால் தமிழில் உரையாற்றுவேன் என ஜனாதிபதியிடம் தெரிவித்தேன். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
காட்டு யானைகள் மோதியதால் நகரங்களுக்கிடையிலான கடுகதி புகையிரத ஒன்று தடம் புரண்டுள்ளது. ஹபரணை ஹதரச்கொட்டுவ பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த அதிகாலை இடம்பெற்ற விபத்து காரணமாக, கிழக்கு மாகாணத்திற்காக புகையிரத சேவைகள் தாமதமாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை தடங்கலின்றி பெற்றுக்கொடுக்க முடியும் என திறைசேரி அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உறுதிப்படுத்தியுள்ளனர். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்ள முடியாது என வௌியாகின்ற கருத்துகள் தொடர்பில் திறைசேரி அதிகாரிகளை நேற்று அழைத்து தேர்தல்கள் ஆணைக்குழு வினவியுள்ளது. தேர்தல் என்பது அரசியலமைப்பு சார்ந்த விடயம் என்பதால், அதற்கு தேவையான நிதி எவ்வித தடையும் இன்றி பெற்றுக்கொடுக்கப்படும் என இதன்போது திறைசேரி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள், தேர்தல்கள் ஆணையாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைமை நிதி அதிகாரி ஆகியோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, இன்று காலை சிறுப்பிட்டி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. வேகக் கட்டுப்பாட்டை இழந்த குறித்த பேருந்து சிறுப்பிட்டி பகுதியில் உள்ள வாகனம் திருத்தும் நிலையத்துக்குள் சென்று மோதி விபத்துக்குள்ளாக்கி உள்ளது. இதனால் வாகனத்தின் முன்பக்கம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பான விரிவான விசாரணைகளை அச்சுவேலி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் அலபாமாவை புரட்டி போட்ட சூறாவளியால் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். தெற்கு அமெரிக்கா முழுவதும் 35க்கும் மேற்பட்ட சூறாவளிகளை தேசிய வானிலை சேவைகள் பதிவுசெய்துள்ளது. இது 30 மில்லியனுக்கும் அதிகமான மக்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. புயல் காரணமாக நான்கு மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மின்தடையை எதிர்கொண்டுள்ளனர். அலபாமா, ஜோர்ஜியா, டென்னசி மற்றும் கரோலினாஸில் 147,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வியாழன் மாலை வரை மின்சாரம் இல்லாமல் இருந்தனர். அலபாமாவில் பதிவான சூறாவளி இறப்புகள் அனைத்தும் மாநிலத்தின் மையத்தில் உள்ள மாண்ட்கோமெரி மற்றும் செல்மா நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள ஆட்டோகா கவுண்டியில் நிகழ்ந்தன. இதனைத்தொடர்ந்து, அலபாமா மற்றும் ஜோர்ஜியாவின் ஆளுநர்கள் ஒவ்வொருவரும் அவசரகால அறிவிப்புகளில் கையெழுத்திட்டுள்ளனர்.