2023 ஆண்டு சிறுபோகத்திற்கு தேவையான யூரியா உரத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார். அதன்படி, 25 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு இவ்வாறு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
Author: admin
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் இந்த வாரம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர நேற்று (15) தெரிவித்தார். ஏதேனும் ஒரு காரணத்தினால் பாடசாலை அல்லது தனியார் பரீட்சார்த்திகள் அனுமதிச் அட்டையை பெறவில்லையென்றால், திணைக்களத்தின் இணையத்தளத்தில் அனுமதி அட்டையைப் பதிவிறக்கம் செய்வதற்கு வசதி செய்து தருவதாக பரீட்சை ஆணையாளர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நபர் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டு , யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். நாவாந்துறை பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொலிஸாரிடம் மக்களால் ஒப்படைக்கப்பட்ட நபரை பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனினும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கதிர்காமம் – லுனுகம்வெஹேர பகுதியில் சிறு அளவிலான நில அதிர்வொன்று பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவிக்கின்றது. இந்த நிலஅதிர்வு நேற்றிரவு 10.24 அளவில் பதிவாகியுள்ளது. 2.5 ரிக்டர் அளவில் இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாகவும் பணியகம் குறிப்பிடுகின்றது. இந்த நில அதிர்வினால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை. நாட்டின் தென் பகுதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான நில அதிர்வுகள் பதிவிகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்றுவீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். (வளிமண்டலவியல் தினைக்களம்)
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் ஆசிரியர்களுக்கு 5,000 ரூபாய் முற்கொடுப்பனவு வழங்காமையால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விடைத்தாள்களை மதிப்பிடும் 13 மத்திய நிலையங்களில் கடமையாற்றும் ஆசிரியர்கள், விடைத்தாள் மதிப்பீடு பணியில் இருந்து இன்று (15) சில மணிநேரம் விலகியிருந்தனர் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலை இந்த வருடத்துக்குள் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குறித்த தேர்தலை நடத்துவதில் அரசியலமைப்பில் உள்ள சிக்கல் தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ஒருவர் தமது பதவி காலம் நிறைவடைவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல தற்போதைய அரசியலமைப்பு திருத்தத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது. எனினும், மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதி ஒருவருக்கு அத்தகைய அதிகாரம் அரசியலமைப்பில் இல்லை என சில கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சூழலில் அது குறித்து தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. எனவே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எஞ்சிய பதவிக் காலத்தை நிறைவு செய்ய நியமிக்கப்பட்டுள்ள தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஜனாதிபதித் தேர்தலுக்கு செல்லும் அதிகாரத்தை வழங்கும் வகையில், அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்திற்கு முழு ஆதரவை வழங்குவதாக உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஸ்வரன் ஐயர் தெரிவித்துள்ளார். நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் இன்று (15) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். இலங்கையில் நலன்புரி நலத்திட்டம் பற்றி விரிவாக விவாதித்த உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர், இலங்கையின் அர்ப்பணிப்பைப் பாராட்டினார். இந்தியாவில் நலன்புரி திட்டங்களின் அனுபவத்தை பகிர்ந்துக் கொண்ட ஐயர், இலங்கையின் நலன்புரி செயல்பாட்டிற்கான தனது பாராட்டையும் தெரிவித்தார்.
கனடாவிற்கு மாணவர் விசாவிற்கு விண்ணப்பிப்பதற்காக கட்டணங்களை அறவிட்டு தனி நபர் ஒவ்வொருவரிடம் இருந்து கிட்டதட்ட 14 லட்சம் ரூபா பெற்றுகொள்ளப்பட்டு மோசடியில் ஈடுபட்ட நிறுவனம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள நிறுவனம் ஒன்றிலே இந்த மோசடி இடம்பெற்றுள்ளது. சுமார் 500ற்கும் மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி பற்றிய கணிப்பினை சர்வதேச நாணய நிதியம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, 2023ல் இலங்கையின் பொருளாதாரம் சுமார் 3% வீழ்ச்சியடையும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் 2024 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் சுமார் 1.5 வீதத்தால் வளர்ச்சியடைய முடியும் என சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் கொழும்பில் இன்று நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கையின் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் நிறைவடையும் என அவர் மேலும் தெரிவித்தார். இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான முதலாவது மீளாய்வு செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ளது.