இலங்கையில் உள்ள வயது வந்தவர்களில் நான்கில் ஒருவருக்கு (23%) நீரிழிவு நோய் உள்ளதுடன், மூவரில் ஒருவருக்கு (31%) உயர் இரத்த சர்க்கரை அளவு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில இலங்கை பல்கலைக்கழகங்கள், அவர் கொழும்பில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (MRI)மற்றும் சுகாதாரக் கொள்கைக்கான நிறுவனம் (IHP) என்பன இணைந்து 2019ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
Author: admin
கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. போதுமான அளவு ஆசிரியர்கள் விண்ணப்பிக்காமை காரணமாக விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்காக வழங்கப்படும் கொடுப்பனவு தொடர்பான சிக்கல் இதற்கு காரணமாகியுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படு வதற்கான காரணம் அரசாங்கத்தின் மீது அதிகரித்து வரும் பொதுமக்களின் அதிருப்தியாக இருந்தால், தேர்தலை எதிர்கொண்டு அதன் முடிவுகளுக்கு ஏற்ப மாற வேண்டும் என்று கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்தார். பேராயர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் சிறில் காமினி பெர்னாண்டோ மேற்குறிப்பிட்ட கர்தினாலின் விசேட அறிவிப்பை வெளியிட்டார். தம்மை தோல்விக்கு பயந்த கோழையாக வரலாற்றில் இடம் பெறுவதை தவிர்க்கும் புத்திசாலித்தனம் நமது நாட்டின் தலைவர்களுக்கு இருப்பதாக தான் எண்ணுவதாகவும் பேராயர் விசேட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஒத்திவைக்கப்படுவது இறுதியில் நாட்டை சர்வாதிகார ஆட்சிக்குள் தள்ளும் என்றும் கர்தினால் அறிவித்துள்ளார்.
உக்ரைனில் கடந்த பெப்ரவரி மாதம் தொடங்கிய போரில் இருந்து கிட்டத்தட்ட 19,000 பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகத்தின் சமீபத்திய அறிக்கை இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதில் 7,199 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 11,756 பேர் காயமடைந்தனர். கனரக பீரங்கிகளின் ஷெல் தாக்குதல்கள், பல ஏவுகணை ரொக்கெட் அமைப்புகள், ஏவுகணைகள் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் உட்பட வெடிக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்தியதால் பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
மேல் நீதிமன்ற நீதிபதிகளின் மாதாந்த சம்பளத்தில் இருந்து தனிநபர் வருமான வரிகள் அறவிடுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை பெப்ரவரி 24 ஆம் திகதி வரை நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம், செவ்வாய்க்கிழமை (21) உத்தரவிட்டது.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பதவிக்காக 50 பேரை புதிதாக பயிற்சிக்கு இணைத்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அண்மையில் இரத்மலானை சிவில் விமானப் பயிற்சிப் பாடசாலைக்கு விஜயம் செய்த போதே அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கை தாக்கல் செய்ய உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மின்சாரக் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்த 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கான விண்ணப்பங்களை எதிர்பார்த்த எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் சமர்ப்பிக்காதமை குறித்தும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். விடைத்தாள்கள் திருத்தும் பணிக்காக வழங்கப்படும் நாளாந்த கொடுப்பனவு போதுமானதாக இல்லை என ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். விடைத்தாள்கள் திருத்தும் ஆசிரியர்களின் நாளாந்த கொடுப்பனவை 3,000 ரூபாயாக அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சர் அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றிருந்தார். இருப்பினும் அது தொடர்பான சுற்றறிக்கை இன்னும் வெளியிடப்படாத காரணத்தால் தற்போது 500 ரூபாய் வழங்கப்படுகின்றது என ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
நான்காயிரத்து எண்ணூறு அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரச சேவை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக சுமார் பத்தாயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதுடன், இது தொடர்பான நேர்காணல்களை இந்த வாரம் முதல் ஆரம்பிக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதிக்குமாறு கல்வி அமைச்சு விடுத்த கோரிக்கைக்கு பதிலளிப்பதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டதால், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தில் ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து அரச சேவை ஆணைக்குழு தற்போது அனுமதி வழங்கியுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பழங்களின் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில் சந்தையில் அதிகரித்துள்ள அப்பிள், ஒரேஞ்ச் உள்ளிட்ட பல வகையான பழங்களின் விலைகள் குறைந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், உள்ளூர் வியாபாரிகள் வழங்கும் வாழைப்பழம், பப்பாளி, அன்னாசி போன்ற பழங்களின் விலை மேலும் அதிகரித்து வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.