தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுல்ல பிரதேச சபை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற கொண்டாட்ட நிகழ்வின் போது, மரணக் கிணற்றின் படியில் இருந்து தவறி விழுந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை பலத்த காயங்களுடன் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (21) காலை உயிரிழந்துள்ளது. கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு வயது 11 மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. மரணக் கிணற்றின் உரிமையாளரின் லொறி சாரதியின் குழந்தையே இவ்வாறு படிக்கட்டில் ஏறும் போது கீழே விழுந்தது. நிகழ்ச்சிக்கு முன்னதாக மரணக் கிணற்றின் பாதுகாப்பு மற்றும் அலங்காரத்திற்காக குழந்தையின் தந்தை வந்திருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Author: admin
இலங்கையில் காச நோயினால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் காச நோயினால் பாதிக்கப்பட்ட 59 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது. கடந்த ஆண்டின் முதலாம் காலாண்டில் 49 சிறுவர்களே காசநோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் இனம்காணப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மொத்தமாக 187 சிறுவர்கள் காசநோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டில் கண்டறியப்பட்டிருந்தனர்.
யாழ்.மாவட்டத்தில் பயிரிடப்படும் புளிப்பு வாழைப்பழங்களை வாரம் ஒருமுறை துபாய்க்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் யாழ்ப்பாண விவசாயிகள் ஒரு இலட்சம் டொலர்களை சம்பாதித்துள்ளதாக தெரியவந்துள்ளது. வடமாகாண அதிகாரிகளுடனான விவசாயத் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போதே இது தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மூன்று வருடங்களில் வருமானத்தை ஐந்து இலட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக வடமாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன குறிப்பிடுகின்றார். மேலும், வடமாகாணத்தில் 8000 ஏக்கர் காணிகளை இனங்கண்டு இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மாகாண ஆளுநரிடமிருந்து பணிப்புரைகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். மாம்பழம், பப்பாளி, பாசிப்பழம் போன்றவற்றை வெளிநாட்டு சந்தைகளுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும், மாகாணத்தின் மிளகாய்த் தேவையை பூர்த்தி செய்ய 1000 ஏக்கரில் மிளகாய் பயிரிடப்பட்டு வருவதாகவும் தெரியவந்தது.
நாட்டின் பிரதான அரசாங்க வைத்தியசாலையான காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சுமார் 100 வைத்தியர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையால் நோயாளர் பராமரிப்பு சேவைகளை பராமரிப்பதில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு 556 வைத்தியர்கள் தேவைப்படுகின்ற போதிலும் தற்போது 460 வைத்தியர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைத்தியர்களின் தட்டுப்பாட்டினால் வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சத்திரசிகிச்சை அறை மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் யு.எம். ரங்கவிடம் வினவியபோது; தற்போது சுமார் 100 வைத்தியர்கள் தட்டுப்பாடு உள்ளதாகவும், சுகாதார அமைச்சு போதிய வைத்தியர்களை வழங்காத காரணத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் கோரிய எண்ணிக்கையிலான மருத்துவர்களை அமைச்சகம் இதுவரை வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், இதன்போது முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கின்ற வட மாகாணத்துக்கான விசேட தேவை உடையவர்களுக்கான வைத்தியசாலையை திறந்து வைக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். முல்லைத்தீவு மாவட்டத்தில் விசேட நடமாடும் சேவை ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலமாக முல்லைத்தீவு மக்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்க உள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
பண்டாரகம பகுதியில் இன்று காலை இரணுவத்தினர் பயணித்த பஸ்ஸில் ஸ்கூட்டர் ஒன்று மோதியதில் ஸ்கூட்டரில் பயணித்த 3 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். ரைகம கலகட வீதி பகுதியைச் சேர்ந்த இசதி தெனெத்மா சபுகே என்ற மூன்று வயது சிறுமியே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார். பண்டாரகம கூட்டுறவுச் சங்கத்தின் பிரதான காரியாலயத்தின் கணக்காளரான உயிரிழந்த சிறுமியின் தாயார், சிறுமியுடன் ஸ்கூட்டரில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது, பண்டாரகம கூட்டுறவுச் சங்க அலுவலகத்திற்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் களுத்துறையில் இருந்து இராணுவத் தலைமையகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் பண்டாரகமவில் இருந்து கெஸ்பேவ நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இவ் விபத்தில் படுகாயமடைந்த சிறுமியையும் அவரது தாயையும் உடனடியாகச் பண்டாரகம மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாகவும், சிறுமி ஏற்கனவே…
விவாகரத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் வைத்து நேற்றைய தினம் (21.06.2023) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், நவீன சமூகத்தினரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. நபர் ஒருவர் தனது மனைவி மற்றவர்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டிருப்பதைக் கண்டறியும் போது, விவாகரத்துக்கு அழைப்பு விடுக்க இலங்கைச் சட்டங்களில் ஏற்பாடுகள் இல்லை. எனவே விவாகரத்து தொடர்பான சட்டங்களையும் மாற்றியமைக்க நாம் திட்டமிட்டுள்ளோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலை பதிவு செய்வதற்கான இறுதித் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்வதற்கான கால அவகாசம் கடந்த 16 ஆம் திகதி வரை வழங்கப்பட்டிருந்தது.
இலங்கையில் வெகுவிரைவில் 600 மெகாவோட் சக்தி அளவைக்கொண்ட திரவ எரிபொருள் நிலையமொன்று நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்திய எரிசக்தி நிறுவனமான Petronet LNG நிறுவனம், மின்சார சபையின் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) தேவையை பூர்த்தி செய்யக்கூடிய விரைவான குறுகிய கால திட்டத்திற்கான திட்டத்தை சமர்ப்பித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். திரவ இயற்கை எரிவாயு மின் உற்பத்தியின் நீண்டகாலத் தேவை நிறைவடையும் வரை, அடுத்த 24 மாதங்களுக்கு திரவ இயற்கை எரிவாயு மூலம் 600 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தியைத் தொடங்குவதன் மூலம் மின்சார வாரியம் செலவைக் குறைக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார். இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்திய உயர் ஸ்தானிகராலயம், மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு, மின்சார சபை, பெட்ரோலிய மேம்பாட்டு ஆணைக்குழு மற்றும் பெட்ரோநெட் எல்என்ஜி நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகள் இது தொடர்பாக மின்சக்தி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
தற்போதுள்ள கட்டுப்பாட்டு விலையை விட குறைந்த விலையில் அரிசியை வழங்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (21) நடைபெற்ற “நிலையான நாட்டிற்கு ஒரு வழி” செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு விவசாய அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்ற காலத்தின் அரிசி விலைக்கும் தற்போதைய அரிசியின் விலைக்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுவதாகத் தெரிவித்த அமைச்சர், தற்போது ஒரு கிலோ வெள்ளை அரிசியை 125 முதல் 130 ரூபா வரை கொள்வனவு செய்ய சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். நெல் கொள்வனவு செய்வதற்கு போதியளவு பணம் திறைசேரியில் இருந்து வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைவாக ‘சிறுபோக பருவத்தில் நெல் அறுவடையை கொள்வனவு செய்வதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். வனவிலங்குகளினால் விவசாயத்திற்கு ஏற்படும் சேதங்களும் மிகப் பெரியது எனவும், அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.