அத்துருகிரிய துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட பழுதினால் அத்துருகிரிய மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மின் விநியோகத்தை சீரமைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
Author: admin
12 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, புத்தளம், குருநாகல், கண்டி, கம்பஹா, கேகாலை, நுவரெலியா, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலைப்பாங்கான பகுதிகளிலும் சரிவுகளிலும் உள்ள வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மின்னல், மண்சரிவு போன்றவற்றால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் ஆலோசனைகள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும், அவசர உதவிகளுக்காக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டின் 15 மாவட்டங்களுக்குட்பட்ட 55 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்கள் இவ்வாறு டெங்கு அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், குருணாகலை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களும் டெங்கு அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மேல் மாகாணத்தின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி, கடந்த 26 ஆம் திகதி முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 2 ஆம் திகதி வரை இந்த விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
பண்டிகைக் காலத்திலும், அதன் பின்னரும் நாடளாவிய ரீதியில் வர்த்தக நிலையங்களில் சுமார் 2500இற்கும் அதிகமான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 25ஆம் திகதி முதல் இந்த மாதம் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது, வர்த்தக நிலையங்களில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டமை, விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படாமை, அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சீன உதவியுடன் கொழும்பில் வசதி குறைந்தவர்களுக்கான புதிய வீடமைப்புத் திட்டத்தை நிர்மாணிப்பதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கு சீனாவினால் 450 மில்லியன் டாலர்கள் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பில் 05 இடங்களில் இந்த வீடுகள் கட்டப்படவுள்ளதாக நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சசின் செயலாளர், டபிள்யூ. எஸ். சத்யானந்தா குறிப்பிட்டார். இதன் கீழ் 1,995 வீடுகள் கட்டப்படவுள்ளதுடன், அடுத்த இரண்டு வருடங்களுக்குள் இத்திட்டம் நிறைவடையும் என அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 12.9 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. குறுக்கு நாணய மாற்று விகித நகர்வுகளின் அடிப்படையில், இந்த காலகட்டத்தில் ஜப்பானிய யெனுக்கு நிகராக இலங்கை ரூபாய் 14.2 சதவீதம் உயர்ந்துள்ளது. பவுண்ட் ஸ்டெர்லிங்கிற்கு நிகராக 8.8 சதவீதமும், யூரோவுக்கு நிகராக 9.1 சதவீதமும், இந்திய ரூபாயிக்கு நிகராக 11.4 சதவீதமும் இலங்கை ரூபாய் அதிகரித்தது.
இம்மாத ஆரம்பத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டது. அதன்படி 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு 1005 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 3738 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது. 05 கிலோ கிராம் சமையல் எரிவாயு 402 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 1,502 ரூபா என நிர்ணயிக்கப்பட்டது. 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு 183 ரூபாவினால் குறைக்கப்பட்டு தற்போது அது 700 ரூபாயாக நிலவுகிறது. இம்மாதம் 5ஆம் திகதி மீண்டும் எரிவாயுவுக்கான விலைசூத்திரம் அமுலாக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன்போது உலக சந்தையில் நிலவுகின்ற விலை நிலவரங்கள் கருத்திற் கொள்ளப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இது குறித்த மேலதிக விபரங்களும், ஏனைய முக்கியமான பல செய்திகளும் அடங்கிய காணொளி கீழே தரப்பட்டுள்ளது. இப்போதும் 13 லட்சம் கொடுப்பனவு பெறும் கோட்டாபய ராஜபக்ச | எரிபொருள், எரிவாயு விலைகள் மாறும்.
மே மாத இறுதிக்குள் கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை நிறைவு செய்ய தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அந்த மாணவர்களுக்காக கல்வியமைச்சு வழங்கும் 5,000 ரூபா கொடுப்பனவு மற்றும் தொழில்களைப் பெற்றுக் கொண்ட பின்னர் மீளச் செலுத்தும் அடிப்படையில் வங்கிகள் மூலம் வழங்கப்படும் 15,000 ரூபா கடனையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று சபையில் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தற்போது ஆசிரியர் கல்விச் சேவையில் நூற்றுக்கு நாற்பது வீதமானோரே உள்ள நிலையில் அதற்குத் தேவையான தரப்பினரை நியமிப்பதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், மேற்படி மாணவர்களுக்கு கடந்த ஜனவரி மாதத்திற்குள் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டன க.பொ.த உயர்தரப் பரீட்சையில்…
தொடர்ந்து நான்காவது மாதமாக 100,000 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர். ஜனவரியில் மொத்தம் 102,545 சுற்றுலாப் பயணிகளும், பெப்ரவரியில் 107,639 மார்ச் மாதம் 125,495 வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இதேவேளை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, ஏப்ரல் மாதத்தில் இதுவரை 87,316 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர் இதற்கிடையில், ஏப்ரல் மாதத்தில், இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்ததாக SLTDA தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் 125,495 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததாக SLTDA தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை 422,995 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.
பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். (வளிமண்டலவியல் திணைக்களம்)