யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் , யாழ்.இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்கள் வெடி குண்டு ஒன்றினை நேற்றிரவு வீசியுள்ளனர். குறித்த வெடி குண்டு வாகன திருத்தகத்தில் நின்ற கார் ஒன்றின் மீது விழுந்து வெடித்துள்ளது. அதனால் காரில் சிறு சேதம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். குறித்த வெடி குண்டு உள்ளூர் தயாரிப்பாக இருக்கலாம் என்றும் , அது பெரியளவிலான சேதங்களை விளைவிக்க கூடியவாறு காணப்படவில்லை எனவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் அடிப்படையில் தெரிய வருகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Author: admin
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. தம்புள்ளைக்கு அருகில் நேற்றிரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் டிப்பர் வாகன சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸின் சாரதி உள்ளிட்ட 10 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த பேருந்து கிளிநொச்சி டிப்போக்குச் சொந்தமானது என்று தெரியவந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியில் 50 இலட்சம் ரூபா திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களைக் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெகுணாவெல கோட்டை பொலிஸாருக்கு இது குறித்து உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், நீதிமன்றத்துக்கு இந்த விவகாரம் தொடர்பில் கோட்டை பொலிஸார் சமர்ப்பித்த அறிக்கையை கவனத்தில் எடுத்துக் கொண்ட நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மத்திய வங்கியின் உயர்பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த பணம் திருடப்பட்டமை தொடர்பில் ஏற்கனவே திணைக்களத்தின் பல அதிகாரிகளிடம் வாக்குமூலங்களை பதிவு செய்து வருவதாகவும் கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
சப்ரகமுவ, மேல், மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசாங்க கணக்குகள் பற்றிய கோபா குழு பொலிஸ் திணைக்களத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. ஏப்ரல் 25ஆம் திகதி கோபா குழு முன் ஆஜராகுமாறு அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல நாடுகளில் வேலை வாய்ப்புகள் இலங்கை தொழிலாளர்களுக்கு பாரிய அளவில் திறக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஜப்பானில் தாதியர் வேலை வாய்ப்புகள், இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஹோட்டல் துறையில் வேலை வாய்ப்புகள், ஐரோப்பிய நாடுகளில் தாதியர் வேலை வாய்ப்புகள், சவுதி அரேபியாவில் கட்டுமானத் துறையில் வேலை வாய்ப்புகள் இலங்கை தொழிலாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். இன்று (18) காலை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தொழில் பயிற்சி அதிகார சபைக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார். இந்த தொழில் தேவையை பூர்த்தி செய்ய பயிற்சி பெற்ற தொழிலாளர்களை வழங்க முடியவில்லை என்றும் அமைச்சர் இதன்போது கவலை வெளியிட்டார். இந்த ஒப்பந்தம் மூலம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையானது வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்குத் தேவையான திறன்களைக் கொண்ட…
விடைத்தாள்களை சரிபார்ப்பதற்கு பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூடிய விரைவில் வருவார்கள் என நம்புவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவர் மேலும் கூறியதாவது, தற்போது பேராசிரியர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிக்கான கொடுப்பனவு 90% க்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் சங்கங்களுடன் ஆலோசித்து, 2 மாதங்களுக்கு முன், உதவித்தொகையை உயர்த்தி, கூட்டு உதவித்தொகையை, 2,000 ரூபா உயர்த்தினோம். 80 கிலோமீற்றருக்கு மேல் பயணிப்பவர்களுக்கு, 2,900 ரூபாவை உயர்த்தினோம். .இதன்படி கொடுப்பனவுகள் 90 வீதத்திற்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.
ஏப்ரல் மாதத்தில் இதுவரை 56,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களில் 56,402 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில், இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்ததாக தெரிவித்துள்ளது. இதன்படி, இதுவரை மொத்தம் 9,554 இந்தியர்கள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.
முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை நாளை (19) பயங்கரவாத விசாரணைப் பிரிவில் (TID) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இடம்பெற்ற சதித்திட்டம் குறித்த அவரது சர்ச்சைக்குரிய அறிக்கை தொடர்பான தகவல்களை பதிவு செய்வதற்காகவே அவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன் அழைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்முறையின் முன்மொழியப்பட்ட வரைபடத்திற்கும் கால அட்டவணைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். அதன்படி, மே மாத இறுதிக்குள் புதிய மின்சார சட்டத்தின் இறுதி வரைவு பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என மேலும் தெரிவித்துள்ளார். மேலும், மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒருங்கிணைப்பு பணியகத்தை நிறுவுவதற்கும், செயல்முறை மற்றும் மறுசீரமைப்புத் திட்டத்திற்காக ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி, USAID மற்றும் JICA போன்ற மேம்பாட்டு நிறுவனங்களின் ஆதரவைப் பெறுவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.