மத ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பல்வேறு தரப்பினரால் மேற்கொள்ளப்படும் அறிக்கைகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக அண்மையில் பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மத தகராறுகளை ஏற்படுத்தி நாட்டில் அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்க நினைக்கும் பல்வேறு நோக்கங்களைக் கொண்ட குழுக்கள் மீது பாதுகாப்பு அமைச்சு கவனம் செலுத்தியிருப்பதை இது காட்டுகிறது. தற்போதைய நிலைமை குறித்து கருத்து தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், கடந்த காலத்தில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பல்வேறு குழுக்கள் முயற்சித்து வரும் போது, நாட்டில் மற்றுமொரு நெருக்கடியை ஏற்படுத்த பல்வேறு குழுக்கள் முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளார். எனவே, எந்தவொரு தனிநபரோ அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட குழுவோ இவ்வாறு குறுகிய நோக்கத்துடன் செயற்பட முற்பட்டால், அரசியலமைப்பின் 9வது அத்தியாயம் மற்றும் தண்டனைச் சட்டம் 291 (ஏ), (பி) ஆகியவற்றின் பிரகாரம் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த தயங்கமாட்டோம் என இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
Author: admin
இலங்கையில் இஸ்ரேல் ஏர்லைன்ஸ் மற்றும் ஆர்க்கியா (Arkia) ஏர்லைன்ஸ் ஆகிய விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், விமான நிறுவனம் பொதுவாக இரண்டு ஆயுதம் தாங்கிய காவலர்களுடன் பயணிப்பதால், இதற்கு முன்னர் இலங்கையில் விமான சேவைக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எவ்வாறாயினும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விமான சேவையை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. அத்துடன் ஆர்க்கியா எயார்லைன்ஸ் இலங்கைக்கு நேரடி விமான சேவையை மேற்கொள்ளும். இதேவேளை இஸ்ரேலில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இடைநிறுத்தப்பட்ட இலகுரக ரயில் திட்டத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடலை ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்திற்கு முன்னதாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இன்று (30) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார். இலங்கைக்கு சர்வதேச அளவில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கலவான – கொடிப்பிலிகந்த பிரதேசத்தில் பாடசாலை பதில் அதிபர் மற்றும் நடன ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் நேற்று மாலை பாடசாலையின் கழிவறையில் வைத்து இரு சிறுவர்களை கடுமையான பாலியல் வன்புணர்விற்கு உட்டுத்தியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 12 வயதுடைய இரண்டு சிறுவர்களே சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பில், பிள்ளைகள் பெற்றோருக்கு அறிவித்ததன் பிரகாரம், பிள்ளைகளுடன் வந்த பெற்றோர்கள் கலவானை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட பதில் அதிபரும், ஆசிரியரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
வடமேல் மாகாணத்தில் உள்ள கால்நடைகளுக்கு வைரஸ் நோய் பரவி வருவதால், அந்த பகுதிகளில் விற்பனை செய்யப்படும் மாட்டிறைச்சியை உட்கொள்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது. வடமேல் மாகாணத்தில் கால்நடைகளுக்கு ‘லம்பி ஸ்கின் நோய்’ எனப்படும் தொற்று நோய் பரவுவதை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மறு அறிவித்தல் வரை வடமேல் மாகாணத்திலிருந்து கால்நடைகளை வெளியிடங்களுக்கு கொண்டு செல்வதையும் வெளியிடங்களில் இருந்து வடமேல் மாகாணத்திற்கு கொண்டு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கிளிநொச்சியிலும் இவ்வாறு கால்நடைகளுக்கு குறித்த தோல் நோய் பரவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட இலங்கையர்கள் சிலர் புதுடில்லி விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இந்திய குடிவரவு குடியகல்வு துறை அதிகாரிகளை ஏமாற்றி இலங்கையர்களை புதுடில்லி விமானநிலையத்தின் ஊடாக கனடாவிற்கு அனுப்ப முயன்ற முகவர்களுடன் தொடர்புவைத்திருந்த இலங்கையர்கள் புதுடில்லியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சென்னையில் வசிக்கும் மகேந்திரராஜா என்ற இலங்கையை சேர்ந்த முகவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார் என இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுங்க நடவடிக்கைக்கு ஏற்புடைய ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புக்களை பலப்படுத்துதல், ஊக்குவித்தல் மற்றும் இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு மற்றும் தொடர்பாடலை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கும் இடையிலான சுங்க நடவடிக்கைகள் தொடர்பான ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இந்த வரைவுக்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீன வெளிவிவகார பிரதி அமைச்சர் சன் வெய்டாங் உள்ளிட்ட குழுவொன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இவர் இலங்கையின் வெளிவிவகார செயலாளருடன் இரு நாடுகளுக்கும் இடையிலான 12ஆவது சுற்று இராஜதந்திர ஆலோசனைகளுக்கு இணைத் தலைமை தாங்குவதற்காகவே இலங்கை வந்துள்ளார்.
கம்பளை, பொத்தலபிட்டிய பிரதேசத்தில் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கம்பளை கஹடபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவவே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். எனினும் சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தையில் கோழி இறைச்சி, மீன் மற்றும் முட்டை ஆகியவற்றின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். 1000 முதல் 1100 ரூபாய் வரை இருந்த கோழி இறைச்சியின் விலை திடீரென 1500 முதல் 1600 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். சந்தையில் மீன் விலையும் அதிகரித்துள்ளது. பேலியகொடை மீன் சந்தையில் கெலவல்ல 1900 ரூபாவிற்கும் பார 1700 ரூபாவிற்கும் தலபத் 2700 ரூபாவிற்கும் சாலயா 400 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலைகளுடன் ஒப்பிடுகையில், பொதுச் சந்தையில் மீன்களின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதேவேளை, முட்டைக்கான விலையை அரசாங்கம் நிர்ணயம் செய்த போதிலும், இன்னும் 53 ரூபா தொடக்கம் 55 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையிலேயே முட்டை விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.